Translate

Friday, 1 February 2013

விட்டலன் கதை 14

பசு
by J.K. Sivan

ஞானி ஞானேஸ்வரும் பரம பாகவதர் நாமதேவரும் யாத்திரை தொடங்கும்போது விரல் விட்டு எண்ணக்கூடிய எட்டு பத்து பேர் மட்டுமே தொடர்ந்தனர். அவர்கள் ஊர் ஊராக சென்று நாமசங்கிர்தனம் செய்தபின் பத்து நூறாகியது.ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் அனைவரும் டெல்லி தெருக்கள் வழியாக வரும்போது ஒரு லக்ஷத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அவர்களை சேர்ந்திருந்தது. அப்போது டெல்லியை நவாப்கள் ஆண்ட காலம் அல்லவா?. அரசனுக்கு தன் மக்களின் இந்த ஹிந்து சமய கூட்டமோ பக்தி பரவசமோ விருப்பமளிக்க வில்லை. ஹிந்து சமயம் அப்படி ஒன்றும் உண்மையானதல்ல என்று எண்ணம். நவாபின் அதிகாரி ஒருவன் ஒரு திட்டத்தோடு இந்த கூட்டத்திற்கு வந்தான். சும்மா வரவில்லை. கூடவே ஒரு பசு. அவன் ஞானேஸ்வர் நாமதேவரை அணுகி "நான் இந்த பசுவை இப்போது உங்கள் முன் கொல்லப்போகிறேன். உங்கள் பசு நேசன் கிருஷ்ணன் இருப்பது உண்மையென்றால் அவனால் இந்தபசுவுக்கு உயிர் கொடுக்க முடியுமா?"
"அய்யா, விட்டலன் இந்த பசுவை காப்பான்."
"எப்போது?"
"மூன்றே நாளில் இறந்த அந்த பசு உயிர் பெறும்"

பசு வெட்டப்பட்டது. நவாபின் ஆளுக்கு மிக்க சந்தோஷம். நாம்தேவ் ஞாநேஸ்வரின் பக்தர்கள் பசுவுக்கு உயிர் கிடைக்காதென்று தெரிந்தால் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள் அல்லவா? அவர்களது பக்த கோஷ்டி கலைந்து விடுமல்லவா? அந்த மூன்று நாளும் அன்ன ஆகாரமின்றி நாமதேவர் ஞானேஸ்வர் மற்றும் பக்தர்கள் அனைவரும் விட்டலனை துதித்து நாம சங்கீர்த்தனம் செய்தனர்.

"விட்டலா, நானல்லவோ அந்த பசுவின் மரணத்துக்கு காரணம்" என்று கதறினார் நாமதேவர். மயங்கி விழுந்தார்.
"நாம்தேவ், எழுந்திருங்கள் அந்த பசுவை போய் பார்க்கவில்லையா?"
பசு எழுந்து அருகில் புல் மேய்ந்து கொண்டிருந்தது.
"ஏன் மூன்று நாள் எங்களை அலைக்கழித்தாய் விட்டலா? வெட்டிய மறுகணமே உயிர் தந்து இருக்கலாமல்லவா?"
"நாமதேவா, என்மேல் ஏன் பழி போடுகிறாய்?. நீயல்லவோ 3 நாள் அவகாசம் கேட்டவன். உன் வாக்கு பொய்க்க கூடாதே என்று தான் நான் காக்க வேண்டியதாயிற்று!"

இந்த அதிசயத்துக்கு பின் நவாபின் இந்த பசு வெட்டிய கைங்கர்யத்தால் பல லக்ஷம் பக்தர்கள் நாம சங்கீர்த்தனத்தில் ஈடு பட்டு வீடு தோறும் பஜனைகள் நாமாவளிகள் பெருகியதே!! கூட்டம் வெள்ளமாக பெருகி, டெல்லியிலிருந்து மார்வார் வழியாக பண்டரிபுரம் திரும்பினார்கள். ராஜஸ்தான் பாலைவன பகுதியில் நீரற்று அவர்கள் அனைவரும் கடும் வெய்யிலில் வாடி களைத்து துவண்ட போது " விட்டலா இந்த பக்தர் கூட்டம் படும் துன்பத்தை பார்த்தாயா?. ஆபத்பாந்தவா வந்து உதவேன்!”
நாமதேவரின் வேண்டுதல் விட்டலன் காதில் விழுந்ததா? இது அடுத்த கதையில் அல்லவோ தெரியவேண்டும்!!



                                         The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment