Translate

Monday, 11 March 2013

விட்டலன் கதை 32

பாப விமோசனம்
by J.K. Sivan

பாண்டுரங்கன் கதைகளில் பக்தர்கள் இல்லையென்றால் பாண்டுரங்கனே இல்லை என்று சொல்லலாம்.
எண்ணற்ற பக்தர்களின் மனத்தில் வாசம் புரிந்து கொண்டு அருளும் விட்டலனின் பக்தர்களில் ஒருவராக விஜயதாசர் இருந்தார் என்று பார்த்தோம். அவரது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கி கல்யாணம் செய்து கொண்டும், பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரு ஞானி என்று தான் அனைவராலும் போற்றப்பட்டார். அண்டை ஊரில் ஒரு ஜமிந்தார். அவருக்கு கொஞ்சம் ஆன்மீக விசாரங்களில் ஈடுபாடு உண்டு. ஒருநாள் ஆளனுப்பி விஜயதாசர் மறுநாள் காலை பத்து மணிக்கு தன்னை வந்து பார்க்குமாறு தெரியப்படுத்தினார்.
விஜயதாசர் கிளம்பிவிட்டார். நடந்து இரவில் ஜமிந்தார் ஊரை அடைந்தார். எங்கு தங்குவது? ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அந்த வீட்டில் ஒரு இளம் விதவை. ஊரில் கெட்ட பெயருடன் எல்லோராலும் இழிவாகப் பேசப்பட்டவள். தன் வீட்டுத் திண்ணையில் ஒரு புதிய மனிதர் தங்கியிருப்பதைக் கண்டு விஜய்தாசரிடம் பேச்சு கொடுத்தாள்.

"அய்யா, தாங்கள் எந்த ஊர்? இங்கு எதற்கு வந்தீர்?
" அம்மா நான் பண்டரிபுரத்திலிருந்து உங்கள் ஊருக்கு வந்துள்ளேன். உங்கள் ஊர் ஜமிந்தார் நாளை காலை பத்து மணிக்கு தன்னை வந்து சந்திக்கச் சொல்லியிருக்கிறார்"
"சாமி, நீங்கள் தயவு செய்து இந்த வீட்டில் தங்காதீர்கள். உடனே சென்று விடுங்கள்"
"ஏன் அம்மா நான் இந்த திண்ணையில் இரவை கழித்துவிட்டுச் செல்கிறேனே"
"ஐயோ, நான் எப்படிச் சொல்வேன். என் வீட்டில் இரவு தங்கினீர்கள் என்று ஊருக்குத் தெரிந்தால் உங்கள் மானம், மரியாதை எல்லாம் காற்றோடு போய்விடுமே!. சமூகத்தில் நான் ஒரு அவமானச் சின்னமாச்சே.!!"

விஜயதாசருக்கு புரிந்தது. சிரித்தார். "எனக்கு ஒரு கவலையுமில்லை. முடிந்தால் ஒரு டம்ளர் பால் கொடுப்பாயா?" அவள் சந்தோஷமாகக் கொடுத்த பாலைக் குடித்து விட்டு, திண்ணையில் தூங்கினார் விஜயதாசர்.
மறுநாள் அந்த குக்கிராமம் வம்பு வெள்ளத்தில் மூழ்கியது.
"இந்த விஜயதாசர் ஒரு வேஷதாரி. ஊரை ஏமாற்றுபவன்"
"அதெப்படிச் சொல்லலாம் அவரு ஒரு ஞானியல்லவா"
"என்னய்யா ஞானி? ஞானி என்றால் அவருக்கு ஞானத்திலேயே தான் தங்கிய இடம் தவறு என்று தெரியாதா?
"ஞானிக்கு வித்தியாசம் எல்லாம் கிடையாதய்யா"

ஜமிந்தார் காதுக்கு விஷயம் எட்டி அவருக்கு விஜயதாசர் மீது இருந்த மதிப்பு விலகியதால் ஆளனுப்பி அவரை அழைக்கவில்லை. தனது நித்ய பாராயணங்களைமுடித்துக் கொண்டு விஜயதாசர் பத்து மணிக்கு ஜமிந்தார் அரண்மனையை அடைந்தார். ஜமிந்தார் அப்போது யாரோ ஒரு பண்டிதரிடம் சாஸ்திரங்கள் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். விஜயதாசரை அலட்சியப்படுத்தினார்.
 
விஜயதாசர் நின்று கொண்டு அந்த பண்டிதரின் சாஸ்திர விளக்கம் கேட்டவர் அவர் தவறாக வியாக்யானம் செய்வது கண்டு "அய்யா தங்கள் கருத்து சரியில்லை" என்றார்.

"என்னய்யா ரொம்ப ப்ராஞ்யன் மாதிரி பேசறே உனக்கு சம்ஸ்க்ரிதம் தெரியுமா முதலில் அதைச் சொல். ஒண்னும் தெரியாத வெறும் கன்னடம் கொஞ்சம் தெரிஞ்சுண்டு என்னை விமர்சிக்கிறாயா. உனக்கு இந்த சாஸ்தரத்துக்கு விளக்கம் கொடுக்க யோக்யதை இருக்கா?

"சுவாமி, எனக்கு சம்ஸ்க்ரிதம் தெரியாது. எனக்கு இப்போது பாண்டுரங்கன் பஜனைக்குச் செல்ல வேண்டும். நேரமாகிவிட்டதே. வேண்டுமானால் வேறு யாரையாவது விட்டு உங்களுக்கு சாஸ்திர விளக்கம் சொல்ல வைக்கிறேன்."

சுற்று முற்றும் பார்த்த விஜயதாசர் அங்கு ஒரு சமையல்காரர் தண்ணீர் தூக்கிக் கொண்டு அடுக்களை செல்வதைப் பார்த்தார். அவரை அழைத்தார். அந்த மனிதர் பள்ளியின் நிழலைக் கூட மிதிக்காதவர். எழுத்து வாசனை இல்லாதவர். ஒரு பாமரன்.

அவரை வணங்கி "அய்யா விட்டலா. தங்கள் இந்த ஸ்லோகத்தின் சரியான பொருள் விளக்க வேண்டும்” என்று விழுந்து வணங்கினார் விஜயதாசர். சமையல்காரர் உடனே அந்த ஸ்லோகங்களை கட கடவென்று நெருடலில்லாமல் உச்சரித்து, பதம் பிரித்து, இலக்கணச் சுத்தமாக தங்கு தடையின்றி அனாயாசமாக வ்யாக்யானம் செய்தார். பல ஸாஸ்த்ரங்களிருந்தும் மேற்கோள் காட்டி அசர வைத்தார்.

இந்த அதிசயம் பண்டிதரையும் ஜமிந்தாரையும் திணறடித்து, அவர்கள் விஜயதாசர் ஒரு போலி ஞானி, நடத்தை கெட்டவர், என்று தவறாக எண்ணியதற்கு வருந்தி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.

விஜயதாசரோ விட்டலன் புகழ் பாடி, அவன் ஞானிகளை அனுப்புவதே பிறர் பாவங்களை அகற்றி அவர்களை புனிதப்படுத்துவதற்காகவே என்று விளக்கி ஸ்ரீ ராமன் அகலிகைக்கு சாப விமோசனம் செய்ததை மேற்கோள் காட்டினார்




                                                                    The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment