Translate

Wednesday, 6 February 2013

விட்டலன் கதை 16

சமாராதனை
by J.K. Sivan



Sant Gyaneshwar
ஞானேஸ்வரும் நாம்தேவரும் புனித யாத்ரை சென்று பண்டரிபுரம் திரும்ப கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகிவிட்டது. தாயை சேய் பிரிந்து இருக்கமுடியாதல்லவா? நாமதேவருக்கு " எப்போடா விட்டலனை பார்க்கபோகிறோம்" என்ற ஆவல் மிகுந்தது. விட்டலனும் அவர் வரவிற்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தான். அவர் வந்துவிட்டார் என அறிந்து அவனே சந்திரபாகா நதிக்கரையில் சென்று அவரை காண காத்திருந்து, ஊர் மக்களும் ஞானேஸ்வர் நாமதேவர் சகிதம் வந்திருந்த பரம பக்த பாகவதர்களையும் வரவேற்று உபசரித்தனர்.
"நாமதேவா, புனித யாத்ரை செய்து வந்திருக்கிறாய். வரும் சனிக்கிழமை எனக்கு ஒரு சமாராதனை ஏற்பாடு பண்ணு". விட்டலன் மேலும் சொன்னான்: "நான் ஏன் இதை உன்னிடம் சொல்கிறேன் என்றால் நீ இன்னும் க்ரஹஸ்தன், ஞாநேஸ்வரோ ஒரு யோகீஸ்வரர் அவருக்கு இதெல்லாம் தேவையில்லை." விட்டலன் ஆணைக்கு மறுப்பேது? விட்டலன் சொற்படியே பிரதிஷ்டானபுரத்திலிருந்து பிராமணர்களை அழைத்தாகிவிட்டது.

விட்டலனே ஒரு பெரும் பிராமண தனவந்தனாக உருவெடுத்து பிரதிஷ்டானபுரத்தில் நுழைந்தான். அந்த ஊர் பிராமண சமூகத்தை அடைந்ததும் தனவந்தன் அவர்களை நமஸ்கரித்து "பெரியவா, நீங்கள் எல்லாரும் வரும் சனிக்கிழமை அன்று பண்டரிபுரம் வந்து சமாராதனை நடத்திகொடுக்கணும்" என்று வேண்டினான்.

சனிக்கிழமை வந்தது. ப்ராமணர்களும் வந்தனர். சமாராதனை பூஜை முடிந்தது. பிராமணர்களும் சாப்பிட்டாகிவிட்டது. நிறைய தக்ஷிணையும் கொடுத்தான் தனவந்தன். பிராமணர்களும் அமர்ந்து ச்ரமபரிகாரம் பண்ணிக்கொண்டு இருக்க, அவர்கள் எதிரே தனவந்தனும் மற்றவர்களும் சாப்பிட ஆரம்பித்தனர்.


Sant Namdev
"பக்தர்கள் எல்லோரும் என்னோடு சாப்பிட அமருங்கள்" என்று குரல் கொடுத்தான் தனவந்தன். அவனருகே நாம தேவர், மற்றும் பல தாழ்ந்த வகுப்பு ஹரிஜன பக்தர்களும் அமர்ந்தனர்.

"இந்த தனவான் பிராமணன் என்று நினைத்தோமே, இவன் மற்றவர்களோடு அமர்ந்து உண்கிறானே?"என்று சந்தேகத்தில் ஆழ்ந்தனர் பிராமணர்கள்.

"ச்சே, இதென்ன தனவந்தன் இலையிலிருந்து அல்லவோ அவர்கள் எல்லோரும் எடுத்து உண்கிறார்கள். அவனும் அவர்கள் இலையில் உள்ளதை சாப்பிடுகிறானே?"

கோபம் கொண்ட பிராமணர்கள் எழுந்து செல்ல ஆரம்பிக்க, உணவை முடித்து தனவந்தனும் பக்தர்களும் பிராமணர்களை அணுகினர்.

"ஒரு பிராமணன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூட உனக்கு தெரியாதா? தாழ்ந்த குடி மக்களோடு நீ உண்ணலாமா?"
"சுவாமிகளே, எனக்கு இதெல்லாம் தெரியாதே. இதற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டென்றால் பண்ணி விடுகிறேனே" என்றான் தனவந்தன்.

அடுத்த சனிக்கிழமை பிராயச்சித்தம் பண்ணி வைத்தார்கள் அந்த பிராமணர்கள் தனவந்தனுக்கு. ப்ராயசித்தம் முடிந்து பிராமணர்கள் சாப்பிட்டு முடித்தபிறகு தனவந்தனும் மற்றவர்களும் சாப்பிட அமர்ந்தார்கள்.

இன்றும் தனவந்தன் அருகில் நாமதேவர் மற்றும் பல தாழ்ந்த வகுப்பு பக்தர்கள் அமர்ந்து ஒரே இலையில் அனைவரும் உண்டதை பார்த்த பிராமணர்கள் கடுங்கோபம் கொண்டார்கள்.

"மறுபடியும் அதே பாபத்தை பண்ணுகிறாயே"
"நீங்கள் தான் இது பாபம் என்றால் பிராயச்சித்தம் உண்டு என்று பண்ணிவைப்பீர்களே?
"ஏன் இவ்வாறு செய்தாய்"
"பக்தர்கள் உண்ணாவிட்டால் என்னால் உண்ண முடியாதே. தனியாக நான் சாப்பிட்டதே இல்லையே" என்றான் தனவந்தன்.
"நீ ஒரு பிராமணன் என்றால் அதற்கேற்ப தான் நடக்கணும்"
"சுவாமிகளே, எனக்கென்னவோ இவர்கள் தான் பிராமணர்கள் என்று தோன்றுகிறதே உங்களை விட"
"என்ன சொல்கிறாய் நீ?"
"ஞானம் போதவில்லையே. எவரிலும் பிரம்மத்தை உணர்பவனே எவரிலும் வித்யாசம் காணாதவனே பிராமணன் அல்லவா?"
' நீ சொல்வது வாஸ்தவம். ஆனால் இதை மிக உயர்ந்த ஞானம் உள்ளவர்கள் தான் கடைபிடிக்க முடியும். எல்லோராலும் முடியாதல்லவா. அது சரி நீ யார்? உனக்கு எப்படி அதீத ஞானம் உள்ளது?"
"என்னை தெரிந்துகொள்ளு முன் என் பக்தர்களை தெரிந்துகொள்ளுங்கள்".

விட்டலன் பிராமணர்களுக்கு ஞானத்தை கொடுத்தான் அவர்கள் முன் பிரம்மா விஷ்ணு சிவன் பராசக்தி வடிவில் ஞானேஸ்வர் சகோதரர்கள், முக்தாபாய் நிற்க பிராமணர்கள் தங்களது அறியாமை விலகி அவர்கள் காலடியில் பிராமணர்கள் விழுந்து திருந்தினர். தனவந்தன் விட்டலனே என உணர்ந்தனர்.

வேதம் ஓதுவதிலும் பக்தி பூர்வ நாமசங்கீர்த்தனமே அவனை வெகு சுலபத்தில் அடையசெய்யக்கூடியது என்பதை உணர்த்தவே விட்டலன் இந்த சமாராதனை நாடகமாடினான் என்றும் அறிந்தனர். அவர்களும் பண்டரிபுர பக்தஜன கோஷ்டியில் ஒன்றாயினர் என்று எழுத தேவையில்லையே



                                                                  The writer can be reached at: jksivan@gmail.com 

1 comment:


  1. From: JB Maharam [mailto:jbmaharam@gmail.com]
    Sent: Wednesday, February 06, 2013 6:23 PM
    To: jksivan@vsnl.com
    Subject: STORY NO.15



    Namaskaram Mama

    Sivanrathirai Bhajanai kadai supero super.

    Thanks

    jayababu

    ReplyDelete