Translate

Thursday 21 February 2013

விட்டலன் கதை 23

குழந்தை எங்கே?
by J.K. Sivan

நாம் பல சரித்திரங்களைப் படிக்கும்போது அதில் வரும் மனிதர்களின் காலம் சரியாக கணிக்கப்படாதது தெரியவரும். நேரம், காலம் தெரிந்து என்ன பண்ணப் போகிறோம்? நாம் அறியவேண்டியது அந்த மனித தெய்வங்களின் குணாதிசயம், அவர்களிடமிருந்து வெளிப்பட்ட பூரணபக்தி, இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த நேசம், அன்யோன்யம் இவையே நமக்கு மன நிறைவை அளிக்கும்போது, காரணமில்லாத வருஷம், மாதம், தேதி, கிழமை நம்மை திசை திருப்பத் தான் முயற்சிக்கும் அல்லவா? இந்த பீடிகையுடன் இன்று நாம் தொடரப்போவது கோரா கும்பர் என்ற மகானைப் பற்றிய சில ருசியான தகவல்கள்.

கோராகும்பர், அவர் அப்பா அம்மா, இருந்த ஊர், தகவல்கள் விவரமாக அறியமுடியவில்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு விஷயம் தருகிறார்கள். அவர் என்ன செய்தார் என்பது தான் முக்கியம். உழை மண் பிசைந்து சட்டி, பானை பண்ணும் உத்யோகமாயிருந்தாலும், காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை, மற்றும் இரவில் கனவிலும் சதா பாண்டுரங்கனே அவருக்கு நினைப்பு. அவர் வாயிலிருந்து எப்போதும் விட்டலன் நாமஸ்மரணை இடைவிடாது ஒலிக்கும். அவர் வீட்டு வாசலிலேயே ஒரு குழி வெட்டி, அதில் களிமண்ணைக் கொட்டி நீரோடு பதமாக அதை மிதித்து மண் தயார் பண்ணி, பாண்டங்கள் செய்வார்.

அவர் மனைவி சாந்திக்கும் அவருக்கும் ஒரு குழந்தை பிறந்ததது. குடும்பத்தில் ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்த கோராவுக்கு மகன் பிறந்த பிறகு அவரது அன்றாட விட்டல பக்தியில் எந்த மாற்றமும் இல்லை. அனால் சாந்திக்கு பரம சந்தோஷம். புத்திர சந்தான பாக்யத்தில்! குழந்தைக்கு இப்போது ஒருவயது இருக்கலாம்.

ஒரு நாள் அவளுக்கு எங்கோ வெளியே செல்ல வேண்டியிருந்தது. வேறு யாருமே இல்லையே, எவரிடம் குழந்தையை விட்டு செல்வது?. "குழந்தை உள்ளே தூங்கறான் பார்த்துகுங்கோ" என்று கோராவிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். கோரா அப்போது சேற்று குழியில் களி மண்ணை மிதித்துக்கொண்டிருந்தாரே தவிர அவர் மனம் பூரா பண்டரிபுரத்தில் விட்டலனோடு தானே இருந்தது! தலை மட்டும் சரி என்று ஆடியது. கொஞ்சநேரத்தில் குழந்தை எழுந்து விட்டது. தாயைத் தேடியது. காணோமே என்று மெதுவாக தவழ்ந்து வாசலுக்கு வந்து விட்டது. வாசலை ஒட்டி, குழியில் களிமண்ணில் அப்பாவைக் கண்டதும் தானும் அப்பாவிடம் போக குழிக்குள் விழுந்து விட்டது. மண்ணோடு மண்ணாக அந்தக் குழந்தையையும் சேர்த்து மிதித்தது கூட கோராவுக்குத் தெரியவில்லை.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய சாந்தா குழந்தையைத் தேடினாள். எங்கும் காணவில்லை. "குழந்தை எங்கே?"
"தெரியாதே, பார்க்க வில்லையே. உள்ளே தூங்குகிறானோ என்னவோ?"

சாந்தியின் கண் குழியில் ரத்தம் கலந்த மண்ணையும் நீல கலரில் குழந்தையின் துணியும் பார்த்து நிலைமை புரிந்தது. சேற்றுகுழியில் தாவினாள். உடலெல்லாம் சேறு பூசிய நிலையில் மிதிபட்டு இறந்த குழந்தையின் உடல் மண்ணோடு மண்ணாக இருந்தது. தாயின் சோகத்துக்கு வரம்பேது?

"நீ ஒரு கடவுளா? உன் நினைவிலேயே வெறி பிடித்தல்லவோ இந்த கோரா குழந்தையைக் கூட கவனிக்காமல் மிதித்துக் கொன்றுவிட்டார்." விட்டலனை சாடினாள் சாந்தி.

கோராவுக்கு இப்போது தான் என்ன நடந்தது என்றே புரிந்து பதறினார். ஆனால் விட்டலனை சாந்தி பழித்தது பெரும் கோபத்தை உண்டாக்க, தாவி அவளை அடிக்க நெருங்கினார்..

"உன் விட்டலன் மீது சத்யம். என்னைத் தொடாதே" சாந்தி கத்தினாள்..

‘ஒரு மனிதன் குழந்தையைக் கவனிக்காமலா இருப்பான்? குழந்தை கத்தியிருக்காதா? மண்ணுக்கும் ஒரு மனித உடலுக்கும் காலுக்கு வித்யாசம் தெரியாமலா போகும்?

இவ்வாறெல்லாம் கேள்விகள் எழலாம். இந்த கதையில் முக்யத்வம் அதுவல்ல.பக்தியில் திளைத்தபோது உலகம் மறந்துவிடுகிறது. விட்டலனோடு ஒன்றறக் கலந்த நிலையில் வேறு எதற்கும் இடமில்லை என்பது தான் உணரவேண்டியது.

காலம் சென்றது. புத்ரசோகத்தில் வாழ்ந்தனர் இருவரும். ஆனால் கோரா எப்போதும் விட்டலனோடு தான் இருந்தார் ஒருமுறை அவர் காலில் அடிபட்டு படுத்திருந்தார். அவர் மனைவி அவர் கால்களை பிடித்து விட நெருங்கியபோது, விட்டலன் மேல் அவள் சத்தியம் வைத்து என்னைத் தொடாதேஎன்றது எப்போதும் நினைவில் உள்ளதால் சாந்தியை தன்னைத் தொடுவதற்கு கோரா அனுமதிக்கவில்லை.

இந்தவிதமான இயந்திர வாழ்க்கை சாந்தியைத் துன்புறுத்த, தன் பெற்றோரிடம் சென்று அழுதாள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு வாரிசு உருவாக வேண்டுமானால் ஒரே வழி சாந்தாவின் சகோதரி காமியை கோராவுக்கு மணமுடிப்பது தான் என்று சாந்தா தீர்மானித்து தந்தையோடு வாதிட்டு அவரும் அதற்கு சம்மதித்து, கோராவிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ‘விட்டலன் இவ்வாறு நடக்கவேண்டும் என்று திட்டமிட்டால் அப்படியே நடக்கட்டும்’ என்று கோரா ஒப்புக்கொண்டு காமியோடு அவருக்குக் கல்யாணம் ஆகியது.

கல்யாணம் ஆனவுடன் சாந்தியின் அப்பா கோராவிடம் "என் இரு மகள்களும் தங்களுக்கு மனைவிகள். அவர்களிடம் எந்தவித வித்யாசமும் இன்றி நீங்கள் நடந்துகொள்ளவேண்டும்" என்று சத்யம் வாங்கிகொண்டார். கோரா என்ன செய்தார் தெரியுமா? சாந்தியிடம் எப்படி நடந்துகொண்டாரோ அவ்வாறே காமியிடமும்எந்தவித வித்யாசமும் இன்றி அவளை நெருங்காமல் தன்னைத் தொடாமல் பார்த்துக் கொண்டார்! ‘தலைவலி போய் திருகுவலி ஆகிவிட்டதே’ என்று விதியை நொந்தார் சாந்தியின் அப்பா.

விதி எப்படி எல்லாம் ஒருவர் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பது விளங்குமே! காமி, சாந்தி வாழ்க்கை எவ்வாறு சென்றது? அவர்களுக்கு குழந்தை பிறந்ததா? கோரா கும்பர் கொஞ்சமாவது மனதை விட்டலனிடமிருந்து அவர்கள் பக்கம் திருப்பினாரா? இதெல்லாம் மிகவும் ஞாயமான கேள்விகள் என்பதால் அடுத்த கதை நிச்சயம் அவற்றை தெரிவிக்கட்டும்.

 

        
                                            The writer can be reached at: jksivan@gmail.com

1 comment: