Translate

Friday 5 April 2013

ஜாதகம் - ராசி லன்
by J.K. Sivan

அந்த குழந்தை பிறந்தபோது, அதை கொஞ்ச யாரும் வரவில்லை. இரவோடு இரவாக அதை தாயிடமிருந்து பிரித்தாகிவிட்டது. பிறந்ததே வெளியே தெரியாதபோது பிறந்ததை யார் கொண்டாட முடியும்?. வளர்ந்ததும் எங்கோ! . அதற்கு ஜாதகம் பார்த்தார்களா?

நல்ல நாள் பார்த்து பேர் வைத்தார்களா? கருப்பழகன் ஊரில் யாராலும் கிருஷ்ணன் என்றே அழைக்கபட்டான். அதெல்லாம் சரி, இதற்காக அவனுக்கு ஜாதகம் என்று ஒன்று
இல்லாமலா போய் விடும். அவன் பிறந்த நாள், நேரம் எல்லாம் சரியாக தெரிந்ததால் அதை வைத்து கொண்டு பல ஜோசியர்கள் கணித்தது அவன் வாழ்க்கையை படம் பிடித்து காட்டி விட்டதே! அவன் ஏன் மற்றவர்களை விட வித்யாசமாக இருந்தான்??அவன் ஏன் ஒரு காந்த சக்தியாக இருந்தான்

கண்ணற்ற சூர்தாசை கேட்டால் அவர் கவிதை ரூபமாகவே அவன் ஜாதகத்தை பாடிவிடுகிறார்!.

பிறந்த நாள்: மதுராபுரியில் ( (27*25’ North; 77*41’ East) ஜூலை 19, 3228 (கி.மு) நடு ராத்திரி. கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆவணி மாசம் ரோகிணி நக்ஷத்ரம். இந்த கிருஷ்ணன் பிறந்த குறிப்பு கொடுத்தது நானல்ல ஸ்ரீ வியாச மகரிஷி.பாகவதத்தில்.

யார் இந்த ரெண்டு ஜோசியர்கள் ரொம்ப ஆர்வமுடன் கிருஷ்ணன் ஜாதகத்தை அசுகிரார்களே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாக காதில் விழவில்லை என்றாலும் ஏதோ காதில் விழுந்தவரை அவர்கள் பேசும் ஜாதக பாஷை நமக்கு தெரியாததாலும் காதில் பட்டதை கை எழுதுகிறது. தப்போ ரைட்டோ அவரவர்தேவைக்கு ஏற்றபடி எடுத்து கொள்ளுங்கள். நமக்கு தெரியாததில் நமது நீளமில்லாத மூக்கு நுழையாது.

நாணா, நான் அப்பவே சொன்னேனோல்லியோ. இதோ பார் எப்படி கரெக்டா அமைஞ்சிருக்கு இந்த ஜாதகன் பெரும் புத்திசாலி, பேர் அழகன், பெரிய செல்வந்தன், மாணிக்கம், மரகதம், வைரங்கள் ஜொலிக்கும் 16000 மாளிகைகளாம் அவனுக்கு!

சுப்புணி நீ சொன்னது சொன்னது எல்லாமே அவன் செல்வத்தின் துக்குணியூண்டு என்றால் பார்த்துக்கோ!
சுப்புணியும் நாணாவும் மாற்றி மாற்றி அலசுவதில் யார் எதை சொன்னார் என்று நான் கவனிக்கவில்லையே. அவர்கள் பேசியது காதில் விழுந்தவரை இது:- எல்லா கிரகங்களும் அவன் சொற்படியே கேட்கும். தியாக செம்மல். அவன் ஒரு தனிப்பிறவி. இறைவனின் மானுடஉரு.

அன்பை தருவதிலும் தானே அதுவாகவும் ஆனவன். அவன் ரிஷப ராசிக்காரன்யா!! . லக்னாதிபதி சுக்ரன்! கேக்கணுமா?” ரோஹிணி நக்ஷத்ரம் வேறே! . சந்திரன், சனி, அங்காரகன் எல்லாம் உச்சத்திலே இருக்கா. அவா அவா கிரகத்திலே சூரியன், குரு, புதன் உக்காந்திருக்கா. ரிஷப ராசியிலே லக்னத்தில் சந்திரன் அக்கடான்னு இருந்தா ஜாதகன்,அழகனா, பேரும் புகழுமா ஆள் மயக்கியா, செல்வத்திலே புரளாம என்ன பண்ணுவான்? ஒண்ணாம் மடத்திலே கேதுங்கிறதாலே கொஞ்சம் அதிகமாவே கேளிக்கை உண்டு. அபவாதங்களும் கூட!.

3ம் வீட்டிலே செவ்வாய் நீச பங்கனா இருக்கான் என்கிறதாலே ஆசாமி யுத்தத்திலே படு தைர்யசாலி! ரோகிணி அழகி, சந்திரனை ஆக்ரமித்தவள். எனவே சந்திரனும் ரோஹிணியும் சேர்ந்த ஜாதகன் அழகனாக ஆள் மயக்கியாக இருந்ததில் என்ன அதிசயம்?. ரிஷபத்துக்கு பசு நேசம் உண்டே!! இந்த ராசிக்காரன் பசுக்களிடையே பிரபலமானவன் இதனால் தானோ?? 6ல் புதன், 10ல் சனி பிரதானமாக இருந்து ஜாதகன் தர்ம ஞாயத்தில் ஸ்ட்ராங்காக இருக்க உதவியிருக்கிறான்.

அங்காரகன் ராஹுவுடன் சேர்க்கையால் ஜாதகன் ராஜதந்திரி. இதை கேளுய்யா!! ரெண்டுலே உடைமையானவன் புதன்; படு ஜோரா 5ல் இருக்கான். அதனாலே வாய்லே ருந்து வர வார்த்தை எல்லாம் முத்துன்னா முத்து தான். பேச்சிலே மயங்காதவா புத்திசாலித்தனத்தால் அடிமையாகாதவா கிடையாது. இதை பாரு. சூரியன் தன்னுடைய வீட்டிலே குருவோட ஸ்வஸ்தமா இருக்கான். எதிரிகள் பொடிப் பொடி!! ஆசாமியை அசைக்க முடியாது. இது என்ன வேடிக்கை!

7ம் வீட்டுக்கு சொந்தக்காரன் அங்காரகனோடு களத்ரகாரகன் சுக்ரன் சேர்ந்துட்டதாலே மனைவிகள் கொஞ்சம் ஜாஸ்தி தான். பரவாயில்லை!! ஏன்னா, ராகு பக்கத்திலேயே இருக்கான். தெய்வீக உறவுதான். 9லே, அதான், சனியோட இடத்திலே, கேது இருக்கான்.

யோககாரகனா சனி 7ல் இருந்துண்டு வெற்றி மேலே வெற்றியா தரான். யுத்தத்திலே ஜாதகனை அடிச்சிக்க ஆளு கிடையாது. புரியறதா?? சனி தான் ஆயுள் காரகன், வர்கோத்தமன் ஆச்சே. ஆசாமிக்கு பூரண வயசு. கிருஷ்ணன் தான் 125வயசு இருந்தானே

இதெல்லாம் கிருஷ்ணனுடைய ஜாதக பலன். இன்னுமிருக்கு நிறைய சொல்ல. நேரம் தான் இல்லை. இங்கே இடம் தான் இல்லை எழுத!!. எல்லாத்துக்கும் காரணமான தெய்வத்தின் ஜாதகத்தில் எல்லாமே இருப்பது ஆச்சர்யமா!
 
நாணாவும் சுப்புணியும் சொல்லாவிட்டாலும் நமக்கு நன்றாக தெரியும் இந்த மனித தெய்வம் வாழ்ந்த காலத்தில் கூடவே இருந்தவர்கள்,பார்த்தவர்கள் பேசியவர்கள் கேட்டவர்கள் மிக புண்ய சாலிகள் என்றாலும் இன்றும் அந்த தெய்வத்தின் படத்தை வணங்கியோ, பெயரைச்சொல்லியோ, கதையை கேட்டோ மகிழும் நாம் ரொம்ப ரொம்ப பாக்யவான்கள், அவர் அருளை பெற்று பயனடைபவர்கள் என்பதற்கு ஜோசியம் வேண்டாம்!





The writer can be reached at: jksivan@gmail.com 

 

No comments:

Post a Comment