Translate

Saturday 15 December 2012

கண்ணனின் குழல்
by J.K. Sivan


கிருஷ்ணன் யமுனையில் ஆயர்பாடி சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தான். கரையில் அவர்கள் வஸ்திரங்கள். கிருஷ்ணனுடைய புல்லாங்குழல் அவன் ஆடைகளுடனும், மணி மாலைகளுடனும் கலந்து அவனுக்காகக் காத்திருந்தபோது இது நிகழ்ந்தது.

“நம் அனைவரிலும் யார் விலையுயர்ந்தவர்கள், யாருக்கு மதிப்பு ஜாஸ்தி?”
கிருஷ்ணனுடைய பீதாம்பரம் தான் தான் விலையுயர்ந்தவன், தனக்கே மதிப்பு அதிகம் என்று கர்வத்தோடு இதைக் கேட்டது. மணிமாலை சொல்லியது. “இது ஆயர்பாடி கோபியர்கள் எங்கிருந்தெல்லாமோ சேகரித்து கோர்த்து கிருஷ்ணனுக்காக செய்தது. இதற்கு மதிப்புப் போடமுடியாது”. புல்லாங்குழல் பேசாமலேயே இருந்தது.
“இந்த மூங்கில் குழாய்க்கு என்ன மதிப்பு போடலாம்?” என்று வஸ்திரம் மணிமாலையைக் கேட்டது.
“எதாவது இருந்தால் தானே போடுவதற்கு” என்று இரண்டும் கேலியாக சிரித்தன.
அருகில் மரத்தடியில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தவருக்கு இந்த சம்பாஷணையை அறிய முடிந்தது.
“மதிப்புப்பற்றி பேசும் மதியிலிகளே, இதைக் கேளுங்கள்! நீங்கள் நினைப்பது போல் இந்த மூங்கில் குழாய், புல்லாங்குழல் அற்பமானதல்ல. கண்ணன் குழல் இசைக்காத போதும்,மற்ற பிள்ளைகளோடு விளையாடும்போதும், ஆவினங்களிடம் கோபியர்களுடனும் அவன் சல்லாபிக்கும்போதும், அவன் இடுப்பில் அது ஏன் எப்போதும் குடிகொண்டிருக்கிறது? அவன் அதை ஏன் தனக்குப் பிடித்த பொருளாக உபயோகிக்கிறான் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?”
அவன் கையிலிருக்கும் இந்தக் குழல் தான் நாம் அனைவரும். இந்த குழலில் எட்டு துளைகள் இருக்கிறதே, அதுவே நம் 8 உறுப்புகள் - கண்கள், காதுகள் மூக்கு, நாக்கு, சருமம், புத்தி, மனம், அஹங்காரம் (இது தான் நான் மற்றவனைக் காட்டிலும் வேறானவன் என்று நினைக்க வைக்கிறது)”

கிருஷ்ணன் வாசிக்காதபோது வெறும் காற்று உள்ளே நுழைந்து வெளியேறினால் ஏதோ ஒரு சப்தம் தான் வரும், இசை வராது. நம்மைக் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்து அவனே வழிகாட்டி என உணர்ந்தால் நம்மில் அபூர்வ நாதங்கள் தோன்றும். அதுவே அவன் வாசிக்கும் இசை. நாம் வெறுமையுடன், அவன் மூலம், இயங்கினால் நம்முடைய, கோபம், தாபம், நேர்மையின்மை, வெறுப்பு, அசூயை, எல்லாம் காலியாகி, அவன் நம்மை உபயோகித்து இசைக்கும்தெய்வீகம்” நமது வாழ்க்கை ஆகிறது. இதுவே புல்லாங்குழல் தத்துவம். மஹா பெரிய ஞானிகளும் முனிவர்களும் ரிஷிகளும் இத்தகைய புல்லாங்குழல்கள். அவர்கள் மூலமே நாம் மேன்மையுறுகிறோம். பரமானந்தம் பெறுகிறோம்.”

இதைக்கேட்ட புல்லாங்குழல், அமைதியாக கண்ணனின் வரவுக்காகக் காத்திருந்தது.
இனியாவது நம்மை அவனது புல்லாங்குழலாக மாற்றிக்கொள்வோமே!                                                    
                                                   The writer can be reached at: jksivan@gmail.com

 

No comments:

Post a Comment