Translate

Sunday 17 March 2013

Krishna Story

சாமியார் விஜயம்
by J.K. Sivan



இன்றைய கதை நிறைய பேருக்கு தெரிந்திருக்காத ஒன்று என்று அடித்து சொல்லலாம். ஏன் எனக்கே இன்று தான் தெரிந்தது உடனே அதை உங்களிடம் சொல்லாவிட்டால் எங்கே என்தலைவெடித்து விடப்போகிறதோ என்று தலையின் மேல் உள்ள ஆசையாலோ பாசத்தாலோ தான் கதை உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
கோகுலத்தில் அன்று ஜே ஜே என்று கூட்டம். வாயிலில் எல்லா வீட்டிலும் தோரணம். தெருவெல்லாம் பெரிய பெரிய கோலங்கள். எந்த வீட்டில் என்ன விசேஷம் என்று தெரியாதபடி எல்லார் வீட்டிலும் மகிழ்சிகோலம். ஊரே சந்தோஷ வெள்ளத்தில் திளைத்து கொண்டிருக்கிறது. மேள தாளங்கள் வாண வேடிக்கைகள், பெண்கள் சேர்ந்து இசை கோலாட்டம், கும்மி, கேளிக்கைகள். ஆண்களில் பலர் கூட்டம் கூட்டமாக பாடிக்கொண்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார்களே. இன்று என்ன விசேஷம் என்று ஊன்றி கவனித்தால் நந்தகோபன்வீட்டில் தான் கூட்டம் அதிகமாகவே காண்கிறது.

காரணம் என்னவென்றால் ஒரு குட்டிப்பயல் பிறந்திருக்கிறான் அந்த வீட்டில். ஊருக்கே செல்லம் அவன். அவனுக்கு பெயர் சூட்டு விழா என்பதால் வேத கோஷங்களும் மந்திர ஒலியும் வானை பிளக்கிறது. மந்தமாருதம், மெல்லிய பனிச்சாரல் போன்ற மெல்லிய மழை தூற்றல், இடையிடையே சுகமனான சூரிய வெப்பம், பறவை பசுக்கள் கன்றுகளின் இடைவிடாத அற்புத சப்தம். காற்றில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரும் இனிப்பு பலகாரங்களின் மூக்கை துளைக்கும் வாசம். இது கைலாசமா வைகுண்டமா என்று நம்மை நாமே கிள்ளி பார்க்க தோன்றும் ஆனந்த நிலை.

எண்ணற்ற பேர் காத்திருக்கிறார்கள் குழந்தையை காண. இது யார். ஒரு நீண்ட நெடிய ஆஜானுபாகுவான புலித்தோல் அணிந்த உடல் நெற்றி பூரா வெள்ளிய திருநீறணிந்த, உருத்ராக்ஷ கமண்டல ஜடாதாரி. அவரும் குழந்தையை காண காத்திருக்கிறாரே. ரோஹிணி உள்ளே சென்றாள் . யசோதா, யாரோ ஒரு சாமியார் கூட வந்திருக்காரடி, பார்க்கவே ரொம்ப பயமாக இருக்கிறதே.

ஒரு வேளை பிள்ளை பிடிக்கிற சாமியாரோ?” உள்ளே விட யோசனையா இருக்கே!!”.
அதெல்லாம் இல்லை, விடேன்.வந்து பார்க்கட்டுமே.
குழந்தை பயந்து போய்ட்டான்னா?”

குழந்தை இதற்குள் வீல் என்று அழுதது. முரண்டு பிடித்தது. யார் கையிலும் தங்கவில்லை. சமாளிக்க முடியவில்லை. நந்தகோபன் வேகமாக அருகில் வந்தான். வழி, வழி, குழந்தைய சூழ்ந்து கொள்ளாதீர்கள் கொஞ்சம் காற்று வெளிச்சம் விடுங்கள். தூக்கி வைத்துகொண்டான். மேலும் அதிகமாக கத்தியது. சரி கொஞ்சம் வெளியே எடுத்து போய் வேடிக்கையாக எதையாவது காட்டு.அழுகை நிற்கிறதா என்று பார்ப்போம் என்றார் ஒரு பெரியவர். இன்னும் சுரம் மேலே போனதே தவிர அழுகை நிற்கவில்லை.

யாரோ ஒரு ரிஷியோ முனிவரோ யோகியோ ஒரு பெரியவர் நிற்கிறார் அவரிடம் விபூதி வாங்கி தடவு என்றாள் ஒரு பாட்டி. ரோகிணி குழந்தையை வாங்கிகொண்டு சாமியாரிடம் சென்றாள். சாமியாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. குழந்தையை இரு கைகளிலும் வாங்கி இடி இடியென்று சிரித்தார் ஆனந்த சிவ தாண்டவமாடினார் குழந்தை அழுகையை சட்டென்று நிறுத்தினான். பொக்கைவாய் சிரிப்பு அனைவரையும் மயக்கியது. தனது சிறு கைகளால் சாமியாரின் ஜடையை பிடித்திழுத்தான்.

அனைவரும் சிலையாயினர் ஏன் ஆகமாட்டார்கள்? ஹரியும் ஹரனும் ஒன்றல்லவா? இருவரும் ஒருவரை ஒருவர் இணைபிரியாதவர்களாயிற்றே! ஹரி கிருஷ்ணனாக பிறந்தது தெரிந்து, அவனை பார்க்க ஹரன் ஆவலாக வந்ததை தெரிந்து ஹரி அழுது ஆகாத்தியம் பண்ணி வெளியே வந்து ஹரனை கட்டி தழுவி மகிழ்வதில் என்ன ஆச்சர்யம்!!

ரெண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள்!!. ஒருத்தர் தன்னை பக்தியுடன் புகழ்ந்து வேண்டினால் யோசிக்காமல் வரங்களை வாரி வழங்குபவர். எத்தனை அசுரர்கள் ராக்ஷசர்கள் அப்படி தவமிருந்து சிவனிடமிருந்து வேண்டிய எல்லா வரங்களையும் பெற்று அவற்றை துஷ்ப்ரயோகம் செய்தவர்கள். மற்றவர் அப்படி தவறாக அந்த வரங்களை பயன்படுத்துவோரை சாமர்த்தியமாக தண்டித்து, அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவராச்சே!



                                                          The writer can be reached at: jksivan@gmail.com

 

1 comment:



  1. -----Original Message-----
    From: amarsabesh@gmail.com [mailto:amarsabesh@gmail.com]
    Sent: Monday, March 18, 2013 2:59 AM
    To: jksivan@vsnl.com
    Subject: Re: HARA VIJAYAM

    மிக அருமை. இக்கதையை நானும் தங்கள் மூலம் தான் அறிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete