Translate

Sunday, 17 March 2013

விட்டலன் கதை 34

கஜானா காலி
by J.K. Sivan
 

 
 
இன்றைய கதையில் வரும் தாமாஜி பற்றி தெரியாவிட்டால் ஒன்றும் தப்பில்லை. பத்ராசலம் ராமதாசரை பற்றிய கதை தெரிந்தால் ராமதாசர் என்ற பெயரை மாற்றி, தாமாஜி என்று மனதில் கொள்ளலாம். ஏனென்றால் கதை கிட்டத்தட்ட அதேபோல் தான் உள்ளது.

மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து ரொம்ப தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் தான் தாமாஜி, பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நமது கதா நாயகனாதலால், விட்டல பக்தர் என்று சொல்லவேண்டியதில்லை. தினமும் விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து, பிறகு தான் சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை, நல்லொழுக்கம் எல்லாம் ரொம்ப பிடித்துவிட்டது. சுல்தானின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கும் பொறுப்பாளி இப்போ தாமாஜி தான்!
 
எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி மெலிந்து இறந்தன. பயிர், பச்சை எல்லாம் வாடிக் கருகியது. மக்கள் உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார். தாமாஜி அவரை அழைத்து உபசரித்து தன்னருகே அமர்த்தி உணவளித்தார்.

அந்த மனிதர் அழத்தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே வயிறார உண்கிறேன். பண்டரிபுரத்தில் என் வீட்டில் மனைவி குழந்தைகள் உணவின்றி தவிக்கிறார்களே என்று நினைத்தேன் அழுகை வந்தது" என்றார்.

ஒரு வண்டியில் சில அரிசி பருப்பு மூட்டைகளை ஏற்றி தாமாஜி அந்த பிராமணரோடு ஊருக்கு அனுப்பினார். பண்டரிபுரம் எல்லை தாண்டுவதற்குள் நிறையப்பேர் அவர் வண்டியை மடக்கி, மூட்டைகளை பிய்த்து, ஆளுக்கு கொஞ்சமாக எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். "எப்பிடி சாமா, உனக்கு இதெல்லாம் கிடைத்தது என்று கேட்டபோது அவர் சுல்தானின் அதிகாரி தாமாஜி பற்றிச் சொன்னார்.

சிலர் உடனே கிளம்பி மங்களவேடா ஊருக்கு வந்து தாமாஜியை பார்த்து பண்டரிபுரத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுவது பற்றிச் சொன்னார்கள். தாமாஜி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. பண்டக சாலையிலுள்ள எல்லா உணவுப் பொருள்களை எல்லாம் காலி செய்து பண்டரிபுரம் அனுப்பிவிட்டார்.

அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. சுல்தானின் உள்ளூர் அதிகாரியாக பண்டரிபுரத்தில் இருந்த மஜும்தார் மிகவும் ஆத்திரமடைந்தான். தாமாஜியின் செயல் அவனை கோபமடையச்செய்தது. நீண்ட கடிதம் சுல்தானுக்கு எழுதினான். சுல்தானால் நம்பமுடியவில்லை. தாமாஜியா இப்படிச் செய்தார்? விசாரணையில் இது உண்மையென்று தெரிந்ததும் ஆளை அனுப்பினான்.

"பண்டக சாலையில் இருந்த பொருள்களையோ அவற்றுக்கான பணமோ உடனே திரும்ப தரவேண்டும், இல்லையேல் சிறை பிடித்து அழைத்துவாருங்கள் அந்த தாமாஜியை" .கட்டளையோடு தாமஜியிடம் வந்தார்கள் சுல்தான் வீரர்கள்.

"என்னை சிறைபிடித்துச் செல்லுங்கள் என்னிடம் ஒன்றுமில்லையே" என்றார் தாமாஜி. அழைத்துச் சென்றார்கள் வீரர்கள் கால்நடையாக பீடாருக்கு. போகும் வழியில் பண்டரிபுரம் விட்டலன் கோவில் அருகே தாமாஜி வீரர்களிடம் "ஒரு நிமிஷம் பாண்டுரங்கனை தரிசித்து வந்துவிடுகிறேனே" என்று கெஞ்ச, அனுமதி கிடைத்தது.

ஓடினார் விட்டலனிடம். "இது தான் நான் உன்னைக் கடைசியாக தரிசனம் செய்வது. சுல்தான் எனக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்க போகிறான்". முடிந்தால் அடுத்த ஜன்மத்தில் சந்திப்போம்" என்று வேண்டினார்.

பீடாரில் சுல்தான் எதிரில் விட்டோநாயக் என்று ஒருவரைக் கொண்டு நிறுத்தினார்கள் அவன் அரண்மனைச் சேவகர்கள். விட்டோநாயக் சுல்தானிடம் ஒரு கடிதம் கொடுத்தான். அத்துடன் ஒரு பை நிறைய பொற்காசுகளும் கொடுத்தான். பையின் மேல் சுல்தானின் அதிகார முத்திரை இருந்தது. மங்கள வேடாவிலிருந்து வந்திருக்கிறது. "பண்டக சாலையிலிருந்த பொருள்களை அதிக விலைக்கு விற்ற லாப தொகை போக பண்டக சாலையில் வேண்டிய சாமான்களும் இருக்கிறது. பெற்றுக்கொண்டு ரசீது அனுப்பவும் " என்று தாமாஜி கைப்பட எழுதிய கடிதமும் பணமும் கண்ட சுல்தான் தாமாஜியை பற்றி அவதூறாகக் கூறிய மஜூம்தாரைக் கைது செய்ய ஆணையிட்டான். விட்டோனாயக்கிடம் ரசீதும் கொடுத்தான். வீரர்கள் புறப்பட்டனர்.

பண்டரிபுரத்திலிருந்து வீரர்கள் தாமஜியை கட்டி இழுத்து பீடாருக்கு வந்தனர். சுல்தான் முன்னால் நிறுத்தினர். சுல்தானுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. அவர்களை திட்டி, கட்டுகளை அவிழ்க்கச் சொன்னான். ஓடி வந்து தாமாஜியை அணைத்துக் கொண்டான்.

"என்னை மன்னித்துவிடுங்கள் தாமாஜி. மஜும்தார் பேச்சைக் கேட்டு உங்களை அவமதித்துவிட்டேன். உங்கள் நேர்மை எனக்கு தெரிந்தும், இவ்வாறு செய்தது என் தவறு. உங்கள் சேவகன் விட்டோனாயக்கிடம் பணத்துக்கு ரசீது தந்துவிட்டேன்" என்றான் சுல்தான்.

தாமாஜிக்கு தலை சுற்றியது. சேவகனா? விட்டோநாயக்கா? பணமா? ஒன்றுமே புரியவில்லையே!
"நவாப்! நான் அரசாங்க பொருள்களை எடுத்து தானம் செய்தது உண்மை. என்னிடம் பணமே இல்லை. எனக்கு யாரும் சேவகன் இல்லை. விட்டோநாயக் என்று யாரையுமே எனக்கு தெரியாது"

"என்னய்யா உளறுகிறீர் இதோ பாரும் நீர் கைப்பட எழுதிய கடிதம். இதில் என்னுடைய அரசாங்க முத்திரை குத்தியிருக்கிறீர்களே."

கடிதம் பார்த்ததும் புரிந்தது தாமாஜிக்கு. விட்டலனின் விளையாட்டு தெரிந்தது.

"என் வாழ் நாளெல்லாம் தேடியும் கிடைக்காத பாக்கியம், சுல்தானுக்கு எளிதில் கிட்டியிருக்கிறதே. விட்டலனே நேரில் வந்து காட்சியளித்திருக்கிறானே".

தாமாஜி வேலையை விட்டார். பண்டரிபுரத்தில் கடைசி மூச்சிருக்கும் வரை விட்டல நாம சந்கீர்த்தனத்திலேயே ஈடுபட்டார் என்று தான் உங்களுக்கே தெரியுமே, நான் எதற்குச் சொல்லவேண்டும்!

 



                                                                            The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment