Translate

Sunday, 21 April 2013

தட்டு தாழ்ந்தது
by J.K. Sivan 
குருவாயூர் போகாதவர் யாரேனும் இருந்தால் அங்கு குட்டி கிருஷ்ணன் புன்னகையோடு காட்சியளிப்பதையும் பக்தர்கள் மனத்தை வெண்ணை போல் திருடி மகிழ்விப்பதையும் பார்க்கவில்லை என்று தான் பொருள் படும்! .எத்தனையோ சேவைகள் கிருஷ்ணன் கோவிலில் அங்கு நடந்தாலும் மிக விசேஷமாக உள்ளது துலாபாரம் தான். வேண்டிக்கொண்டு வரும் பக்தர்கள் தங்கள் எடைக்கு எடையாக, வித விதமான பொருள்களை துலாவில் எடை போட்டு அவற்றை கோவிலுக்கு காணிக்கையாக சமர்பிப்பது பிரதான துலாபார சேவை அங்கு. இன்றைய நமது கதை கிருஷ்ணனையே துலாபாரத்தில் இட்டஒரு சம்பவமாகும்.
த்வாரகை எப்போதும்ஜே ஜே என்ற இருக்கும் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இல்லை. செல்வத்துக்கே காரணமான ஸ்ரீ லக்ஷ்மி தேவியே ருக்மணியாக வாழும் அரண்மனையில் செல்வ செழிப்பை பற்றி பேசவேண்டுமா என்ன? ருக்மணி மட்டுமல்ல, சத்யபாமா, ஜாம்பவி மற்றும் எத்தனை எத்தனேயோ ராணிகள் கிருஷ்ணனின் மனைவியாக அந்த அரண்மனையில் இருந்தார்களே. சத்யபாமாவிற்கு, தான் மிக அழகானவள் நிறைய செல்வ செழிப்போடு கிருஷ்ணனின் மனைவியாக அந்த வீட்டுக்கு வந்தவள், என்று ஒரு தற்பெருமை உண்டு. இருந்தபோதிலும் கிருஷ்ணனுக்கு ருக்மணி மேல் தான் அலாதி ப்ரியம் என்ற ஒரு அங்கலாய்ப்பும் நெருடலும் கூடவே அவள் மனதில் இருந்தது. இதனால் ருக்மணி மீது கொஞ்சம் பொறாமையும் உண்டு என்று சொல்ல என்ன அவசியம்? ஆனால் ருக்மணியோ சகல சம்பத்துக்கும் அஷ்ட ஐஸ்வர்யத்துக்கும் மூல காரணமாக இருப்பவளானாலும் கிருஷ்ணனின் முதல் பட்ட மகிஷியாக இருந்தபோதிலும் வெகு அமைதியுடனும் ரொம்ப சிம்பிளாகவுமே இருப்பவள்

நாரதர் என்றாலே கலகம் என்றும் நாரதர் கலகம் நன்மையில் தான் முடியும் என்றும் அனைவரும் அறிவோமே!
ஒருநாள் நாரதர் துவாரகைக்கு கிருஷ்ணனை தரிசிக்க வந்தார். அரண்மனை வாசலில் அவர் கண்ணில் பட்டவள் சத்யபாமா. அந்த பக்கமாக வந்தவள் தனது அலை அலையான கூந்தலில் அழகு மலர்களை சூடிக்கொண்டிருந்தவள் அவரை பார்த்து சிரித்து விட்டு மெதுவாக நகர்ந்தாள். விடுவாரா நாரதர்?

"யார் சத்தியபாமாவா, எனக்கு வயதாகி விட்டதல்லவா யார் இந்த அழகி என்று உடனே தெரியவில்லை. ரொம்ப ரொம்ப அழகாயிருப்பதால் நீ சத்யபாமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் சந்தேகித்தது சரிதானே அம்மா?"

பெண்களுக்கு தங்கள் அழகை வர்ணித்தால் அதை விட வேறு என்ன சந்தோஷம் தரும் விஷயம்?
"நான் சத்தியபாமாவே தான்" மீன் வகையாக எதிர்பார்த்தது போலவே வலையில் விழுகிறது என்று நாரதருக்கு மகிழ்ச்சி.
"அப்படின்னா, நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் என்று வெகு நாட்களாக நினைத்ததை இப்போ கேட்கலாமா?"
"கேளுங்களேன்!"
"இல்லை, எனக்கென்னமோ கிருஷ்ணனுக்கு உன்னிடம் இருப்பதை விட ருக்மணியிடம் தான் ரொம்ப பிரியம் என்று தோன்றுகிறதே. நீயல்லவோ மிகவும் அழகானவள். அப்படியென்ன ருக்மணியிடம் ஒரு சிறப்பு?”. நீ அழகில் மட்டுமல்ல, குணத்தில் வயதில் எல்லா விதத்திலும் கிருஷ்ணனுக்கு எற்றவளாச்சே" என்று தோன்றியது. சத்யபாமாவின் முகம் சிறுத்தது. பேசாமல் சிலையாக நின்றாள். நீண்ட ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது எண்ணச் சிதறல்களிடையே அவள் மெதுவாக நாரதரையே கேட்டாள் "கிருஷ்ணனின் முழு மனதையும் அன்பையும் நானே அடைய எதாவது ஒரு வழி சொல்லுங்களேன் ?"

நாரதர் யோசிப்பது போல் பாவனை செய்தார்.

"சத்யா, எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. அப்படி செய்தால் கிருஷ்ணன் உன்னை நன்றாக புரிந்து கொள்வான் உனக்கு அவன் மீது இருக்கும் பூரண அன்பும் தெரிந்துவிடும் பிறகு பார் அவனது முழு கவனமும் பரிவும் பாசமும் அன்பும் உன் மீது மட்டுமே இருந்துவிடும்."
" ரொம்ப திருப்தியாக இருக்கிறது நீங்கள் சொல்வது"
" இதோ பார் நீ ஒரு வரம் எனக்கு கொடு. கிருஷ்ணன் எனக்கு அடிமை என்று. பிறகு கிருஷ்ணனை என்னிடமிருந்து மீட்டுக்கொள்ள யார் எடைக்கு எடை தங்களது நகை ஆபரணங்களை துலாபாரத்தில் இட்டு க்ரிஷ்ணணனின் எடையை விட அவை அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கிருஷ்ணன் சொந்தமாகி விடுவான். அளவற்ற செல்வம் உன்னிடம் இருக்கிறது. உன் அப்பா சத்ரஜித் ச்யாமந்தகத்தையே உடையவன். உனக்கு இது வெகு சுலபமான வழி. மற்றவர்கள் உன்னளவு இந்த போட்டியில் வெற்றி பெற முடியாதவர்கள் என்று எனக்கு தோன்றுகிறது.என்ன சொல்கிறாய்? ஆனால் ஒன்று நினைவில் வைத்துக்கொள் கிருஷ்ணனின் எடையை விட உன் ஆபரணங்கள் நகைகள் செல்வம் எல்லாம் குறைவாக இருந்தால் கிருஷ்ணன் என்றும் என்னுடைய அடிமைதான். இப்படி செய்வதால் உன் முயற்சி உன் பெருமை, உன் உண்மை காதல் எல்லாருக்கும் புரியுமல்லவா?"

திட்டம் ஒப்புதல் பெற்று சத்யபாமா கிருஷ்ணனிடம் சென்றாள். தான் நாரதருக்கு கிருஷ்ணனை அடிமை என வரமளித்ததையும், அவனை தனது செல்வத்தால் மீட்க போவதையும் சொன்னதை கேட்ட கிருஷ்ணன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து சரி என்று தலையாட்டினான்.
துவாரகை அரண்மனையில் அன்று எள் சிந்தினால் எண்ணையாக விழும் அளவு கூட்டம். அனைவருக்கும் ஆச்சர்யம் ஒரு தராசு தட்டில் கிருஷ்ணன், மற்றொரு தட்டில் சத்யபாமா தனது கஜானாவிலிருந்து பெட்டி பெட்டியாக நகைகளையும் ஆபரணங்களையும் கொண்டு அடுக்கினாள். தராசு தட்டு கீழே இறங்கவே இல்லையே!! நாரதர் முழங்கினார் "கிருஷ்ணன் எனது அடிமை. அவனை என்னிடமிருந்து மீட்க எடைக்கு எடை பொன்னும் பொருளும் துலாபாரத்தில் இடுபவர்க்கு கிருஷ்ணன் திரும்ப கிடைப்பான். இதோ சத்யபாமா முயற்சிக்கிறாள்." சத்யபாமாவின் அனைத்து செல்வங்களும் தீர்ந்துவிட்டன. தட்டு கீழே இறங்கவில்லை. கண்ணீர் மல்க சத்யபாமா மற்ற ராணிகளிடம் கெஞ்சினாள். எல்லோரும் அவளுக்காக தங்களது ஆபரணங்கள், பொன் பொருள் அனைத்தும் கொண்டு தராசில் போட்டும் தட்டு தழையவில்லை. எல்லோரிடமும் வெறும் தாலிக்கயிறு மட்டுமே மிச்சம். நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறதை கண்ட கிருஷ்ணன் மிக்க ஏமாற்றத்துடன் என்ன சத்யபாமா இவ்வாறு செய்துவிட்டாய். "உன்னால் விளைந்த இந்த சங்கடத்தை பார்த்தாயா. நான் என்றும் இனி நாரதர் அடிமையா?? உன்னால்அல்லவோ எனக்கு இந்த நிலைமை. எப்படி என்னை மீட்க போகிறாய் என்றான். எங்கே ருக்மணியை காணோம். கூப்பிடுங்கள் அவளை. அவளால் முடிந்ததை செய்து என்னை மீட்கட்டுமே" என்றான்

சத்யபாமா ஓடினாள் ருக்மணியின் அந்தபுர அறைக்கு. ருக்மணி கிருஷ்ணன் பூஜையில் பிரார்த்தனையில் இருந்தாள்.அவள் காலில் விழுந்து சத்யபாமா நிலைமையை விளக்கினாள். ருக்மணி ஒன்றும் பேசவில்லை. நேராக நடந்தாள் ராஜ தர்பார் பக்கம். போகும் வழியில் துளசிமாடம் இருந்தது. சுற்றி வணங்கிவிட்டு ஒரு துளசி இலையை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டாள். துலாபாரத்தில் போட ஒரு நகையோ ஆபரணமோ இல்லாத நிலையில் தன் கையில் இருந்த துளசி தளத்தை கிருஷ்ணனை மனதில் வேண்டிக்கொண்டு தட்டில் போட்ட அடுத்த கணமே தட்டு தாழ்ந்தது. கண்ணனை ருக்மணி மீட்டு கொண்டாள்.அப்பாடா என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. ருக்மணி சரியான காரியம் செய்தாய். என்னை காட்டிலும் நான் விரும்பும் துளசி இலை வலிமையையும் பலமும் மிக்கது மதிப்பில் எடையில் உயர்ந்தது என்று நிருபித்து என்னை மீட்டாய். சபாஷ் ருக்மணி" என்றான் கிருஷ்ணன். சத்தியபாமாவுக்கு அவள் நகைகள் பொருள்கள் எல்லாம் மீண்டும் திரும்பியது. நாரதர் மூலம். சத்யபாமாவின் ஆணவம் கர்வம் செருக்கு அது எதுவானாலும் இப்போது துலாபார தட்டை போலவே தாழ்ந்து மறைந்தது. நாரதரின் யுக்தியை கிருஷ்ணன் மனதார மெச்சினான். அடுத்த கதைக்கு மகிழ்ச்சியோடு நாமும் நகர்வோம்!

 
 
The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment