Translate

Monday 1 April 2013

துவந்த யுத்தம்
by J.K. Sivan

மகாபாரதத்தை பற்றி எல்லோருக்குமே தெரிந்த ஒரு உண்மையை பற்றி முதலில் பேசுவோமா? யாருக்கு தெரியாது பாண்டவர்கள் கவுரவர்கள் யுத்தம்!. காலம் காலமாக தலைமுறை தலை முறையாக நிறைய கேட்ட, படித்த, பார்த்த கதை தானே அது. இருந்தாலும் ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் கேட்கும்போதும் அலுப்பே தட்டவில்லையே!! அதற்கு எங்கு ஆரம்பிக்க வேண்டும் எங்கு நிறுத்த வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. இதற்கு முக்ய காரணம் அதில் நடமாடும் கிருஷ்ணன்!! அவன் எங்கும் எதிலும் இருப்பவனாயிற்றே. எங்கு ஆரம்பித்தாலும் அதில் அவன் இருப்பதால் அதுவே ஆரம்பம். இந்த வகையில் தான் கிருஷ்ணன் கதைகள் உங்களை வந்தடைகிறது. ஒவ்வொரு சம்பவமும் மனதை குளிர்விக்கிறது.
அவன் பாதார விந்தங்களில் சரணாகதி அடைய வைக்கிறதே. இன்றைய கதையில் கிருஷ்ணன் பங்கு என்ன என்பதை அடுத்து வரும் பாராக்கள் தானே விளக்கட்டும்.

கவுரவர்கள் சேனை அழிந்தது துரியோதனனின் 99 சகோதரர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தொலைந்தனர். துரியோதனன் துளிக்கூட அவர்களுக்காக வருந்தவில்லை. கர்ணனை மலைபோல் நம்பி அவனும் மாண்டபிறகு இனி வெற்றி என்கிற பேச்சுக்கே இடமில்லை. தான் எப்படி மரணத்தை நேர் கொள்ளவேண்டும் என்று யோசித்துக் கொண்டே ஒரு ஏரிக்குள் ஒளிந்துகொண்டிருந்தான். கிருபர், அஸ்வத்தாமா, ஆகியோர் அவனை கிளப்பி "துரியோதனா, நீ ஒரு வீரன். கலங்காதே. உனக்கு ஒரு வழி இருக்கிறது இன்னும் கூட" என்று ஐடியா சொன்னதால் வெளியே வந்தான். அவர்கள் சொன்னபடி நேரே யுதிஷ்டிரனிடம் வந்தான்.
துரியோதனா, உனக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் கொடுக்கிறோம், எங்களில் ஒருவனோடு நீ தனியாக துவந்த யுத்தம் செய். அதில் நீ வெற்றி பெற்றால் நீயே ஜெயித்தவன். உயிர் பிழைத்து தனியாக வாழ். அன்றேல் மரணத்தில் உன் சகோதரர்கள் நண்பர்களை சந்திக்கலாம். யாருடன் மோதுகிறாய்?"

துரியோதனன் வீரன். அந்தகால க்ஷத்ரியன். தனக்கு சம பலம் உடைய பீமனையே அவன் தேர்ந்தெடுத்தான் இருவருமே பலராமனிடம் கதை பயிற்சி பெற்றவர்களாச்சே. இருவரில் உயிருக்காக போராடுபவன் என்கிறபோது துரியோதனன் கை ஓங்கியிருப்பது வாஸ்தவம். துரியோதனனை எளிதில் பீமனால் வெல்ல முடியவில்லை என்பதை கிருஷ்ணன் கவனித்து விட்டான். பீமனை உற்சாகப்படுத்தி கொண்டிருந்த கிருஷ்ணன்
சில சமிஞ்ஞைகள் செய்தும் பீமன் புரிந்து கொள்ளவில்லை

பீமா, சபாஷ் நன்றாக யுத்தம் செய்கிறாய் என்று உரத்த குரலில் கிருஷ்ணன் அவனை ஊக்குவித்து தனது தொடையை கையால் தட்டிக்கொண்டே இருந்தான். பீமனுக்கு இப்போது கொஞ்சம் பொறி தட்டியது. திரௌபதியை மான பங்கப்படுத்த அவளை தனது தம்பி துச்சாணனை விட்டு இழுத்து வர செய்து அவளைத் தொடையில் வந்து உட்கார்என்று அகங்காரத்தோடு துரியோதனன் சொன்னபோது, “துரியோதனா, எங்கள் குல விளக்கு திரௌபதியை உன் தொடையில் வந்து அமர் என்று சொன்ன உனது தொடைகளை பிளக்காவிட்டால் நான் பீமன் இல்லை" செய்த சபதத்தைத் தான் கிருஷ்ணன் ஜாடையாக உணர்த்துகிறான் என்பது பீமனுக்கு ரொம்ப லேட்டாக புரிந்தது.
தனது கதையால் துரியோதனனது தொடையை பிளந்தான். துரியோதனுடைய வீக் பாயிண்ட் அது. இந்த சமயம் உங்களோடு ஒரு ரகசியத்தை பங்கிட்டு கொள்கிறேன். துரியோதனன் தாய் காந்தாரி தன் கண்களை தானாகவே கட்டிக்கொண்டு அவளது கணவன் திருதராஷ்டிரன் போலவே தானும் குருடியாகவே வாழ்பவள். அவள் தன கண்களை திறந்து எவரை பார்த்தாலும் அவர்களுக்கு வஜ்ரம் இரும்பு போல தேகம் பலமடையும் என்று ஒரு வரம்.

தன் மகன் துரியோதனன் முழு உடம்பும் இரும்பு வஜ்ரம் போல் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு தரம் அவனை பிறந்தமேனியாக தன் எதிரே வர சொன்னாள். கிருஷ்ணனுக்கு இந்த விஷயம் தெரியும். துரியோதனனிடம் சென்றான். "பெற்ற தாயாக இருந்த போதிலும் பிறந்த மேனியாக ஒரு பெண் முன் நிற்பது அநாகரிகம் என்று இடுப்பிலிருந்து முழங்கால் வரை மறைத்து கொண்டு அவன் காந்தாரி முன் நிற்க செய்தான். ஆகவே காந்தாரியின் பார்வை துரியோதனன் உடல் மீது பட்ட இடத்தில் அவனை எந்த ஆயுதமும் ஒன்றும் செய்ய முடியாது. அவன் மறைத்திருந்த தொடை பகுதியில் அதற்காகவே பீமனை கதையால் தாக்க கிருஷ்ணன் சமிஞை செய்ததை புரிந்து கொண்டதால் துரியோதனை தொடை பிளந்து கொன்றான்

இது அதர்மம். இடுப்புக்கு கீழே அடிப்பது நேர்மையல்லஎன்று அஸ்வத்தாமன் கத்தினான்.
நீங்கள் எதை நேர்மையாக செய்தீர்கள்என்று அர்ஜுனன் கேட்டான்.

துர்யோதனன் நாம் இப்போது சொல்கிறோமே "ஸ்பாயில்ட் சைல்ட்" அது மாதிரி செல்லம் கொடுத்து கெட்டுப்போன ஒருவன். பொறாமை அவனது இயற்கை குணமாக இருந்தது. ஆனால் அவன் ஒரு சிறந்த நண்பன். சகோதர பாசம் உடையவன். சமயோசிதம் தெரியவில்லை. அகம்பாவத்தால் அறிவிழந்த ஒரு பலம் கொண்ட அரசன். கிருஷ்ணனால் கூட திருத்த முடியாத ஒரு ஜீவன். கிருஷ்ணன் புன்னகைத்தான்.

துரியோதனன் உயிர் இழந்தான்.


                                                   The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment