Translate

Friday, 8 March 2013

விட்டலன் கதை 29

பசியும் பாபமும்
by J.K. Sivan 


நான் ஏற்கனவே நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறேனே கவனமிருக்கிறதா? நாமதேவரும், பண்டுரங்கனும் இணைபிரியா தோழர்கள். நீங்களும் நானும் எப்படி நேருக்கு நேர் பார்த்து பேசுவோமோ அவ்வாறே அவர்கள் இருவரும் ஒரு இணைபிரியா இனிய ஜோடி. எதிலும் இங்கும் விட்டலனையே காண்பவர் நாமதேவர்.
ஒருமுறை விட்டலனே "நாமதேவா எங்கும் எதிலும் நான் நிறைந்திருக்கிறேன் என்று நீ உணர்கிறாயா" என்று கேட்டபோது, "விட்டலா, நான் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன் ஒரு நிகழ்ச்சியை" என்று ஆரம்பித்தார்.

ஒரு தரம் நாமதேவர் விட்டல பஜன் பண்ணிகொண்டிருந்த இடத்தில் அனைவருக்கும் ரொட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. நாமதேவர் கண்ணை மூடி விட்டலனை பிரார்த்திக்கும் நேரத்தில் அவர் கையிலிருந்து ரொட்டியை அங்கே பசியோடு அலைந்து கொண்டிருந்த
ஒரு நாய் பார்த்துவிட்டு ஆவலோடு ஓடி வந்து அதை வாயில் கவ்விக்கொண்டு ஓடியது.

நாமதேவர் அந்த நேரம் பார்த்து கண்ணைத் திறந்தவர் நாய் ஒரு ரொட்டியை கவ்விக்கொண்டு ஓடுவதைப் பார்த்துவிட்டு, அதன் பின்னே ஓடினார். தன்னை ஒருவர் துரத்துவதை உணர்ந்த நாய் இன்னும் வேகமாக ஓடியது. விடவில்லை நாமதேவர் கூடவே ஓடி, கடைசியில் நாயை அடைந்து அதன் வாயில் இருந்த ரொட்டியை எடுத்து அதில் நெய்யைத் தடவி அதற்கே ஊட்டினார்! ஏன் என்றால் அந்த நாயில் விட்டலனை கண்டார்.

வெறும் ரொட்டியை எப்படி விட்டலனுக்கு அர்ப்பணிப்பது என்று அதில் நெய்யை நிறைய தடவி ருசியாக அர்பணிக்க அவருக்கு எண்ணம். “உலகில் எதிலும் உன்னைத் தவிர வேறே யாரையும் நான் காணவில்லையே, விட்டலா” என்றார் நாமதேவர் இந்த நிகழ்ச்சியை விவரித்து விட்டு.

அன்று கார்த்திகை ஏகாதசி. பாண்டுரங்கனுக்கு உகந்த நாள். நாமதேவர் பச்சைத் தண்ணீர் கூட பருக மாட்டார். உபவாசம். நாள் முழுதும் பஜனை. அந்த நேரம் பார்த்து ஒரு பிராமணர் கதவைத் தட்டினார்.
"வாருங்கள் உள்ளே. நீர் பருகுவீர்களா?
"வெறும் தண்ணியா? பசி காதடைக்கிறது. கொஞ்சம் சாதம் போடுங்கள்"
"இன்று இங்கு ஏகாதசி விரதம். கொஞ்சம் பழங்கள் வேண்டுமானால் ஏற்பாடுசெய்கிறேனே" என்றார் நாமதேவர்
"பழங்கள் எந்தமூலைக்கு. இன்னும் சற்று நேரத்தில் ஏதாவது உணவு கொடுக்கவில்லை யென்றால் என் மரணம் இங்கு நிச்சயம். பசியோடு வந்த ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் உன்னை சும்மா விடாதப்பனே
"அய்யா! எனக்கு நன்மை செய்தால் கிடைக்கும் புண்ணியமும், தீமை செய்தால் கிடைக்கும் பாவம் எதுவும் தெரியாதே"
"ஒய், நீர் பேசுவதைப் பார்த்தால் உமக்கு எதுவும் லட்சியம் இல்லை என்றே தோன்றுகிறது. "நான் பசியோடு மாண்டால் உமக்கு அக்கறை இல்லை, கொஞ்சமும் பரோபகாரம் கருணை இல்லை. வெறும் வறட்டு வேதாந்தம் தான் உம்மிடம் இருக்கு"
"இன்று ஏகாதசி. நீர் உணவு இல்லாமல் இறந்தால், அதனால் ஏதேனும் பாபம் எனக்கு உண்டென்றால் வந்து விட்டுப் போகட்டுமே" என்றார் நாமதேவர்.

அடுத்த கணம் கண் இருண்டு, தலை தொங்க அந்த கிழட்டு பிராமணர் மண்டையைப் போட்டுவிட்டார். நாமதேவர் விட்டலனை நினைத்து வேண்டிவிட்டு, அந்த கிழவர் உடலைத் தூக்கி சந்திரபாகா நதிக்கரைக்கு கொண்டு சேர்த்து, கட்டைகள் அடுக்கி தகனம் செய்ய கிழவர் உடலை அதன் மேல் கிடத்தி, அருகே தானும் படுத்துக்கொண்டு தீ மூட்டத் தொடங்கினார். அவர் மனைவி ஓடிவந்து தானும் அவர் அருகே படுத்து, தானும் அவரோடு உயிர்நீக்கத் தயாரானாள்.

தீ மூட்டிய சமயம், பாண்டுரங்கன் தோன்றி அவர்கள் அனைவரையும் மீட்டு அருளினான்

இறைவன் நம்மை எந்நேரமும் கண்காணிக்கிறான் நம் ஒவ்வொரு செயலும் கவனித்து நமக்கு நல்லதையே செய்பவன் என்பது புலனாகிறதே இதன்மூலம்.



                                                 The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment