Translate

Wednesday, 5 December 2012

ராதையும் குழலும்
by J.K. Sivan

ரெண்டு குழந்தைகள் அன்னியோன்யமாக உயிருக்குயிரான நண்பர்கள். ஒன்று ஆண். ஒன்று பெண். ரெண்டுமே பத்து வயதுக்கு உட்பட்டவை. ஒரே ஊரில் வளர்ந்தவை. திருப்பித் திருப்பி அந்த மரங்கள் மேலும், நதிக்கரையிலும், வனத்திலும், ஆயர்பாடி தெருக்களிலும், கோபியர் குடில்களிலும், நந்தவனங்களிலும், கன்றுகள் பசுக்கள் கூட்டத்திலும், மேய்ச்சல் நிலங்களிலும், குளக்கரைகளிலும், சேர்ந்து நேரம் போவதே தெரியாமல் விளையாடும் வயது. அந்தச் சிறுவர்சிறுமி கூட்டத்திற்கு, சந்தோஷம், மகிழ்ச்சி, எப்போதும் குதூகலம்.

ராதைக்கு கண்ணனிடம் அத்தனை பிரேமை. ஒவ்வொரு சமயம் அவன் தனக்கு பிடித்த நேரங்களில் மரத்தில் அமர்ந்தோ, நதிக்கரையிலோ நண்பர்கள் மத்தியிலோ, பசுக்கள் கன்றுகள் அருகிலோ அமர்ந்து தன்னுடைய புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருப்பான். ரம்யமான இந்தச் சூழ்நிலையில் இரவிலோ பகலிலோ அவன் குழல் ஓசை காந்த சக்தி போல் அனைவரையும், அனைத்துயிர்களையும் கவரும். ஏன் இன்று கண்ணன் குழல் கேட்கவில்லை என்று ஒவ்வொருவரும் தேடும்படிச் செய்யும்.

ராதைக்கு கண்ணனிடம் இருந்த அன்புக்கும் மேலாக அவனிடம் இருக்கும் புல்லாங்குழல் மீது பொறாமை. கோபமும் கூட. தன்னிடம் பேச முடியாதபடி அவன் வாயை அது பிடித்துக் கொள்கிறது அல்லவா?
“உன்னை விட்டேனா பார்” என்று ஒருநாள் கண்ணன் அசந்துபோன சமயம் அவனது குழலை எடுத்து மறைத்து விட்டாள். கண்ணன்எங்கே என் குழலைக் காணோம்?” என்று எங்கெல்லாமோ சுற்றித் தேடினான். அவளும் அவனோடு சேர்ந்து தேடினாள். அவளது சிரிப்பு அவளை காட்டிக் கொடுத்து விட்டது.
அவனது ஏக்கம் அவளை உருக்கவேஇந்தா உன் குழல்” என்று திருப்பிக் கொடுத்தாள். கண்ணன் முகம் மலர்ந்தது.
போ உனக்கு என்மீது அன்பே இல்லை. இனிமேல் நான் உன்னோடு பேசவே மாட்டேன்!”
அதெப்படி முடியும். நான் உன்னோடு விடாமல் பேசுவேனே!” என்றான் கண்ணன்.
“கிழிச்சே!! நான் உன்னோடு பேச வரும்போதெல்லாம் உன்வாயில் அந்தக் குழல் தான் இருக்கு. நான் எப்படிப் பேசறது?” என்று ராதை கோபித்தாள்.
சரி நமக்குள்ளே ஒரு ஒப்பந்தம். எவ்வளவு நேரம் நான் உன்னிடம் பேசுகிரேனோ அதைக்காட்டிலும் குறைந்த நேரமே இனி இந்தப் புல்லாங்குழலுக்கு” என்று அவன் சமாதானம் செய்தான்.

                                                  The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment