by J.K. Sivan
“உடல் தான் இங்கிருந்ததே தவிர மனசெல்லாம் அவன் மேலேயே. பாவி, நான் கொடுத்து வைக்கல்லியே என் கஷ்டம் வேறெவருக்கும் வரவேண்டாம். தனியளாகி விட்டேனே. இருந்தும் இல்லாதவளாகினேனே. இந்த தாய்க்கு ஏழும் பிறந்து ஒட்டாமல் போனதால், எட்டாவதாக நீ பிறந்து எங்கோ வாழ்ந்து எனக்கு எட்டாதவனாகவே போய் விட்டாயோ? கிட்டா என்று உன்னைக்கூப்பிடுவது கூட நீ எட்டாமலே இருப்பதாலோ?” அவனைப் பற்றி அவன் விஷமங்களைப் பற்றி, அவன் நண்பர்களைப் பற்றி, அவன் விரும்பியவற்றைப் பற்றி, ஏன் எங்கும் எதிலும் அவனையே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேனே தவிர அவனை நெருங்க முடியவில்லையே! இது கொடுமையிலும் கொடுமையல்லவா? ஒவ்வொரு முறையும் அவன் பற்றிய ஏதாவது செய்தி வராதா என்று கண்ணிமைக்காமல் காத்திருந்தே என் வாழ்க்கை முடியப்போகிறதா? எங்கிருந்தாலும் அவன் நன்றாகவே இருக்கட்டும். அவனை இரவும் பகலும் காத்து வளர்க்கும் அவர்கள் நன்றாக இருக்கட்டும். அவன் சந்தோஷம் ஒன்றே என் சந்தோஷம்.
எனக்கு எதற்கு இந்த துக்கம், அவன் தான் நன்றாக வளர்கிறானே, விளையாடுகிறானே! குழல் ஊதுகிறானாம், பசுக்கள் கன்றுகள் எல்லாம் கூட அவன் பின்னாலேயே அவன் குழலோசையில் மயங்கி அவனை தொடர்கின்றனவாம். நான் காதிருந்தும் செவிடாயிற்றே! என்று எங்கு அவன் குழலோசையைக் கேட்பேன்! பேருக்குத் தான் நான் பெற்றவள்! ஊருக்குத் தான் நான் பத்து மாதம் சுமந்த தாய்! அவன் குரல் கேட்காத செவிடி அவனை காணாத குருடி” தேவகி குமுறினாள், குமைந்தாள்.
கண்ணன் அவள் குறை தீர்க்கத் தீர்மானித்து விட்டானே! “பொறுத்திரு தாயே, காலம் கை கூடி வரப்போகிறது. உன்னைச் சிறை மீட்பேன். ஆனால் நான் உன் மனச்சிறையில் என்றுமிருப்பேன் திருப்தியா” என சங்கல்பித்தான் கண்ணன்.
கிருஷ்ணனும் பலராமனும் கம்சனைக் கொன்று தேவகி வசுதேவர் சிறை மீட்டனர் என்பது தெரிந்த கதையல்லவா?
***
No comments:
Post a Comment