Translate

Sunday 10 February 2013

விட்டலன் கதை 17

நெய்வேத்யம்
by J.K. Sivan


Sant Dhamaji
நமது விட்டலன் கதைகளில் அடிக்கடி நாமதேவர் என்று சொல்கிறோமே அவரைப்பற்றிக் கொஞ்சம் விவரமாக தெரிந்துகொள்வது அவசியமாகிறது. விட்டலன் அவரிடம் நீங்களும் நானும் பேசிக்கொள்வது மாதிரி சம்பாஷித்தான் என்றால் அவசியம் அவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டாமா?
நமது பூவுலகில் பக்தி மார்க்கம் என்றால் என்ன அன்று விளக்க சரியான ஒருவர் வேண்டும் என்று தீர்மானித்த நாராயணன் யார் அதற்கு தகுந்தவர் என்று ஆள் தேடிக்கொண்டிருக்கும்போது தான்உத்தவர்” கண்ணில் பட்டார். "நீ உலகில் பிறந்து இதை கவனித்துக்கொள்” என்று ஆணையிட்டார்" .

என்ன நடந்தது?

பண்டரிபுரத்தில் தாமாஜி என்ற ஒரு டெய்லர். தினமும் சந்திரபாகா நதியில் காலையில் சென்று குளித்துவிட்டு அப்படியே விட்டலனை தரிசித்து விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு துணி தைக்க உட்காருவார். கோனை என்ற அவர் மனைவியோ பதி சொல் தவறாத பாவை. குழந்தை பாக்கியம் இல்லையாகையால் கோனை- தாமாஜி விட்டலனை வேண்டினார்கள். நம்பிக்கையோடு. ஒருநாள் விட்டலன் கனவில் வந்தான். " நாளை காலை நீ குளிக்க போவாயல்லவா, அப்போது பார் உன் மகன் உன்னை தேடி வருவான்" என்றான். தாமாஜிக்கு ஆச்சர்யம்.

மறுநாள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஆற்றின் போக்கிலே ஒரு மரப்பலகையின் மேல் ஒரு சிறு ஆண் சிசு மிதந்து வந்தது. விட்டலனின் பரிசு அல்லவா இது!! குதித்துக் கொண்டு ஓடினார் குழந்தையோடு தாமாஜி. "நாம்தேவ்" என்ற பெயர் சூட்டப்பட்டு அவன் வளர்ந்தான். அமைதியான, ஆன்மிக சிந்தனையோடு அப்பாவோடு தினமும் விட்டலன் கோவிலுக்கு தவறாமல் செல்வான். ஒரு நாள் தாமாஜி துணி வாங்க பக்கத்து ஊருக்குச் செல்லவேண்டியிருந்ததால் அன்று நாமதேவிடம் கோனை பிரசாதம் செய்து விட்டலனுக்கு கோவிலில் இதைக் காட்டி நெய்வேத்யம் அர்ப்பணித்து விட்டு வா " என்றுகொடுத்து அனுப்பினாள். தட்டை தூக்கிக்கொண்டு நாம்தேவ் விட்டலனிடம் சென்றான். எதிரே வைத்தான். "இது உனக்கு தான். சாப்பிடு" என்று சொல்லி தட்டுக்காகக் காத்திருந்தான். கடவுளுக்கு நெய்வேத்யம் அர்ப்பணம் என்றால் அவர் அதை சாப்பிடுவார் அது தான் வழக்கம் போலிருக்கிறது" என்று நாம்தேவ் நினைத்தான். ரொம்ப நேரம் ஆகிவிட்டது இன்னும் தட்டில் அப்படியே இருக்கிறது பிரசாதம்.
Dhamaji Temple at Mangalwedha, Maharashtra

"ஒருவேளை நான் லேட்டாக வந்ததால் விட்டலனுக்கு கோவமோ? ஏன் இன்னும் சாப்பிடலை? நான் என்ன செய்வேன். அப்பா ஊருக்கு போய்ட்டா. அம்மா லேட்டா தான் உனக்கு சாப்பாடு கொடுத்தா. நான் நடந்து வரதுக்கு வேறே லேட்டாஆயிட்டுது. ப்ளீஸ் கோவிச்சுக்காதே. சாப்பிடேன்".

பையன் அழ ஆரம்பிக்க, விட்டலன் அந்த பிஞ்சு உள்ளத்தின் பரிசுத்த பக்தியை மெச்சி அவனெதிரே வந்து அவனை அணைத்து முத்தமிட்டு பின் தட்டை காலி பண்ணினான். "இதை யாரிடமும் சொல்லாதே" என்று வேறே சொன்னான்.
வீடு சென்றதும் வெறும் தட்டை பார்த்த கோனை " எங்கேடா பிரசாதம் எல்லாம்?" என்றாள்.
"உம்மாச்சி சாப்டாச்சு"
"படவா பொய்யா சொல்றே நீயே முழுங்கிட்டு" நாலு சாத்து சாத்தினாள் கோனை.

மறுநாள் தாமாஜி வந்தவுடன் விஷயம் சொன்னாள். அவர் விவரம் கேட்க, நடந்ததையே சொன்னான் நாம்தேவ்.
"என்னடா இது, என்னால் நம்ப முடியவில்லையே. எத்தனை தடவை கேட்டாலும் அதையே சொல்கிறாயே. நாளை மறுபடியும் இது நடக்கிறதா என்று பார்ப்போம்"

தாமாஜி நாமதேவர் இருவரும் மறுநாள் பிரசாதத்தோடு விட்டலனிடம் செல்ல, நாம்தேவ் " விட்டலா வா வந்து சாப்பிடு என்றழைக்க "நான் உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன்" என்று விட்டலன் சொல்ல,
"இல்லை, நீ சாப்பிடறதை அப்பாவும் பார்த்தா தான் நான் சொன்னதை நம்புவா " என்று நாம்தேவ் சொல்ல, விட்டலன் வந்து சாப்பிட, அதிசயத்தில் அதிர்ச்சியுற்று தாமாஜி வந்து வீட்டில் கோனையிடம் இதைச் சொல்ல, இந்த அதிசய குழந்தை நாம்தேவ் விட்டலனின் வாரிசு என்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.

 
 
 The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment