Translate

Monday, 18 March 2013

Krishna Story
கொல்ல வந்த காளை
by J.K. Sivan
 
கிருஷ்ணனுக்கு ஆயிரம் நாமம். விஷ்ணு அம்சம் இல்லையா! சஹாஸ்ரனாமமுடையவர் அல்லவா கிருஷ்ணன்! பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தபடி வானத்தைப் பார்த்துக்கொண்டு மேகங்களையா எண்ணிக்கொண்டிருந்தார்? கிருஷ்ணனின் நாமங்களையல்லவா சொல்லிக் கொண்டு வந்தார். கிருஷ்ணனுக்கு கேசவன் என்று ஒரு பெயரும் உண்டு. அதை விவரிக்கு முன் கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் எடுத்த மற்றொரு முயற்சியை கொஞ்சம் பார்ப்போமா?
கம்சன் எப்படியாவது தேவகி பெற்ற எட்டாவது மகனைக் கொல்லவேண்டும், அவன் தன்னை கொல்வதற்கு முன் என்ற வெறியுடன் தான் பூதகியை அனுப்பினான். கம்சன் எண்ணம் ஈடேற வில்லையேஅவள் மாண்டாள். அடுத்து என்ன செய்வது என்று தலையைச் சொரிந்துகொண்டிருந்தபோதுதான், அறிஷ்டன் என்கிற அரக்கனின் நினைவு கம்சனுக்கு வந்தது. கூப்பிட்டனுப்பினான். விவரம் சொல்லி "கோகுலம் செல் எப்படியாவது அந்தச் சிறுவன் கிருஷ்ணனைக் கொன்று விட்டு, வெற்றியுடன் திரும்பி வா" என்று அனுப்பினான்.

அறிஷ்டன் யோசித்தான். "கோகுலமோ நிறைய கோபர்கள் வசிக்கும் இடம். பசுவை பராமரிக்கும் கோபாலர்கள் உள்ள இடத்தில் ஒரு மாடு போல் சென்றால் யாரும் தன்னை கண்டு பிடிக்கமுடியாதே. அந்த கிருஷ்ணன் பயல் யார் என்று தெரிந்து ஒரு மாடாகவே சென்று அவனை தீர்த்துக் கட்டுவது சுலபமாயிற்றே.சந்தேகமே வராதே" என்று முடிவெடுத்தான்.

எதிரே ஒரு மலை அசைவது போல் ஒரு காளை. திமில் முதுகில் அசைய கண்கள் சிவந்து ஹூங்காரம் செய்துகொண்டு கூரான கொம்புகளை நிமிர்த்திக்கொண்டு ஓடிவந்தது கண்ட பசுக்களும், மற்ற காளைகளும் ஓரம் கட்டின. கோபால சிறுவர்கள் "யாருடையது இந்தப் பொல்லாத காளை நமது ஊரில். இவ்வளவு கோபமான வெறிக்காளை! புதிதாக அல்லவோ இருக்கிறது?" என்று கவலைப்பட, அறிஷ்டன் அனைவரும் கிருஷ்ணா கிருஷ்ணா, "காப்பாற்று எங்களை" என்று கத்திகொண்டே அந்த சிறுவன் இருந்த இடம் வருவதைப் பார்த்துவிட்டான்.

"ஓஹோ! இவன் தான் கிருஷ்ணனா? இன்று தொலைந்தான்". காளை தன்னை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டான் கிருஷ்ணன். எதிரியை நோட்டம் விட்ட அறிஷ்டன், தலையைச் சாய்த்து, கொம்புகளினால் தரையைக் குத்தி பள்ளம் பண்ணினான்.
அவனது முன்னங்கால்கள் மண்ணைத் தோண்டின. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே பாய்ச்சலில் கிருஷ்ணனை நெருங்கிவிட்டான் அறிஷ்டன்.

காத்திருந்தது போல் தக்க தருணத்தில் அரிஷ்டனின் இரு கொம்புகளையும் லாகவமாக கிருஷ்ணன் அவனை ஒரு உலுக்கு உலுக்கி, அவனை 18 அடிகள் பின்னோக்கி தள்ளினான்.விழுந்த அறிஷ்டன் சுதாரித்துக் கொண்டு கடுங்கோபத்துடன் மீண்டும் ஒரு கத்தலுடன் கிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தான். இந்தமுறை கிருஷ்ணனின் பிடியிலிருந்து அவன் கொம்புகள் தப்பவில்லை. கோபம் கொதிக்கும் கண்களையுடைய அறிஷ்டன், கிருஷ்ணனை உற்று நோக்கி, அடுத்த கட்ட கொலை முயற்சிக்குத் தயாரானான். இதைக்கண்டு கிருஷ்ணன் அறிஷ்டனிடம் சொன்னான்.

"ஏ முட்டாள் காளையே! ஏன் வீணாக இந்த ஒன்றுமறியாத கோபாலர்களை விரட்டுகிறாய் மிரட்டுகிறாய். அறிஷ்டா! காளை உடலில் புகுந்துகொண்டிருக்கும் உன்னை எனக்கு நன்றாகவே தெரியும், இன்றுடன் முடியப்போகும் நீ உன் வேலைகளையெல்லாம் நன்றாகவே காட்டலாம். உன்னை மாதிரி அசுர அரக்க ஜன்மங்களை முடிக்கவே நான் ஸ்பெஷலாக வந்திருக்கிறேனே" என்று சொன்னதைக் கேட்ட அறிஷ்டன் ஒருகணம் நிதானித்தான்.

அவன், அரக்க குணம் மேலிட, பெரிய சப்தத்துடன் மீண்டும் கொம்புகளை நீட்டிக்கொண்டு கிருஷ்ணனை குடல் உருவ ஓடிவந்தான். இந்தமுறையும் கிருஷ்ணன் தயாராக இருந்த தனது பலம் மிக்க கைகளால் அவன் இரு கொம்புகளையும் பிடித்து அலாக்காக அவனைத் தூக்கித் தரையில் அடித்தான். தன் கால்களால் அவன் வயிற்றில் உதைத்தான். நுரை தள்ளி, நிலை குலைந்து, நகரமுடியாமல் அறிஷ்டன் தொபீலென்று விழுந்து திணறினான்

அப்பவும் அவன் சீற்றம் குறையாததால், கிருஷ்ணன் அவன் கொம்புகளில் ஒன்றைப் பிடுங்கி, அதன் கூர்மையாலேயே அவன் உடலைக் கிழித்து வதம் செய்தான். ரத்தம் சொட்டச் சொட்ட, கொஞ்சம் கொஞ்சமாக, சில கணங்களில் அறிஷ்டன் கதை முடிந்தது. நாமும் கதையை முடிப்போம்.

 
 
The writer can be reached at: jksivan@gmail.com 

1 comment:

  1. From: Dharmaraj T [mailto:t_dharmaraj35@yahoo.co.in]
    Sent: Monday, March 18, 2013 5:00 PM
    To: jksivan
    Subject: Re: ARISHTA THE DEMON



    அன்புள்ளம் கொண்ட ந்ண்பருக்கு,

    எடுத்துரைக்கும் கதையின் முகப்பும்

    உட்கருத்துக்களும் முடித்து விடை

    பெருவதும் என்னவென்று சொல்ல!

    தொடரும் உங்கள் பணியின் இனிப்பு

    தித்திக்கட்டும் எல்லோருக்கும்.





    அன்புடன்

    தி.தர்மராஜ்

    ReplyDelete