Translate

Tuesday 5 March 2013

விட்டலன் கதை 27
 
வா என்னிடம்
by J.K. Sivan
 
Sant Shri Kanhopatra

விட்டல பக்தர்களைப் பற்றி நாம் அறியும்போது எப்படிப்பட்டவர்களை எல்லாம் அவன் கவர்ந்திருக்கிறான் என்று புரிகிறதல்லவா? பணமோ, பிறப்போ, வயதோ, ஆணோ,பெண்ணோ, படித்தவனோ, ஞான சூன்யமோ, விட்டலனுக்கு தேவை அவர்களது உண்மையான உள்ளன்பு ஒன்றே. அதுவே அவனை நெருங்க செய்கிறது. இன்றைய கதையில் ஒரு சோகம் கலந்த பக்தி வெளிப்படும்.

பண்டரிபுரத்திலிருந்து நடக்க முடியாத தூரத்தில் ஒரு கிராமம், மங்கலவேடா என்ற பெயரோடு.அதில் ஒரு பெண்மணி கூத்தாடியாக நல்ல பெயரில்லாமல் வாழ்ந்தாலும் அவளுக்கு ஒரு அபூர்வமான பரிசு அவள் பெண் கநோபாத்ரா. கநோபாத்ரா கிளியோபாத்ராவுக்கு அழகில் சளைத்தவள் இல்லை.
 
அம்மாவுக்கு தன் பெண் மிக அழகாக உள்ளதில் பெருமை ஒரு பக்கம். நிறைய அவளை வைத்து சம்பாதிக்கலாமே என்று எண்ணம் ஒரு பக்கம். அந்த ஊர் ராஜாவிடம் அவளை அழைத்துப் போய் ஆடிப் பாட வைத்தால் கை நிறைய சன்மானம் கிடைக்குமே என்ற ஆசை அவளை உந்தித் தள்ள பெண்ணை வா, ராஜா அரண்மனைக்கு போகலாம் என்று நச்சரித்தாள். கநோபத்ராவுக்கோ தான் அழகானவள். ஈடிணை இல்லாத தனக்கு ஜோடியாக ஒரு அழகானவனே கணவனாக வரவேண்டும் என்று தீர்மானம். ராஜா தன் அழகில் மயங்கி அந்தப்புரத்தில் நூறோடு நூத்தி ஒண்ணாகத் தள்ளிவிடுவானே என்று பயந்து அம்மாவின் ஆசையை நிராகரித்து வந்தாள்..

ஒரு நாள் அவள் வீட்டு வாசல் தெருவில் பாண்டுரங்க பக்தர்கள் சிலர் கூட்டமாக பஜனை பண்ணிக்கொண்டு செல்வதைப் பார்த்தாள். அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எங்கே போகிறீர்கள் என்று கேட்டாள்.
"பண்டரிபுரம், விட்டலனைப் போய் தரிசிக்க"
"விட்டலன் யார்? அப்படி என்ன அவரிடம் உங்களுக்கு ஈர்ப்பு?"
"விட்டலன் மகிமை, பெருமை, கம்பீரம், அழகு இதெல்லாம் சொல்லி மாளாது பெண்ணே!. நீயே பார்த்தால் தான் புரிந்து கொள்ளமுடியும். ஆயிரம் மகாலட்சுமி அழகு கொண்டவன் அவன்."
"நான் அவரைப் பார்க்க ஒத்துகொள்வாரா?. நீங்கள் அழைத்து செல்வீர்களா என்னை?"
"உனக்கு விட்டலனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலே போரும். உன்னை சந்தோஷமாக வரவேற்பார்"

கநோபத்ராவுக்கு இருப்புக் கொள்ளுமா? அடித்துப் பிடித்து, அம்மாவிடம் அடம் பிடித்து, கையில் ஒரு வீணையுடன் அவர்களோடு பண்டரிபுரம் கிளம்பிவிட்டாள். பண்டரிபுரம் போன கநோபத்ரா பேரை, ஊரை, உலகை எல்லாம் மறந்தாள். விட்டலனின் பேரழகில் தன்னை இழந்தாள். இவன் எனக்கே என்று கொண்டாள். வன் அழகை, பெருமையைப் பாடினாள், ஆடினாள். கோவிலே இருப்பிடமாகக் கொண்டாள்.

ஒருநாள் பண்டரிபுரம் ஆலயத்துக்கு சுல்தானின் மந்திரி ஒருவன் வந்தான்.கநோபாத்ராவின் அருமையை, பெருமையை அழகை எல்லாம் ஊருக்குத் திரும்பி சுல்தான் காதில் போட்டான். சுல்தானுக்கோ அவளது பேரழகு பற்றிய விஷயம் மட்டுமே காதில் ஏறியதால் ஆளை அனுப்பி அவளை அழைத்துக்கொண்டு வர உத்தரவிட்டான். சுல்தானின் வீரர்கள் பண்டரிபுரம் வந்தனர். தடுத்தவரைக் காயப்படுத்தி கநோபத்ராவை பிடித்து விட்டனர். அவள் எவ்வளவோ முயன்றும் அவர்கள் பிடியிலிருந்து மீள முடியவில்லை.
 
விட்டலா, உன்னை விட்டு என்னால் பிரியமுடியாது. நான் உன்னை சேர்ந்தவள். மற்றொருவன் என்னைத் தொட விட மாட்டேன்" என கதறினாள் . அவளைக் கட்டி, தூக்கி பல்லக்கில் போட்டுகொண்டு கிளம்பின வீரர்களைக் கெஞ்சினாள். உஹூம். பயனில்லை. விட்டலனை நினைத்ததும் அவன் அவளிடம் ஏதோ சொல்லியது மாதிரித் தோன்றியது. சிரித்தாள்.

"அய்யா, இனி நான் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். உங்கள் சுல்தானிடம் உங்களோடு சமத்தாக வருகிறேன். ஆனால் ஒரே ஒரு தரம், ஒரு தடவை மட்டும், பண்டரிபுரம் கோவிலுக்குள் சென்று பாண்டுரங்கனை தரிசனம் பண்ணி விட்டு வருகிறேனே" என்று மன்றாடினாள். காவலர் தலைவன் மனம் இளகி

"சரி, பெண்ணே, சீக்கிரமாக வா என்று கட்டவிழ்த்து விட்டான். பல்லக்கிலிருந்து குதித்து விர்ரென்று பறந்த அம்பு விட்டலனின் மார்பில் பட்டது. ஆம், கநோபாத்ரா விட்டலனைஅணைத்துக் கொண்டாள். கண்ணீரால் குளிப்பாட்டினாள்.

"இனிஎன்னைஉன்னிடமிருந்து பிரிக்காதே.நான் தாங்கமாட்டேன்என்றாள்.
"ஆம், நானும் உன்னைப் பிரியமுடியாது. வா, என்னிடம். என்னில் கலந்துவிடு.
என்னை உனக்கே தந்தேன்என்றாள் கநோபாத்ரா.


என்னில் நீ கலந்தாய்என்றான் விட்டலன். விட்டலனின் வாக்கு நிறைவேறியது.

கநோபத்ராவின் உடல் அவனை அணைத்தவாறே இருக்க அவள் உயிர் விட்டலனாகியது. விட்டலன் ஆணைப்படி அவள் உடல் ஆலயத்தினருகே புதைக்கப்பட்டது.

விடோபாவின் ஆலயத்தில் அவள் வ்ருக்ஷமாக இன்றும் இருக்கிறாள் நாம் சென்று வணங்கிட.


The writer can be reached at: jksivan@gmail.com 


 

No comments:

Post a Comment