Translate

Sunday 13 January 2013

 

ஆண்டாளும் தோழியரும் (15)
   by J.K. Sivan


என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர் பின்னே கூடவே வந்த உங்களுக்கு என்ன விதத்தில் நான் நன்றி தெரிவிக்கமுடியும்? ஆண்டாள் என்ன சொல்கிறாளோ அதையே திருப்பி சொல்வது தான் சாலச்சிறந்தது.
"கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்? நீயார்? எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா.அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ,ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமை. எங்களுக்கு நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. இனி எத்தனை எத்தனை பிறவியோ அத்தனையிலும் நீ எங்களில் ஒருவன் நாங்கள் உன்னுடையவர்கள் புரிகிறதா?"

ஒரே வார்த்தையில் இறைவனோடு தன்னை பிணைத்து கொண்டு விட்டாள் ஆண்டாள். "கோதா" என்ற அவள் பெயரே "கோவிந்தா" என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே. அவன வணங்கும் நாம் அவளையும் சேர்த்தே தான் வணங்குகிறோம்.

இந்த 29 பாடல்களையும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகளாக ஆண்டாள் இந்த திருப்பாவையை எழுதவில்லை. தன்னை கிருஷ்ணன் காலத்திற்கு கொண்டு சென்று அன்று அங்கு வாழ்ந்த கோபர்கள் கோபியர்கள் எனப்படும் பசு கன்று மேய்க்கும் ஆயர் குல பெண்ணாக பாவித்து மற்ற சிறுமிகளுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்றும் கிருஷ்ணனின் அருளை பெற்ற சிறுமியாகவே இந்த திருப்பாவை பாசுரங்கள் அமைந்தன.

இந்த மார்கழி 29 கடைசி நாளான இன்று கடைசி 30வது பாசுரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் இந்த பாசுரங்களை எவர் தப்பின்றி உண்மையான பக்தியோடு இறைவன் மேல் பாசத்தோடு மார்கழி மாதம் பூரா இசைக்கிறார்களோ அவர்கள் அந்த மாதவன் கேசவன் என்றெல்லாம் ஆயிர நாமங்கள் கொண்ட கோவிந்தனின் அருளை,சதுர்புஜ நாராயணின் ஆசியை பெறுவர்.குறையொன்றும் இல்லாத கோவிந்தன் தாள் சேர்வர். இது நிச்சயம், உறுதி, நம்பலாம் என்றுமுடிக்கிறாள். திருப்பாற்கடலில் விளைந்த திரு அல்லவா அவள் -- ஆண்டாளாக அவதரித்து திருப்பாவை தந்தவள்!!.

நம் எண்ணம் முற்றும் அந்த நீலவண்ணனுக்கே உரித்தாகட்டுமே!!. நாளை நாம் ஆண்டாள் எப்படி அந்த மதுசூதனனை கைப்பிடித்து கணவனாக்கி கொண்டதாக கனவு கண்டாள் என்று விழித்துக்கொண்டே கனவை அனுபவிக்க போகிறோம்!!!




                                      The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment