Translate

Tuesday, 26 February 2013

விட்டலன் கதை 25
நவாபுக்கு சேவகம்
by J.K. Sivan

Sant Sena Nahvi
தோண்டத் தோண்ட சுரக்கும் சில ஊற்றுக்கண்கள் கொண்ட கிணறுபோன்றது விட்டலன் மகாத்மியம். எண்ணற்ற குட்டிக் கதைகளை உங்களுக்கு வாரி வழங்க இதுவரை அருள்புரிந்த பாண்டுரங்கன் இனியும் நமது முயற்சிக்கு உதவ வேண்டிக்கொண்டு, இன்றைய கதை தொடங்குகிறேன்.
சேனாயி ஒரு முடி திருத்தும் நாவிதர் ஆக இருந்தும் விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன், ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார். மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம்.

அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை முகலாயர்கள் ஆண்ட நேரம் அல்லவா? பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் முகல் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான். அவனுக்கு ஒரு பிரத்யேகமான நாவிதன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப செலவுகளையும் ஏற்று, சவுகரியமாக வைத்துக்கொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் நாவிதனாக உள்ளவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது. இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்துகொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை. அவ்வளவு தானே?
நிறைய நாவிதர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டார்கள். சேனாயிக்கு இது தெரியாது. தெரிந்துகொள்ள எந்த முயற்சியோ போட்டியோ இல்லை. விட்டலன் அருளால் இந்த உத்தியோகம் சேனாயிக்கு மட்டும் கிடைத்தது. இதில் என்ன சந்தோஷம் அவருக்கு என்றால் காலையில் சிறிது நேரம் மட்டும் தான் வேலை. மற்ற நேரமெல்லாம் வீட்டில் பாண்டுரங்கனோடும் மற்ற பக்தர்களோடும் விட்டலனைப் பாட நிறைய நேரம் கிடைக்குமல்லவா?

மனிதனாகப் பிறந்தாலே போட்டி, பொறாமை,வயிற்றெரிச்சல் இல்லாமல் இருக்குமா? மற்ற நாவிதர்களுக்கு "இந்த சேனாயிக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா? எப்போ நமக்குக் கிடைக்கவில்லையோ, இவனை எப்படியாவது இந்த வேலையிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று வழி தேடிக்கொண்டிருந்தனர். சமயம் வந்தது லட்டு மாதிரி அவர்களுக்கு.

ஒருநாள் ஏகாதசி. நிறைய பாண்டுரங்க பக்தர்கள் வெளியூரிலிருந்து கூட்டமாக பஜனை ஆட்டம் பாட்டத்துடன் பண்டரிபுரம் விட்டலனை நோக்கி நடந்துகொண்டிருப்பதை சேனாய் பார்த்து விட்டார். அவர்களது தீஞ்சுவை விட்டலகானம் அவரைக் கவர்ந்தது. அவரையறியாமல் தலை, கால், கை எல்லாம் அந்த பக்தி ரசத்தில் ஆடி அவரை தன்னை மறக்கக் செய்தது. அந்த நேரம் அவர் நவாப் மாளிகைக்கு பணி புரிய சென்றுகொண்டிருந்தார். சேனாய் அப்படியே அவர்களோடு பண்டரிபுரம் கிளம்பிவிட்டார். அவருக்கு வீடு வாசல், நவாப், அன்றைய வேலை எல்லாமே சுத்தமாக மறந்துபோனது.

இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன், நல்ல சமயத்தை நழுவவிடுவானா? நேராக நவாபிடம் சென்றான். அவர்கள் என்ன பேசினர்?

"அய்யா. நவாப்மகராஜ் தென்டனிடறேனுங்க

"யார் நீ என்ன விஷயம்?”

"அய்யா, இன்னிக்கு சேனாய் வரமாட்டானுங்க

 ஏன்?”

"பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்குப் போகப்போறேன் என்று சொன்னானுங்க"

"அங்க என்ன?

"எங்க சாமியிருக்கு. அது தான் முக்கியம். நவாப் இல்லை. அதனாலே இன்னிக்கு நவாபை போய்ப் பாக்கமாட்டேன்" வேணா நீ போய் அவன்கிட்ட சொல்லிடுன்னு சொன்னதாலே நான் சொல்ல வந்தேங்க"

நவாபுக்கு, கோவம் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை எகிறி, ஆட்களை ஏவி “அந்த சேனாய் நாயைக் கட்டி இழுத்துவா இங்கே, நானே அவனை வெட்டறேன்" என்றான். சொல்லி சில நிமிஷங்கள் கூட ஆகவில்லை. அவன் எதிரே சேனாய் வழக்கம்போல கைகட்டி சேவகத்துக்கு நின்றுகொண்டிருந்தார். நவாபுக்கு தன்னிடம் வேண்டுமென்றே யாரோ தப்பாகத் தகவல் சொல்லியிருக்கிறான் என்று தோன்றியது.

அவன் எதிரே அமர்ந்து வழக்கம் போல சேனாய் முடிதிருத்தும்போது இன்று என்றுமில்லாத ஒரு சந்தோஷம் நவாபுக்கு ஏற்பட்டது. ஒவ்வொருமுறை நவாபை தொட்டும், நேரே பார்த்தும் வேலை செய்யும்போது அவனுக்கு மனமெல்லாம் ஒரு அமைதி, சொல்லவொண்ணா களிப்புத் தோன்றியது. நவாப் இன்ப வானில் பறந்துகொண்டிருந்தான்.

சேனாயி! இன்று உன் வேலை பிரமாதம்! என்ன அப்படி இன்று விசேஷம் என்று கேட்டுக்கொண்டிருந்தபோது அவன் முன் விட்டலனின் அழகிய முகம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. காந்தக் கண்கள், புன்முறுவல், செந்தாமரை முகம், கஸ்தூரி திலகம் அனைத்தும் அவனை புளகாங்கிதமடைய செய்தது.

அந்தநேரம், சேவகர்கள் சேனாயியை கட்டி இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினர். திகைத்த நவாப் எதிரே இதுவரை இருந்த சேனாயியைத் தேடிய போது அவன் இல்லை.

இதற்குள் சேநாயி வேலைக்கு கிளம்பும்போது வழியில் பாண்டுரங்க பக்தர்களை பார்த்தது, வேலையை மறந்து அவர்களோடு பண்டரிபுரம் சென்றது, பாதிவழியில் சேவகர்கள் அவனைப் பிடித்து, கட்டி இழுத்து வந்தது அனைத்தும் சொல்லப்பட்டாலும் நவாபின் காது தான் இதைக் கேட்டதே தவிர, அவன் விட்டலனே தன் முன் தோன்றி தனது பக்தனின் வேலையை செய்தான் என்று புரிந்துகொண்டான்

நாமும் ஒன்று புரிந்துகொள்வோம். செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியும். தொழில் தெய்வமானால் தொழிலாளியும் தெய்வம் தானே! ஆனால் சேனாய் கதையில் தெய்வமே தொழிலாளி ஆகியிருக்கிறது!

 
                                                  The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment