Translate

Thursday 7 March 2013

விட்டலன் கதை 28

மாமியார் கொடுமை
by J.K. Sivan 

சில பாண்டுரங்க பக்தர்கள் பட்ட கஷ்டங்களை படிக்கும்போதோ, கேட்கும்போதோ நமது மனம் சக்கையாக பிழியப்பட்ட கரும்பு போல் ஆகிவிடுகிறது. கரும்பு பிழிபட்டால் இனிய சாறு/ ஜூஸ் ஆவது மாதிரி பிழிபட்ட மனம் அன்பு கனிந்து, இரக்கம், தயை, பாசம், பக்தி எல்லாம் கூடி பதப்படுகிறது.
சக்குபாய் கதை நம்மை உருக்கினால் என்ன ஆச்சர்யம்?. கொடுமைப் படுத்தவென்றே ஒரு மாமியார், முட்டாள் கணவன், இரக்கம் இல்லாத மாமனார். இவர்கள் இடையே மனம் கோணாமல் சகித்து கொண்டுவிட்டலா நீ விட்ட வழிஎன்று வாழ்ந்தவள் அவள். ஒரு வரியில் சொல்வதானால், பண்டரிபுரத்தில் பரமஏழைகளானாலும் பிறர்க்குதவும் அன்பு தம்பதியர்க்கு விட்டலன் அருளால் வெகுநாள் கழித்து பிறந்த குழந்தை சக்குபாய். பொறுமை, எளிமை, மென்மை எல்லாம் கூடி பெற்றோரும், மற்றோரும் போற்ற வளர்ந்த பெண்.

ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் கரவீரபுரம் என்ற ஊரில் ஒரு கடைந்தெடுத்த வேதம் படித்த ஒரு கருமி. எச்சில் கையால் காக்காய் ஓட்டாத பரம்பரையில் வந்தவன். அவனுக்கேற்றபடி, ஒரு பெண் எப்படி இருக்க கூடாதோ அப்படி உருவெடுத்த கய்யாலி பாய் என்ற மனைவி. இருவர்க்குமே தர்மம், ஞாயம், நேர்மை, கடவுள் எதுவுமே இல்லாமல், இருவர் குணமும் வடிகட்டினாற்போல் ஒரு பிள்ளை. அப்பனும் பிள்ளையுமே அம்மாவுக்கு முன் வாய் திறக்க மாட்டார்கள்.

ஹிட்லரி கய்யாலிபாய் அப்படிப்பட்டவள். ஊரில் யாரும் இவர்கள் இருக்கும் திசையில் கூட நிற்காமல் ஓடுவார்கள். இப்படிப்பட்ட அருமையான பிள்ளைக்கு ஒரு நல்ல பெண் பார்க்க கருமி மாமா எங்கோ சுற்றியலைந்து பண்டரிபுரம் சக்குபாய் வீட்டுக்கு வந்தார். வந்தவர் யாராக இருந்தாலும் நன்றாக உபசரித்தார்கள் சக்குபாயின் பெற்றோர். அவளும் மரியாதையோடு அவருக்கு உபசாரங்கள் செய்ய, கருமி மாமாவுக்கு அவளைப் பிடித்துவிட்டது. மாமாவையோ அவர் குடும்பத்தையோ பற்றி அறியாத அந்த ஏழை பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு விட்டலன் அருளால் ஒரு பெரிய இடத்து சம்பந்தம் கிடைப்பதில் ரொம்ப சந்தோஷம்.தங்கள் பெண்ணாவது வசதியோடு வாழட்டும் என நம்பி திருமணம் முடிந்தது.

பன்னிரண்டே வயதான சிறுமி மாமியார் வீடு சென்ற நாள் முதல் நரகத்தில் வாழ்ந்தாள், தப்பு, தப்பு, வீ ழ்ந்தாள். விடியற்காலை முதல் நள்ளிரவு வரை வேலை வேலை வேலை இடையிடையே திட்டு, அடி. சாப்பாடு கிடையாது. அவளுக்கு ஒரே துணை அவள் அழுகை மட்டுமே. ஒரு நாள் நெல்லை உரலில் இடித்துகொண்டிருக்கும்போது யாரோ பசி என்று வாசலில் யாசகம் கேட்டபோது ஒருபிடி அரிசியை அவருக்கு போட்டுவிட்டதற்காக அன்று முழுதும் சித்திரவதை செய்யப்பட்டாள். அன்று முழுதும் அவளுக்கு உணவு தரப்படவில்லை.விட்டலா என்று மனதில் ஏங்கினாள் சக்குபாய்.

பல மாதங்கள் கழிந்தும் ஒரு சேதியும் பெண்ணை பற்றி தெரியாத பெற்றோர் பெண்ணை பார்க்க கரவீரபுரம் சென்றார்கள். பெண்ணின் கதி புரிந்து துடித்தார்கள். அவர்களை யாரும் வரவேற்கவில்லை. பெண் அடையாளம் தெரியாமல் இளைத்து வாடி வதங்கியிருந்தாள் .உடலில் உயிர் மட்டும் ஒட்டிகொண்டிருந்தது. பெண்ணை வீட்டுக்கு கூட்டிபோக செய்த முயற்சி தோல்வியுற்று, மனம் ஒடிந்து, “விட்டலா நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மனமுருகி அவர்கள் ஊர் திரும்பினார்கள். போகுமுன் ஒரு சிறு விட்டலன் சிலையை அவளிடம் கொடுத்து "இவன் உன்னை காப்பாற்றட்டும்" என்றனர்.

பெண், விட்டலனை மனதில் இருத்திக் கொண்டு சித்தரவதையில் மீண்டும் வாடினாள். மாமனார் அவள் ஒருத்தி உலகில் இருக்கிறாள் என்றே அறியவில்லை. மாமியார் என்னென்ன விதத்தில் அவளை துடிக்க வைத்து மகிழலாம் என்று பரிசோதனையில் சதா ஈடுபடுபவள். கணவனோ எதிலும் சம்பந்தமில்லாமல் அவளைப் பற்றிய கவலையோ, அக்கறையோ இல்லாத அம்மா கோண்டு. சக்குபாய்க்கு விட்டலன் ஒருவனே கதி. அந்த சிலை ஒன்றே அவளுக்கு ஆறுதல்.அதோடு பேசுவாள், சிரிப்பாள், அழுவாள் ."இன்னும் எத்தனை நாள் என்னை சோதிக்க போகிறாய். ஒரு தவறும் செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை விட்டலா"?

அவள் புடவைக்குள் ஒரு மூலையில் முடிபோட்டு அந்த சிலையை வைத்திருப்பாள். மாமியார் ராக்ஷசி பார்த்தால் பிடுங்கி தூரப் போட்டுவிடுவாளே!. கடவுளை நினைப்பதோ, துதிப்பதோ, கூட குற்றமாயிற்றே அந்த குடும்பத்தில். இப்படி சிலநாள் சென்றதற்கும் ஆபத்து வந்ததே. விட்டலனிடம் தன குறையை சொல்லிகொண்டிருந்த சக்குபாயை மாமியார் ஒருநாள் பார்த்துவிட்டாள். தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டு தன்னை பற்றிதான் அவமதிக்கிறாள் என்று நினைத்து ஒளிந்து கொண்டு பார்த்தபோது அவள் விட்டலன் சிலையிடம் பேசுவது தெரிந்து ஆங்காரத்தோடு ஓடிவந்து அந்த சிலையைப் பிடுங்கி தூரத்தில் போட்டு விட்டாள்.

விட்டலனை அவள் ஏசியது நாராசமாக சக்குபாய் காதில் விழ, "அம்மா என்னை என்னவேண்டுமானாலும் திட்டுங்கள், அடியுங்கள் என் விட்டலனை ஒன்றும் சொல்லாதீர்கள் என்று முதல் முறையாக பதில் சொல்லி கெஞ்சியது அவளுக்கு அன்று நிறைய போனஸ் அடி, உதையில் தான் முடிந்தது. ரத்தம் பெருக அடியினால் உடல் துடிக்க "விட்டலா, விட்டலா நீயே கதி" என்ற ஈனஸ்வரம் தான் சக்குபாயின் வாயிலிருந்து வெளிவந்தது. கொஞ்சம் கொஞ்சமாக செத்துகொண்டிருந்த அந்தப் பேதை பெண்ணுக்காக ஊரில் சில பெண்கள் ஆண்கள் வக்காலத்து, பரிதாபப் பட அது மேலும் அவளுக்கு துன்பத்தையே தந்தது. விட்டலன் சிலையும் போய்விட்டதால் மனதிலேயே அவனை நினைத்துப் பிரார்த்தித்தாள் சக்குபாய்.

ஒருநாள் ஆற்றில் துணி துவைத்து கொண்டிருக்கும்போது, சில பாண்டுரங்க பக்தர்கள் பஜனை செய்துகொண்டு செல்வதைப் பார்த்து உளம் மகிழ்ந்தாள். தன் நிலை மறந்து அவர்களோடு தானும் பண்டரிபுரம் செல்ல துணிந்தபோது பிடிபட்டாள். அடி உதை, தவிர அவளை ஒரு கம்பத்தில் கயிற்றால் கட்டியும் போட்டனர். அவள் மனம் முழுதும் அப்பவும் விட்டலா, விட்டலா! நான் உன்னை என்று மீண்டும் காணப்போகிறேன்" என்று தான் முனகியது.

அன்றிரவு சக்குபாய் போலவே உருவத்தில் இருந்த ஒரு பெண் அவள் முன் தோன்றி அவள் கட்டுகளை அவிழ்த்துவிட்டு "சக்குபாய் உனக்கு விட்டலனை பண்டரிபுரம் போய் பார்க்க ஆசையாயிருந்தால் நீ கிளம்பு. நீ திரும்பி வரும் வரையில் உன் வேலையை நான் இங்கு பார்த்துகொள்கிறேன்" எனக்கோ வீடு, வாசலில்லை. உருவத்திலும் உன்னைப்போலவே இருப்பது உனக்கு சாதகமல்லவா? என்றாள். சக்குபாய் பண்டரிபுரம் கிளம்பிவிட்டாள் அந்த பக்தர்களோடு.

மறுநாள் காலை மாமியார் சக்குபாய் கட்டப்பட்டிருந்த இடத்தில் வந்து பார்த்தபோது சக்குபாய் விட்டலா விட்டலா என்றே முனகிகொண்டிருப்பதை பார்த்து பயந்து போனாள். இவள் செத்துப் போய் இருப்பாள் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ?. இப்படி ஒரு பெண்ணுக்கு விட்டலன் மேல் பக்தியா? "போ உள்ளே வேலையெல்லாம் செய். நிற்காதே."

வேலை எல்லாம் நடந்தது. சக்குபாய் உணவு சமைத்தாள். அனைவரும் உண்டார்கள். எந்த வேலை செய்யும் போதும் விடாமல் விட்டலா விட்டலா என்ற நாமம் உச்சரிக்கப்படுவது எரிச்சலை மூட்டியது அவர்களுக்கு. சக்குபாய் அதை எக்காரணம் கொண்டும் நிறுத்தவில்லை என்பது ஒருவித பயத்தை அளித்தது அவர்களுக்கு.எந்த வேலையும் எள் என்னும் முன்னே எண்ணையாக நடந்தது. அவளை மாமியோ மற்றவரோ திட்டவில்லை, அடிக்க வில்லை இப்போது. அச்சத்தோடு பார்த்தார்கள்.

இதற்கிடையில் பண்டரிபுரம் சென்ற சக்குபாய் விட்டலனை தரிசித்தாள். தன்னை மறந்தாள் , வீடு, கணவன், உறவு எல்லாம் இழந்தாள். ஆலயத்திலே குடிகொண்டாள். திரும்பவே இல்லை விட்டலன் நாமம் ஒன்றே அவளிடமிருந்தது. அதை உச்சரித்துக்கொண்டே ஒருநாள் இறந்தாள். பண்டரிபுரம் முழுதும் அவள் பக்தியை மெச்சி அவளை வணங்கியது. சந்தனக்கட்டைகள் அடுக்கி கர்ப்பூரமிட்டு அவள் தகனம் நடந்தது.

கரவீரபுரத்தில் விட்டலன், சக்குபாயாக உழைத்துகொண்டிருந்தான். "நீ திரும்பிவரும் வரை நான் இங்கு இருக்கிறேன்" என்ற வாக்கு நிறைவேறி கொண்டிருக்கிறதே!!. இனி சக்குபாய் எப்படி வருவாள் எப்போது வருவாள்?" ருக்மணிக்கு கவலை வந்துவிட்டது. விட்டலனை கரவீரபுரத்திலிருந்து மீட்டு பண்டரிபுரம் கொண்டு வரவேண்டுமே? ருக்மணிக்கு வேறு வழியில்லையே?

சக்குபாய் உயிர் பெற்று கரவீரபுரம் சென்றால் தான் இது நடக்கும் என்பதால் சக்குபாய் உயிர்பெற்றாள், ஊர் திரும்பினாள். வழியிலே சந்திரபாகா நதிக்கரையிலே “"அந்த சக்குபாய்”” துவைப்பதை பார்த்து ஓடி "விட்டலா என்று அணைத்துகொண்டாள். ஊரே திரண்டு விட்டது இந்த அதிசயம் கேட்டு. சக்குபாயின் உன்னத பக்தி, அதன் காரணமாக விட்டலனே சக்குபாயாக வந்து அவள் வீட்டில் சகல வேலைகளையும் செய்தது இது அனைத்தும் அவள் வீட்டிலுள்ளவர்களை அடியோடு மாற்றி விட்டது. சக்குபாயின்மீது அளவற்ற அன்பும் பக்தியும் அவர்களுக்கு வந்தது. சக்குபாய் நடமாடும் கடவுளாக மதிக்கப்பட்டு கௌரவம் அடைந்தாள்.

சக்குபாயோ முன்புபோலவே மாமனார் மாமியார் கணவன், ஊரார், உற்றார் அனைவருடனும் பக்தியுடனும் மரியாதையுடனும் தான் நடந்துகொண்டாள். விட்டலன் நினைவோடு இரண்டாம் முறை இறக்கும் வரை தெய்வமாகவே வாழ்ந்து மற்றோர்க்கும் சேவை புரிந்தாள்.

 


                                                                      The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment