கருணாகரன்
by J.K. Sivan
கிருஷ்ணன் மயனை ஏவி கட்டவைத்த இந்திரபிரஸ்த மாளிகை ஈடற்ற பொலிவுடன் விளங்கி பார்ப்போரை நகரவிடாமல் கட்டி போட்டிருந்தது. இந்த அரண்மனையில் மகாராணி திரௌபதி. அவளுக்கு கிருஷ்ணா (கருநிற அழகி) என்று ஒரு பெயரும் மகாபாரதி(பாரதப்போரின் முக்ய காரண கர்த்தாவாகையால்) என்ற பெயரும் உண்டே. துரோணர் மீது இருந்த கோபத்தில் அவரை எப்படியும் பழி வாங்க துருபதன் ஒரு பெரிய யாகம் வளர்த்தான். அதில் தோன்றியவர்கள் இருவர். திரௌபதியும் அவள் சகோதரன் த்ருஷ்டத்யும்னனும்.
துருபதன் வைத்த ஸ்வயம்வர
விழாவில் மத்ஸ்யேந்தர போட்டியில் அர்ஜுனன் பிராமண வாலிபனாக பங்கேற்று போட்டியில்
வென்று அவளை வீட்டுக்கு அழைத்து சென்று, யுதிஷ்டிரர் உள்ளே ஏதோ வேலையாக இருந்த
குந்தியிடம் "அம்மா. நாங்கள் இன்று என்ன கொண்டுவந்திருக்கிறோம்
தெரியுமா" என்று கேட்க "எதுவானால் என்னடா ராஜா. அது உங்கள் ஐவருக்கும்
சொந்தம்" என்று அவள் பார்க்காமலேயே பதில் சொல்ல துரோபதி பாண்டவர் ஐவருக்கும்
மனைவியானவள். கிருஷ்ணனுக்கு திரௌபதியை ரொம்ப பிடிக்கும். அவர்கள் இருவரும்
அன்யோன்ய சகோதர சகோதரிகள்.
"திரௌபதி நீ யார் என்று சொல்லட்டுமா? முன்
பிறவியில் நீ நளாயினி, சிவபெருமானை வேண்டி ஒரு வரம் கேட்டாய் "14 ஸ்ரேஷ்ட
குணங்களையும் கொண்ட ஒருவனே எனக்கு புருஷனாக வரவேண்டும்" என்றதற்கு சிவன்
"பெண்ணே உன்னுடைய அடுத்த ஜன்மத்தில் நீ விரும்பிய 14 சத் குணங்களும் சேர்ந்த
ஐவராக உனக்கு கணவர்கள் வாய்ப்பர்" என்றதால் திரௌபதி, உனக்கு இந்த ஜன்மத்தில்
பாண்டவர்கள் கிடைத்தனர்” என்றான் கிருஷ்ணன்.
இந்த்ரப்ரஸ்தத்திற்கு துரியோதனாதியரும்
அழைக்க பட்டபோது அந்த மாளிகையின் மாய ஜாலங்களில் அதிசயித்தான். ஒரு பெரிய ஹால்
பார்ப்பதற்கு நீரோடும் குளமாக தோன்றியதை அதை தவிர்த்து மற்றொரு பகுதியில் கரியகல்
பதித்த தரை போல தோன்றிய இடத்தில் காலை வைத்த போது தலைகுப்புற அதில் விழுந்தான்.அது
தான் நீர் நிரம்பிய பகுதி. துரியோதனன் நீரில் "தொபுகடீர்" என்று
விழுந்து தவித்தபோது மேலே உப்பரிகையிலிருந்து பணிப்பெண்களும் த்ரௌபதியும் சிரித்து
விட்டனர். இதுவே துரியோதனனுக்கு அவள் மீது எண்ணற்ற வெறுப்பு கோபம் உண்டாக்கியது.
ஏற்கனவே பாண்டவர்கள் மேல் இருந்த அசூயை, பொறாமை ஆகியவற்றுக்கு இது மேலும் நன்றாக
எரிய எண்ணெய் வார்த்தது.
பாண்டவர்கள் வீரமும், புகழும், செல்வப்பெருக்கும்
துரியோதனனை நிலை குலைய வைக்கவே மாமா சகுனி தீட்டிய "போடு பகடை
பன்னெண்டு" சதி திட்டத்தில் பின்னர் யுதிஷ்டிரன் தோற்று, நாடு, நகரம், சொத்து சுதந்திரம் எல்லாம் இழந்து,
கடைசியில் தன்னையும் தன் சகோதரர்கள் மனைவி திரௌபதி அனைவரையும் பணயம் வைத்து
எல்லாமே இழந்தான்.அப்போது நடந்தது இது:
துரியோதனன் மட்டற்ற மகிழ்ச்சியில் சிரித்தான். சிரிப்பு
எங்கும் எதிரொலித்தது. அதில்பல வருஷங்களாக அவன் சேமித்து வைத்த பொறாமை, கோபம், வெறுப்பு அனைத்தும் வெளியாகியது.
"துச்சாதனா, உடனே போ! இந்த்ரப்ரஸ்தத்திற்கு போட்டியில் தோற்று பணயமாகி நம் அடிமையான, உடைமையான அந்த திரௌபதியை இங்கு
அழைத்து வா. வர மறுத்தால் அவளை பிடித்து இழுத்து வா" கட்டளையுடன் தம்பி சென்றபோது திரௌபதி ஒரே வஸ்த்ரத்துடன் இருந்தாள். வர மறுத்த திரௌபதி தலை முடியை பிடித்து இழுத்துக் கொண்டு சபைக்குள் நுழைந்தான் துச்சாதனன். துரியோதனனிடம் நீதி கேட்டு வாதாடினாள் திரௌபதி. அவன் காதில் ஏதும் ஏறவில்லை. பீஷ்ம பிதாமகர் மற்றும் இதரர்கள் அனைவரும் செயலிழந்து சிலையானார்கள். எங்கும் ஆதரவு இல்லை அவளுக்கு. “துச்சாதனா அந்த பாண்டவர்கள் கிரீடம், மேலாடை எல்லாம் உருவி அவர்களை அரை நிர்வாணமாக்கு. அடிமைக்கு அந்தஸ்து ஏது?" அவ்வாறே செய்யப்பட்டது.
"அடுத்து இந்த திரௌபதியின் வஸ்த்ரத்தை உருவி அவளை நிர்வாணமாக்கு".
திரௌபதியின் தீனக் குரல் அந்த நிசப்த சபையில் எதிரொலித்ததே தவிர எவராலும்
அவளுக்கு உதவி கிட்ட வில்லை.அவள் வீரமிக்க கணவர்கள் ஐவரும் கண்களில் நீர் வடிய தலை
குனிந்து தம் விதியை நொந்தனரே தவிர ஒன்றும் செய்ய இயலவில்லை. துச்சாதனன் வந்துவிட்டான் அருகே புடைவையை உருவ!.
எல்லோரும் எனை கைவிட்ட நிலையில் "கிருஷ்ணா
ஹே! தீனபந்து நீயே கதி இனி என்று இரு கைகளையும் சிரம் கூப்பி வணங்கினாள்.
துவாரகையில் ருக்மணியிடம் பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணன் திடீரென்று தன வலது கரத்தை
அபயஹஸ்தமாக காட்டினான். "நாதா என்ன இது திடீரென்று" என்று கேட்டபோது, கிருஷ்ணனின் அபய ஹஸ்தம் திரௌபதி
கண்ணுக்கு தெரிந்தது அவள் அரை மயக்கத்தில் இருந்தாள் அப்போது. இதற்குள் துச்சாதனன்
அவள் சேலையை உருவ, உருவ அது மேலும், மேலும் அவளை சுற்றி வந்துகொண்டிருந்ததே தவிர
முடிவில்லாமல் சேலை வளர்ந்தது."
களை த்து போன துச்சாதனன். சுருண்டு கீழே
விழுந்தான் (திரௌபதியின் வஸ்த்ராபஹரணத்தின் போது பீமன், அர்ஜுனன், திரௌபதி செய்த
சபதங்கள் நம் கதையில் அங்கங்கு வந்தாலும், தமிழ் படிக்க தெரிந்தவர்கள் மகாகவி
பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை ஒரு தடவையாவது கண்டிப்பாக படிக்கவும்.
படிக்காதவர்கள் பேசாமல் தெலுங்கு கற்றுகொள்ளலாம்).
இதற்குள் காந்தாரிக்கு விஷயம்
தெரிய வர திருதராஷ்டிரனுடன் சபையில் நுழைந்து திரௌபதியின் பதிவ்ரதம் மெச்சப்பட்டு
இரு வரம் பெறுகிறாள். பாண்டவர்கள் அடிமையல்ல
எல்லாம் இழந்த சுதந்திர மனிதர்கள். அவர்கள் மேல் வஸ்த்ரம் மீண்டும் பெறப்படுகிறது.
பன்னிரண்டு வருஷ வனவாசமும் ஒரு வருஷ அஞ்ஞாத வாசமும் அவர்கள் அனுபவிக்க உத்தரவு.
மேலே நடக்கும் விஷயங்கள் தான் அடுத்து வரும் கதைகளில் இடம்பெறுகிறதே இங்கு
அதைபற்றி சொல்வானேன்.? திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதும் கிருஷ்ணன்
ஆபத்பாந்தவன்-- அன்று யாருக்கோ அல்ல-- இன்றும் நமக்கும்! நான் நினைத்து பார்ப்பது உண்டு
கண்ணன் என்ற பெயர் கூட அனவரதமும் அனைவரையும் காக்கும் கண்களோடு இமை
மூடாமல் கண்காணிப்பதால் தானோ?
The writer can be reached at: jksivan@gmail.com
.
No comments:
Post a Comment