Translate

Wednesday, 12 December 2012


உதவி யார் பக்கம்?
by J.K. Sivan
துவாரகையில் அன்று பகலில் வெகு வெப்பமாயிருந்தது. காற்றிலே அனல் தான் வீசியது. தெருக்களில் நடமாட்டமே இல்லை. அரண்மனையில் அன்று கிருஷ்ணன் இருந்தான். “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. சற்று தூங்குகிறேன். யாராவது என்னைத் தேடி வந்தால் சாயந்திரம் பார்க்கிறேன் என்று சொல்”.
ருக்மணிசரி அவ்வாறே சொல்கிறேன்” என்றாள். கிருஷ்ணன் உறங்கிவிட்டான். சாயந்திரம் வரை வந்தவர்களை ருக்மணி அப்புறமாக வரச் சொல்லி அனுப்பிவிட்டாள் .
“இன்று மாலை கண்டிப்பாக வாயேன் நாம் பேசுவோம்என்று கிருஷ்ணன் ஏற்கனவே அர்ஜுனனை வரச் சொல்லியிருந்தான்.பாரதப்போர் நடக்கப்போவது உறுதியாகிவிட்டது. கௌரவர்கள் தங்கள் பக்கம் யாரையெல்லாம் சேர்க்கமுடியுமோ அந்தந்த ராஜாக்களுக்கு ஆள்மூலம் செய்தி அனுப்பி, படை திரட்டிக் கொண்டிருந்தனர் அவ்வாறே தர்மரும் தன் உறவினர் நண்பர்கள் உதவியை நாடி படை திரட்ட ஆரம்பித்தார். கிருஷ்ணனின் உதவியை இருபக்கமும் நாடியது. அவன் இருவர்க்கும் வேண்டியவனல்லவா! துரியோதனனும் முன்பாகவே கிருஷ்ணனுக்கு செய்தி அனுப்பியிருந்தான் இன்று வருவதாக. “ஆஹா, அதற்கென்ன வாயேன் பேசுவோம்” என்று கண்ணன் சம்மதித்திருந்தான். சொல்லி வைத்தாற்போல் அர்ஜுனன் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் முன்பாகவே துரியோதனனும் ரதத்தில் வந்து இறங்கினான். நெருங்கியவர்கள் அல்லவா இருவருமே!

கிருஷ்ணன் சயன அறைக்குள்ளேயே வந்தனர். அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். கட்டிலின் தலைமாட்டில் அவன் முகத்தருகே ஒரு இருக்கையில் துரியோதனன் அமர்ந்து கிருஷ்ணன் கண் விழிக்கக் காத்திருந்தான். அர்ஜுனன் கண்ணன் கால் மாட்டில் ஒரு இருக்கையில் அமர்ந்து கண்ணனை மனதால் துதித்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் தூங்கும்போது கூட ஒரு தனியான இனிய காந்த சக்தியோடு காட்சியளிப்பதை ரசித்துக் கொண்டிருந்தான். துரியோதனன் வந்ததை சற்றும் அவன் பொருட்படுத்தவில்லை. எறும்போ, கொசுவோ நம் கவனத்தைக் கவர்கிறதா? இந்த நிலையில்தான் துரியோதனனை மதித்தான் அர்ஜுனன்.
சற்று நேரத்தில் கிருஷ்ணன் கண் விழித்தான். அவன் கண்கள் கால் மாட்டில் அமர்ந்து அவனையே நோக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் கண்களைச் சந்தித்தது. ஒரு புன்முறுவல் கிருஷ்ணன் முகத்தில் தோன்றியது. “வா அர்ஜுனா வா! ரொம்ப நேரமாக தூங்கிவிட்டேன் போல் இருக்கிறதே. உன்னைக் காக்க வைத்து விட்டேனோ?”
துரியோதனன் தான் இருப்பதை உணர்த்த தொண்டையைக் கனைத்தான். பக்கத்தில் திரும்பிப் பார்த்த கிருஷ்ணன்அட, துரியோதனனா, நீ எப்போ வந்தாய்?
நான் தான் முதலில் வந்தேன் கிருஷ்ணா”
நீங்கள் இருவருமே ஒரு சேர வந்ததே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன விஷயம் சொல்லுங்கள்?”
“கிருஷ்ணா, உனக்குத் தான் நன்றாகத் தெரியுமே எங்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் நிச்சயமாகிவிட்டது. உன் உதவியை கேட்கவே நான் வந்தேன்” என்றான் துரியோதனன்.
நீ என்ன விஷயமாக வந்தாய் அர்ஜுனா?”
“இதே விஷயம் தான் கிருஷ்ணா” என்றான் அர்ஜுனன்.
“சுயோதனா, இதோ பார் நான் இரு பக்கத்துக்கும் வேண்டியவன். எனக்கு இது ஒரு அக்னி பரிக்ஷை அல்லவா? ஆகவே நான் என்ன நினைக்கிறேன் என்றால், எனது படை எந்தப் பக்கம் சேரவேண்டும் என்று வைத்துக் கொண்டால் நான் அதிலிருந்து விடுபட்டாக வேண்டும். நான் பாண்டவர்களை எதிர்த்து கௌரவர்களுடனோ அல்லது கௌரவர்களை எடுத்து பாண்டவர்களுடனோ யுத்தம் புரியமுடியாது. எனவே என்னுடைய உதவியை நாடும் உங்கள் இருவருக்கும் ஒரு யோசனை சொல்கிறேன், கேளுங்கள். என்னையும் என் ராஜ்யத்தின் நாராயணி சைநியத்தையும் உங்கள் இருவருக்கும் அளிக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னபடி ஆயுதமெடுத்து யுத்தம் புரியப்போவதில்லை. ஆகவே ஒருபக்கம் நான் மட்டும் தான் இருப்பேன் யுத்தம் புரியாமல். மற்றொரு பக்கம் என் நாராயணி சேனை அனுப்புகிறேன். யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் நான் பார்த்த அர்ஜுனனையே கேட்கிறேன்
"அப்பா, அர்ஜுனா உனக்கு நான் மட்டும் வேண்டுமா அல்லது என்னுடைய சைனியம் வேண்டுமா?”
“கிருஷ்ணா, இதில் யோசனை என்ன இருக்கிறது. எனக்கு எந்தச் சேனையும் தேவையில்லை. என் சேனையே போதும் இந்த யுத்தத்திற்கு. எனக்கு வேண்டியது எல்லாம் நீ மட்டும் தான்”
“இதோ பார் அர்ஜுனா, அவசரப்படாதே. இது யுத்த விஷயம். சரியாக யோசித்துச் சொல். நான் மட்டும் வந்தால் உனக்கு என்னால் உன் ரதத்தை மட்டுமே ஒட்டி உதவ முடியும். ஆயுதங்கள் ஏந்தி உதவ முடியாது என்று சொன்னேனே கவனம் இருக்கிறதா? என் சேனையை உபயோகித்தால் பலம் உன் பக்கம் கூடுமே! யோசி!”
“கொஞ்சம் கூடத் தயக்கமோ மயக்கமோ எனக்கில்லை கிருஷ்ணா. நீ ஒருவனே எனக்குப் போதும்”
“சரியப்பா அவ்வாறே ஆகட்டும். அப்போது துரியோதனா எனது படைகள் அனைத்தையும் உனக்கு அனுப்பி வைக்கிறேன் உனக்கு திருப்தியா?”
 
துரியோதனனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “முட்டாள் அர்ஜுனன்! யுத்தத்திற்கு ஒரு நிராயுதபாணியைக் கேட்கிறானே! நல்லவேளை, எனக்கு கிருஷ்ணன் சேனை கிடைத்ததே என்றுநன்றி கிருஷ்ணா” என்று ஆனந்தத்தோடு திரும்பினான்.
அர்ஜுனன் கிருஷ்ணனை பூரண திருப்தியோடு நன்றி சொல்ல வார்த்தையில்லாமல் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் உகுத்தான்.
கிருஷ்ணன் தனக்குப் பிடித்த நண்பன் அர்ஜுனனின் பூரண அன்பை உணர்ந்து பேரானந்தம் கொண்டான்.
சரியாகவே முடிவெடுத்தான் அர்ஜுனன் என்று மகிழ்ந்தான்.

இறைவா! உன் மீது வைக்கும் நம்பிக்கையே பெரிய பலம்.


 
The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment