Translate

Thursday, 14 March 2013

விட்டலன் கதை 33

ராமாயணம் முடிந்தது
by J.K. Sivan



Sant Eknath Maharaj

ஏகநாதர் ஒரு ஞானி, மராத்திக்காரர். கிருஷ்ணன் பாண்டுரங்கன் என்றால் போதும் அன்ன ஆகாரம் வேண்டாம். அந்த அளவு பக்தி மிக்கவர். அவரை பற்றி எண்ணற்ற அற்புத விஷயங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை இன்று உங்களிடம் உதிர்த்து விடுகிறேன். அவர் வசித்த ஊரிலேயே கிருஷ்ணதாஸ் என்று ஒரு வயதான பிராமண பண்டிதர் இருந்தார். அவருக்கு ஜோசியத்தில் அபார நம்பிக்கை. தனது வாழ்நாள் பூரா நிறைய ராமனை பற்றி விஷயங்கள் சேகரித்து ஒரு அருமையான ராமாயணம் எழுத கொள்ளை ஆசை கிருஷ்ணதாசுக்கு. வருஷக் கணக்காக சேர்த்த விஷயங்களை எழுத ஆரம்பித்து விட்டார். கிட்டத்தட்ட முடியும் தருவாய் அந்த ராமாயண கதை. இந்த நேரத்தில் தானா அவருடைய ஜோசியர் குரு அவரை பார்க்க வரவேண்டும்! அந்த ஜோசியர் சாமான்யர் அல்ல. சொன்னால் சொன்னதுதான் நடக்கும் என்றால் நடந்துவிடும், நடக்காதென்றால் என்றால் தலை கீழே நின்றாலும் அது நடக்காது. கிருஷ்ணதாசர் அவரிடம் தான் எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி சொல்லி "குருஜி, இன்னும் ஒரு 15 நாளில் ராமாயணம் எழுதி முடிந்துவிடும்" என்றார். ஜோசியர் சிரித்தார்.
ஏன்?”
ராமாயணம் முடிவது இருக்கட்டும். நான் வந்ததே உன்னிடம் ஒரு முக்ய விஷயம் சொல்ல தான். உன் ராமாயணம் முடிவதற்குள் நீ முடிந்துவிடுவாயே!”
என்ன சொல்கிறீர்கள்,சுவாமி?
"க்ரிஷ்ணதாசா, உனக்கு ஆயுசு இன்னும் மூணு நாள் தான் இருக்கு"

கிருஷ்ணதாசுக்கு பெரிய ஷாக். தன்னுடைய ராமாயணத்தை முடிக்க வேண்டுமே. என்ன பண்ணுவது என்று யோசிக்கும்போது தான் "அடாடா ஏக நாதரை மறந்தே போனேனே என்று தோன்றியது. ஓடினார் ஏகனாதரிடம். "அய்யா, ஒரு உபகாரம் பண்ணவேண்டும்"

"என்ன சொல்ல்லுங்கள், விட்டலன் அருளில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்"

கிருஷ்ணதாசர் கண்ணீரால் அவர் பாதங்களை அபிஷேகம் பண்ணிவிட்டு "சுவாமி எனக்கு
ஒரு அபிலாஷை. என் வாழ்நாள் பூரா சேகரித்த விஷயங்களோடு என்னுடைய இராமாயண புஸ்தகம் எழுதி முடிக்கப்பட வேண்டும்"
எழுதுங்களேன்
எப்படி அய்யா எழுதமுடியும் இன்னும் மூணேநாளில் நானே முடிந்துவிடுவேனே. நீங்கள் தான் மீதியை எழுதி முடிக்க வேண்டும்
எனக்கு உன்னை மாதிரி எல்லாம் எழுத தெரியாதே. நீயே எழுதப்பா
மூணு நாளில் முடியாதே.
சரி எத்தனை நாள் தேவை?”
குறைந்தது 12 நாளாகவாவது அவசியம்.
சரி, நீ எழுத ஆரம்பி"

கிருஷ்ணதாசர் ஏகநாதர் ஆஸ்ரமத்திலேயே தங்கி எழுதி தள்ளினார். 13 நாள் ஆகியது எழுதி முடிக்க. பரம திருப்தி அவருக்கு. எழுதியதை எல்லாம் ஏகநாதர் காலடியில் வைத்து வணங்கினார். எழுந்திருக்க வில்லை அவர்.

ஜோசியர் சொன்ன மூணு நாள் பதிமூணு நாளாக மாறியிருந்தது. ஜோசியம் பொய்க்க வில்லை. விட்டலன் ஏகநாதருக்காக 10 நாள் தள்ளி போட்டிருந்தான் அவ்வளவுதான்.

 
 
                                                                        The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment