Translate

Sunday, 18 November 2012


சுமை தாங்கி
by J.K. Sivan
Queen Kunti Prays to Lord Sri Krishna as He Returns to Dwaraka
 
வெற்றி! வெற்றி!. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடந்த யுத்தத்தில் தர்மம் வென்றது.

தர்மன் சக்ரவர்த்தியானான். பாண்டவர்கள் பக்கம் அனைவரும் சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தனர். ஹஸ்தினாபுரம் களைகட்டியது. வேத கோஷங்கள் முழங்கின. அனைவருக்கும் தான தர்மங்கள் கணக்கின்றி கிட்டியது மக்கள் எல்லோருக்கும் ஆனந்தம்.

அரண்மனையில் கோலாகல ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது மெதுவாக அங்கு நுழைந்தான் கிருஷ்ணன்.

அவனை பாண்டவர்கள் கட்டித் தழுவினர். நன்றிப்பெருக்கில் வார்த்தைகள் எவருக்கும் வரவே இல்லை. பாண்டவ சைனியத்தில் பங்கு கொண்ட அரசர்கள் எல்லோரும் விருந்தாளிகளாக சிலகாலம் இருந்து ஒவ்வொருவராக விடைபெற்று தத்தம் ஊர் போய் சேர்ந்தார்கள்.

கிருஷ்ணன் த்வாரகைக்கு திரும்ப ஆயத்தமானான். பாண்டவர்கள் அவனுக்கு பிரியா விடை கொடுத்தனர். அரண்மனையில் திரௌபதி குந்தி அனைவரிடமும் விடை பெற சென்றான் கண்ணன். குந்தியை சந்தித்தபோது

அத்தை, நான் விடை பெற்றுகொள்கிறேன்!”
“எங்கு போகிறாய்?”
“ஏன், என் ஊருக்கு தான் வேறெங்கு ?”
“கண்ணா! நீ எங்களை விட்டு செல்கிறாயா ?”
“அத்தை, என்ன பேசுகிறாய், நான் த்வாரகைக்கு திரும்ப வேண்டாமா?”
“எதற்காக?”
“எனக்கு அங்கும் கடமை இருக்கிறதல்லவா, அத்தை?”
“கண்ணா,” என்று உரக்க அழைத்து குந்தி தடாலென்று கீழே விழுந்தாள் .அவள் கண்கள் குளமாயின. அவளை தூக்கி நிறுத்தி ஆஸ்வாசபடுத்தி, கண்ணன்.
“ஏன் அத்தை அழுகிறாய்? எல்லோரும் சந்தோஷமாயிருக்க நீ மட்டும் ஏன் அழுகிறாய்? உன் பிள்ளைகள் மூன்று உலகத்தில் யாராலும் வெல்ல முடியாத சக்ரவர்த்திகள் , நீ ஹஸ்தினா புரத்துக்கு ராஜ மாதா! உனக்கு எதற்கு துக்கம்?”
“ஊர் உலகுக்கு நீ சொல்லும் சந்தோஷம் இருக்கலாம். எனக்கு நீ எங்களைப் பிரிகிறாய் என்ற எண்ணமே தாங்க முடியாத துக்கம் தருகிறது கண்ணா
“என்ன அத்தை இது. உன் பேச்சு விந்தையாக உள்ளது”!
“ஆம், கிருஷ்ணா, ஆம்” . என் மக்கள் மட்டுமல்ல நானும் என்றும் இதுவரை உன் குடை நிழலில் இருந்தோம் அதுவே முழு சந்தோஷத்தை தந்தது . எத்தனை சோதனைகள் எத்தனை துன்பங்கள் எத்தனை எதிர்ப்புகள் மனிதர்களால் தாங்க முடியாத கஷ்டங்களை நீயல்லவோ எங்களது சுமை தாங்கியாய் இருந்து தாயினும் மேலாக காத்தவன். உன்னைப் பிரிய என்னால் முடியாது. கண்ணா ! இத்தனை துன்பம் வந்தபோது நான் யாரை நினைத்தேன் உன்னையல்லவா. நீயன்றோ அவற்றை போக்கினவன்?”
“அத்தை, நீ ஏதேதோ பேசுகிறாய். என்மீது உள்ள பாசத்தினால் இதெல்லாம் உனக்குத் தோன்றுகிறது என நினைக்கிறேன்
“கண்ணா, நீ கண்டிப்பாக த்வாரகை போகவேண்டும் அல்லவா ?”
“இதில் என்ன சந்தேகம் அத்தை?”.
“எனக்கு ஒரு வரம் கொடேன்!”
“இன்னுமா வரம்”
“ஆமப்பா”
“என்னை இந்த குந்தி அத்தையை எப்போதும் துன்பப்படுவளாகவே ஆக்கிவிடு"
“ஏன்?”
“நான் துன்பம் அனுபவிக்கும்போது தான் உன்னை நினைத்துப் பழக்கமாகிவிட்டது அப்போது தான் நீ எப்போதும் என்னிடம் இருப்பாய்”

கண்ணன் சிரித்து விடைபெற்றான்.
***
                                                   The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment