Translate

Friday 14 December 2012


இது ஒரு அதிசயத்தின் கதை
by J.K. Sivan 
பீறே கவுடாவுக்கும் பீச்சம்மாவுக்கும் பிறந்தவன் திம்மப்பா. திம்மப்பாவுக்கு கிருஷ்ணகுமாரியின் மீது மோகம். அவளை எப்படியாவது அடையவேண்டும். ஆனால், வேறொருவன் போட்டிக்கு இருந்தானே!. இருவருக்கும் கொலை சண்டை.
திம்மப்பாவுக்கு கிருஷ்ணனிடம் எல்லையில்லாத பிரேமை. ஆதலால் திம்மப்பாவுக்கு "வேண்டாம் சண்டை. விட்டுக்கொடு அவளை" என்றான் கிருஷ்ணன். கிருஷ்ணகுமாரி மீது இருந்த ஆசை கிருஷ்ணன் சொன்னதை நிராகரிக்க வைத்தது. பலன்? சண்டையில் தோற்று உயிர் தப்பியதே கிருஷ்ணன் அருளால் தான்.
கிருஷ்ணன் சொன்னதை கேட்காமல் போனோமே என்ற தாபம் திம்மப்பாவை அடியோடு மாற்றியது. அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணபக்தர் வ்யாசராஜர் ஊருக்கு அப்போது விஜயம் செய்தார். பஞ்சு நெருப்போடு இணைந்துவிட்டது . திம்மப்பா இப்போது கனகதாசா ஆனார். கிருஷ்ண ஸ்மரணையில் திளைத்தார். எண்ணற்ற கிருதிகளை கண்ணன் மேல் இயற்றினார், பாடினார், சமூக சீர்திருத்த சேவை, வேதாந்தம் ஆகியவற்றிலும் ஈடுபட்டார் சிறந்த கிருஷ்ணா பக்த துறவியானார்.
கிருஷ்ணனை தரிசனம் செய்ய அவரது ஆவல் அவரை சுண்டியிழுக்க உடுப்பி சென்றார். கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. ஏன்? பிறவியில் மேல் வகுப்பு இல்லையாம்? கிருஷ்ணா என் மனத்தில் உள்ள உன்னை வெளியே இங்கு கோவிலில் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்று பிரயாசை பட்டார். உள்ளே செல்ல முடியாது. எப்படியோ மெதுவாக உள்ளே நகர்ந்துவிட்டார். யாரோ பார்த்து முறையிட நிரவாகத்தார் குற்றம் செய்ததற்காக அவர் விழிகளை குருடாக்க கட்டளையிட்டனர். அவரது தேனினுமினிய பாடல்களை கேட்டு தண்டனையின்றி அவரை கோவிலை விட்டு வெளியேற்றினார்கள்.
அவர் கோயிலின் பின்னே சென்று சுவற்றின் பின் நின்றுஹே. கிருஷ்ணா!நான் உன் பக்தனல்லவா? எனக்கு உன் தரிசனம் கிடைக்கவில்லையே. பிறவிப்பயன் என்னை உன் தரிசனம் கிட்டாமல் செய்கிறதே!” என குமுறினார்
இங்கு தான் இப்போது தான், அந்த அதிசயம் நிகழ்ந்தது. கிருஷ்ணன் கர்பக்ரஹத்தில் கிழக்கே வாசலை பார்த்து நின்றவன் மேற்கு பக்கமாக திரும்பி சுவற்றை பார்த்து நின்று கொண்டான்.. கர்பக்ரஹ பின் சுவர் பிளந்தது. பிளவின் வழியே சுவற்றுக்கு பின்னால் விரட்டப்பட்ட கனக தாசரை பார்த்தவாறு கிருஷ்ணன் நின்று கொண்டான். கனகதாசருக்கு திவ்ய தரிசனம் கிட்டியது. பிளந்த சுவர் ஒரு ஜன்னலாக மாற்றப்பட்டு (கனகன கிண்டி என்று பெயர்) இன்று வரை கிருஷ்ணனை உடுப்பியில் அந்த ஜன்னல் வழியாகவே தரிசனம் செய்கிறோம். தவறு செய்த அனைவரும் கனகதாசர் காலடியில் விழுந்தனர் என்பது எல்லா கதைகளிலும் வரும் ஒரு வழக்கமான வாக்கியம். ஆனால் அன்று முதல் நினைத்த போதெல்லாம் கிருஷ்ணன் கனகதாசர் முன் தோன்றினான். நாம் எப்படி ஒருவரை யொருவர் பார்க்கிறோமோ அவ்வாறே கிருஷ்ணனும் பக்தரும் சந்திப்பது வழக்கமாயிற்று. இறைவன் பக்தனின் சேவகனல்லவா!

        



No comments:

Post a Comment