உண்மையை சொல்
by J.K. Sivan
Krishna Embracing His Devotee in Goloka Vrindavana, His Original Abode |
ஒரு பக்தன், ஏன், "கிருஷ்ணப்பிரியன்" என்ற பெயரையே வைத்துகொள்வோமே!!. தன் வாழ்நாள் பூரா பகவத் சிந்தனையிலும்
நாமஸ்மரணையிலும் இருந்துகொண்டே தன் உலகவாழ்க்கையில் உழன்றுகொண்டு இருந்தபோது அவனுக்கும் கடவுளுக்கும் ஒரு உடன்பாடு.
"எனக்கு ஒன்றுமே வேண்டாம். என்னோடு ஒருகணமும் பிரியாது இருந்தாயானால் அதைக்காட்டிலும் மேலான பரிசு எனக்கேது?"
"அவ்வளவுதானே, கவலைப்படாதே, நான் எப்போதும் உன்னுடனேயே ! திருப்தியா?" என கடவுளும் வாக்களித்தார்.
பக்தனின் பூலோக வாழ்க்கை ஒருநாள் முடிந்தது. நேரே பகவானையே அடைந்தான். சந்தோஷமாக இறைவனை நிழலாகத் தொடர்ந்தான். அளவளாவினான். ஒருநாள் அவர்கள் பேச்சு அவன் பூலோக வாழ்க்கை பற்றியதாக இருந்தபோது திடீரென்று கிருஷ்ணப்ரியனுக்கு ஒரு சந்தேகம். யோசித்தான்.
"என்ன திடீரென்று மௌனம்? என்ன சிந்திக்கிறாய்“ இறைவன் கேட்டார்.
“எனது பூலோக வாழ்க்கையில் நீ எப்போதுமே என்னோடு இருந்தாயா?”“ஏன் சந்தேகம்? இதோ பார் உன் வாழ்க்கைப் பாதையை”. இறைவன் கிருஷ்ணப்ரியனின் உலக வாழ்க்கைப் பாதையைக் காட்டினபோது, ஆரம்பமுதல் இறுதிவரை இரு ஜோடி கால் தடங்கள் தென்பட்டன.
நன்றாக உற்று பார்த்த கிருஷ்ணப்ரியன் “கிருஷ்ணா, என் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது.
என் கால்சுவடுகளுக்கு பின்னால் பல இடங்களில் ஒரு ஜோடி கால் சுவடுகள் காணோமே.” இதிலிருந்தே புரியவில்லையா நீ எப்போதும் என் பின்னே உறுதுணையாக இல்லை என்று?” என கிருஷ்ணப்ரியன் கேட்டான். இறைவன் வாய் கொள்ளாமல் சிரித்தார். “சிரித்து மழுப்பாதே, உண்மையை ஒப்புக்கொள்”
என்றான் கிருஷ்ணப்ரியன்.
கிருஷ்ணன் அமைதியாக பதிலளித்தார். "அடே அசடே, முன்னால் இருப்பது பின்னால் இருப்பது இருஜோடிகளும் உனதும் எனதும் தான். எங்கெங்கெல்லாம் ஒரே ஜோடி மட்டும் காண்கிறதோ, அதெல்லாம் வாழ்க்கையில் நீ துன்பமுற்ற காலத்தில் உன்னை சுமந்து நான் சென்ற பொழுது பதிந்த என்னுடைய காலடி சுவடு. புரிகிறதா?” என்று கேட்ட கிருஷ்ணன் பாதங்களில் சிரம் வைத்து கிருஷ்ணப்ரியன் நன்றி கண்ணீருடன் அக்கால்களுக்கு அபிஷேகம் செய்தான்.
***
The writer can be reached at: jksivan@gmail.com
No comments:
Post a Comment