Translate

Saturday 9 March 2013

விட்டலன் கதை 31

மீண்ட கையும் குழந்தையும்
by J.K. Sivan




விட்டலனே தனக்குப் பணி புரிந்து இத்தனை நாள் காப்பாற்றினான். அவனோடு ருக்மணி தாயாருமல்லவா தனக்கு மருமகள் போல் சேவை புரிந்தாள்!கதறினார் நன்றிப்பெருக்கோடு கோரா.
என்ன முட்டாள் நான்! இறைவனோடு இருந்தும் அவனை அறிந்துகொள்ளாத நீசன்.

கோரா, உங்கள் மேல் உள்ள அளவில்லாத நேசத்தாலும், உங்கள் தூய பக்திக்குக் கட்டுப்பட்டும் தான் பாண்டுரங்கன் தனது தேவியோடு உங்கள் சொத்தைக் காத்து உங்களிடம் கொடுத்து உங்களுடன் இங்கு சேர்ந்து இருந்து உங்கள் பக்தியை பூரணமாக அனுபவித்து மகிழ்ந்திருக்கிறான். எங்களோடு நீங்கள் அனைவரும் பண்டரிபுரம் வாருங்கள் என்று நாமதேவர் கோராவையும் அவர் மனைவியர் இருவரையும் பண்டரிபுரம் அழைத்து சென்றார்.

பண்டரிபுரத்தில் விட்டலன் ஆலயத்தில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ருக்மணி சமேதனாக பாண்டுரங்கன் சந்நிதியில், நாமதேவர் நீண்ட நாட்களுக்கு பிறகு விட்டலனை நேரில் கண்டு ரசித்து, ருசித்து, அருமையோடு நாமசங்கீர்த்தனம் பண்ணினார். சில சமயம் அவரே நிறைய ஜாலரா கொணர்ந்து அருகில் உள்ளவருக்கெல்லாம் கொடுத்து பஜனையில் சேர்ந்து பாட சொல்லுவது வழக்கம். அன்றும் தனது பையிலிருந்து நிறைய ஜாலராக்களை எடுத்து விநியோகம் செய்தபோது கோரா அருகில் வந்து அவரிடமும் ஒரு ஜாலராவை நீட்டினார். கையில்லாத கோரா அதை வாங்க முயற்சித்தபோது செடியிலிருந்து கிளை வருவது போல் அவர் தோளிலிருந்து இரு கைகள் நீண்டன! அவரே இதை அறியவில்லை! ஜாலராவை வாங்கிக்கொண்டு விட்டல கானத்தில் மூழ்கினார் கோரா.

கோராவின் வெட்டுண்ட கைகள் மீண்டும் உடலோடு இணைந்து அவர் பழையபடி ஆன அதிசயம் எல்லோராலும் ஆச்சர்யத்துடன் காணப்பட்டு அவர்கள் சிலையாயினர். கோராவின் மனைவி சாந்தா ஓடிவந்து அவர் காலில் விழுந்தாள். விட்டலன் சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாள். "ஹே விட்டலா, தெய்வமே! என் கணவனின் இழந்த கைகளை மீட்டுக் கொடுத்த பரமாத்மா, இழந்த என் மகனையும் நீ எனக்கு மீட்டுக் கொடுப்பாயா?” என்று மனமுருகிக் கெஞ்சினாள்.

மறந்து விட்டாயா நீ கிருஷ்ணனாக அவதாரம் செய்தபோது உனது குரு சாந்திப முனிவருக்கு அவர் வேண்டிக்கொண்டதற் கிணங்கி பன்னிரண்டு வருஷம் முன்னாள் இறந்த மகனை உயிர்ப்பித்துத் தந்தவனல்லவா. இந்தக் கதையை ஞானேஸ்வர் சொல்லி நான் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேனே. என் வாழ்விலும் உன் அற்புத லீலை நிகழட்டுமே” என்று மனம் நெக்குருகி வேண்டினாள்.

“அம்மா! அம்மா!” என்று ஒரு குழந்தை கூட்டத்தில் அழுதுகொண்டிருந்தது கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் யார் இந்தக் குழந்தை? ஏன் இப்படி தனியே தாயைப் பிரிந்து தேடுகிறது என்று அதை தூக்கிக் கொண்டு சந்நிதியருகே வந்தனர்.

சாந்தியைப் பார்த்து அம்மா அம்மா என்று அந்த குழந்தை அவளிடம் தாவியது. அவள் குழந்தை, சேற்றில் கோராவின் கால்களில் மிதிபட்டு இறந்த குழந்தை, "ஹரி" தான் அவன்! சாந்தி அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். கோராவின் கண்களில் ஆனந்தமும் நன்றியும் கலந்த கண்ணீர் திரையிட்டது.

நன்றி தெரிவிக்க வார்த்தையே இல்லை கோராவிற்கும் அவர் மனைவிக்கும். விட்டலனை மனதில் கெட்டியாக சுமந்தவாறே ஹரியோடு ஊர் திரும்பினர்.




The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment