Translate

Saturday 26 January 2013

விட்டலன் கதை 8

ஏகாதசி மாலை
by J.K. Sivan
 

போன கதையில் என்ன படித்தோம் ஞாபகமிருக்கிறதா? விட்டலன் பஹுலா என்கிற கிராமத்துக்கு வந்து குர்மதாசர் மேலே நகரமுடியாத நிலையில் இருந்தபோது காட்சியளித்தான் அல்லவா?.அதை கொஞ்சம் விவரிக்கலாமா?
அன்று ஆடி மாதம் ஏகாதசி. பண்டரிபுரத்தில் ஜே ஜே என்று கூட்டம். முன்னமே குர்மதாசர் விடோபா என்ற வியாபாரியிடம் "அய்யா எனக்கு ஏகாதசி புண்ய கால தரிசனம் கிடைக்க பாக்கியம் இல்லை நீங்கள் சென்று எனக்காக விட்டலனை வேண்டி "பாபி குர்மாவுக்கு கொடுத்துவைக்கவில்லை. என்னை அடுத்த ஜன்மத்திலாவது விட்டலன் தர்சனம் கிடைக்க அருளவேண்டும் என்று கேட்டதாக சொல்லுங்களேன்" என்றார்

இப்போது கதைக்கு வருவோம். பண்டரிபுரத்தில் பக்தர்கள் குழுமியிருக்க, பஜனை நாமாவளி கீர்த்தனங்கள் எல்லாம் செவியினிக்க மகான்கள் யோகீஸ்வரர்கள், ஞானிகள் எல்லோரும் விடலனை தரிசித்திருக்க அங்கு வந்திருந்த மகான்களில் முக்யமாக ஞானேஸ்வர், நாம தேவர், ஆகியோர் மட்டும் விட்டலன் மெதுவாக செங்கல்லிலிருந்து இறங்கி வெளியேறுவதை கவனித்தனர். "இவ்வளவு பக்தர்கள் இங்கு குழுமியிருக்க விட்டலன் எங்கே செல்கிறான்" என்று அவனைத் தொடர்ந்தனர். சந்திரபாகா நதிக்கரையில் விட்டலனை பிடித்து விட்டனர். "பாண்டுரங்கா, இங்கே இத்தனை பக்தர்கள் உனக்காக காத்திருக்க நீ எங்கே புறப்பட்டு விட்டாய்?" என்றார் நாமதேவர்.
"என்னுடைய ஒரு பக்தன் எனக்காக பஹுலாவில் காத்திருக்கிறான் அவன் ஒருவனுடைய பக்தி இங்கிருக்கும் அனைவருடைய பக்தியைவிட அதிகமானது. எனவே அவனை நானே தேடி செல்கிறேன்". "அப்படிப்பட்ட பக்தனை நாங்களும் தரிசிக்க வருகிறோம்" என்று அந்த இருவரும் விட்டலனோடு சென்றனர் குர்மதாசரைக் காண.
போகும் வழியில் ஒரு நந்தவனம் தென்பட்டது. அவர்கள் இருவரிடமும் விட்டலன் "நீங்கள் இங்கே இருங்கள். நான் அந்த நந்தவனத்துக்கு சென்று நீர் அருந்தி விட்டு வருகிறேன்" என்றான். இதற்கு முக்ய காரணம் ஒன்று இருந்ததே! அந்த மலர் வனத்தில் ஒரு மகான் வசித்து வந்தார் அவர் பெயர் தான் சவதாமாலி. அன்று விட்டலன் ஆலயத்துக்கு அவர் வரவில்லை. காரணம் மிகப்பெரிய மலர் மாலை ஒன்று தொடுத்துக்கொண்டு இருந்தார் ஏகாதசி அன்று விட்டலனுக்கு சாற்றுவதற்காக. மேலும், ஏகாதசி பஜனை நடத்தும் மகான்களுக்கும் அணிவிக்க நிறைய மலர் பறித்து அவற்றை மாலை கட்ட வேண்டுமே!
அவர் இந்த வேலையில் பிசியாக இருந்தபோது தான் விட்டலன் அவர் நந்தவனக் குடிலில் நுழைந்தான்.

"மாலி, நீ ஏன் இன்று என்னை காண வரவில்லை நிறைய பஜனை எல்லாம் அங்கு நடக்கிறதே" என்று கேட்ட விட்டலனை கண்டு திகைத்து விட்டார் மாலி. காலில் விழுந்து வணங்கினார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஆறாக ஓடியது. வாயில் வார்த்தை வரவில்லை. திக்கி திக்கி பதில் சொன்னார். "விட்டலா எனக்கு அவர்கள் பாடும் பஜனையைக் காட்டிலும் இந்த பல வண்ண மலர் மாலையை ஏகாதசி அன்று உனக்கு தொடுத்து சூடி மகிழ ஆசைப்பட்டேன். இரவு பகலாக அதை தயார் செய்து இதோ அது முடிந்தும் விட்டது. எடுத்துக்கொண்டு உன்னிடம் வருவதற்குள் நீயே வந்து விட்டாய்"
"என்னுடைய மாலை ரெடியாகி விட்டதால் அதை இங்கேயே எனக்கு போட்டுவிடேன்."

"ஒரு விஷயம் வெளியே ரெண்டு திருடர்களை நிற்க வைத்து விட்டு இங்கே வந்தேன். அவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ளவேண்டும். ஒரு இடம் இங்கே காட்டேன் " என்று சிரித்தான் விட்டலன். நாமதேவரும் ஞானதேவரும் அவனை மனதில் இருத்தி கொண்ட திருடர்கள் அல்லவா"
மாலி சொன்னார் : "விட்டலா, உனக்கு என்று ஒளிந்து கொள்ள இந்த உலகிலே நீ இல்லாத ஒரு இடம் கிடையாதே. நீ எங்கே இல்லை ?. நான் எதைக் காட்டுவது?".
"எனக்கு வேதாந்தம் எல்லாம் வேண்டாம். உடனே ஒரு இடம் காட்டு நான் ஒளிந்துகொள்ள?"
"என் ஹ்ரிதய குகையில் ஒளிந்துகொள்" என்று மாலி சொல்ல, விட்டலன் அவருள் மறைந்தான்

வெகு நேரம் காத்திருந்துவிட்டு ஞாநேஸ்வரும், நாமதேவரும் மாலியின் தோட்டத்திற்கு வந்து எங்கே விட்டலன் என்று கேட்டு தேடினர். உள்ளே, வெளியே, பின்னால், மேலே, கீழே என்று நாமதேவர் தேடி அலைய, ஞானேஸ்வர் அமைதியாக ஒரு மூலையில் நின்று மாலியையே உற்று நோக்கிகொண்டிருந்தார். ஞாநியாயிற்றே அவருக்கு தெரியாதா விட்டலன் லீலை?.

பதட்டத்துடன் தேடிய நாமதேவர் சிரித்துகொண்டிருந்த ஞாநேஸ்வரிடம் "சொல்லுங்கள் எங்கே விட்டலன்" என்றார்.
"இதோ கண்மூடி மௌனமாக அமர்ந்திருக்கிறாரே மாலி அவர் தான் விட்டலனை விழுங்கிவிட்டார்"
"விழுங்கிவிட்டார்" என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டு நாமதேவர் மாலியை தாக்க முற்பட்டபோது விட்டலன் தன் பக்தர் தாக்கப் பட விடுவானா? அவருள் இருந்து வெளி வந்தான். எல்லோரும் மகிழ்ந்து ஒருவரை ஒருவர்அறிந்து கொண்டு அணைத்துக்கொண்டு விட்டலனோடு பஹுலா கிராமத்துக்கு வந்தனர் குர்மதாசரை பார்க்க.

குர்மதாசரின் வேண்டுகோளுக்கிணங்கி விட்டலன் அங்கே சிலையாக நின்றானல்லவா! அந்த கிராமத்துக்கு அவர் பெயரால் குர்மியா என்றும் அழைக்கிறார்கள்

இந்த விவரத்தை நேற்று ஏன் சொல்லவில்லை என்றால் கதை குட்டியாக அல்லவோ பேருக்கேற்றபடி இருக்கவேண்டும்! இன்று அது வேறு கதையாக ஆகிவிடவில்லையா? அதி முக்யமாக இந்த ஏகாதசி கதை இன்று ஏகாதசி (22/01/2013) வந்தடையட்டுமே என்ற விருப்பமும் தான்!



The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment