Translate

Wednesday, 28 November 2012

கிருஷ்ணர் படம்
by J.K. Sivan
சேரன் எக்ஸ்பிரஸ் எப்போதும் கும்பலோடு தான் காட்சியளிக்கும். டிக்கெட் வாங்காதவன், தப்பான தேதியில் பிரயாணம் செய்பவன், குழந்தை என சொல்லி தோளுக்கு வரும் பையனை ப்ரீயாக பிரயாணத்தில் கூட்டி வருபவர், பேரும் வயதும் வித்யாசமாக உள்ள பிரயாணிகள், முதியோர் சலுகையில் பிரயாணம் செய்யும் ரெண்டும் கெட்டான்கள் டிக்கெட்டை மறந்து போயோ தொலைத்தோ விட்டு எங்கெங்கோ தேடும் பேர்வழிகள், எத்தனை விதமான நச்சு விஷயத்தையும் முகம் கோணாமல் முத்து குமார் சமாளிப்பார்.
அன்றிரவு ஸ்லீப்பர் கோச்சில் டிக்கெட் பரிசோதனை செய்யும் போது கீழே தரையில் ஒரு பர்ஸ் கிடப்பதை கண்டார். “யாருடையது இது?” என குரல் எழுப்பி அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தபோது நாற்பது ரூபாயும் புல்லாங்குழல் ஊதும் கண்ணனின் படம் ஒன்றும் மட்டுமேஇருந்தன. பயணிகளில் ஒரு வயதான மனிதர்அய்யா, அது என்னுடையது” என்றபோது,

உங்களுடையது தான் என்பதற்கு ஏதேனும் அடையாளம் சொல்ல முடியுமா?”
“கிட்டத்தட்ட நாற்பது ரூபாயும் ஒரு கிருஷ்ணன் படமும் உள்ளே இருக்கும் பாருங்கள்
“ஏனையா பர்சில் உங்கள் போட்டோ அல்லது அட்ரஸ் விவரம் எதாவது வைத்துக்கொண்டால் இது போன்ற சந்தர்பத்தில் உபயோகமாக இருக்காதா. ஏன் கிருஷ்ணர் படத்தை வைத்தீர்கள்?”
“அது பெரிய கதை உங்களுக்கு தேவையானால் சொல்கிறேன்!”
“சரி, சொல்லுமேன்!”
“இந்த பழைய பர்ஸ் என்னுடைய அப்பா உபயோகித்தது. அதில் என் அப்பா அம்மா படம் தான் முதலில் வைத்தேன். இளம் மிடுக்கில் கோட் சூட் போட்ட என் படம், அப்பா அம்மா படம் இருந்த இடத்தை பிடித்தது. பிறகு காதல் வயப்பட்டவுடன் காதலி படம் பர்சை நிரப்பியது. அவள் மனைவியானபிறகு எங்கள் இருவர் படம் பர்சை ஆக்ரமித்தது".
"ரெண்டு பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்கள் படம் எங்கள் கல்யாண படத்தை வெளியேற்றியது. என் பசங்க ரெண்டுபேரும் இப்போ கல்யாணமாகி எங்கோ வெளிநாட்டில் இருக்கிறானுங்க. அவங்களுக்கு என்னோடு பேசவே கூட நேரமில்லை. என் அப்பா அம்மா, என் மனைவி எல்லோரும் போய்விட்டார்கள்."
"அப்போது தான் என் அப்பா இந்த பர்சில் முதல் முதலில் வைத்திருந்த கிருஷ்ணர் படம் மீண்டும் அதன் இடத்தை பிடித்துகொண்டது.
இந்த கிருஷ்ணன்படம் நான் அடிக்கடி பர்ஸ் திறக்கும் போதெல்லாம் கண்ணில் படும். இந்த கிருஷ்ணன் தான் ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு புத்துணர்ச்சியும் தைரியத்தையும் தருகிறான். இந்த ஒரு போட்டோவை விட்டு வேறு எது எதுவோ இத்தனை வருஷங்கள் அர்த்தமில்லாமல் ஏன் வைத்துகொண்டிருந்தேன் என்று இப்போது தெரிகிறது. புத்தியும் வந்தது”

வண்டி ஜோலர்பெட் ஜங்ஷனில் நின்றபோது முத்துக்குமாரை அங்கிருந்த போட்டோகடையில் பார்த்தவர்கள் அவர் ஒரு அழகிய சிறுகிருஷ்ணன் போட்டோவை தன்னுடைய பர்சில் திணித்துக்கொண்டு அதை தனது கருப்பு கோட்டின் உள் பாக்கெட்டில் இருதயம் அருகே செருகி வைப்பதை கவனித்திருக்கலாம்!
The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment