Translate

Sunday, 30 December 2012

இன்ப மனம்
by J.K. Sivan
 

கம்சனுக்கு கிருஷ்ணனைக் கொன்றால் ஒழிய தூக்கமில்லை என்ற நிலை வந்துவிட்டது. அவன் உபாயங்கள் அனைத்து இதுவரை தோல்வியிலேயே முடிந்து விட்டதே. " நீங்கள் இருவரும் மதுராவிற்கு வரலாமே" என்று அழைப்பு விட்டதால், கிருஷ்ணனும் பலராமனும் மதுராவிற்கு வந்து விட்டனர். கம்சன் மாளிகை அதோ தெரிகிறது. கிருஷ்ணனைக் கொல்ல ஒரு பலம் பொருந்திய யானையும், மல்லர்களும் ரெடி.
"பலராமா, நாம் எப்படி இந்த அழுக்கு உடைகளுடன் அரண்மனைக்குள் செல்வது. நமது கிராமத்து உடைகள் நன்றாக இல்லையே, இவரிடம் கேட்டு பார்ப்போமா" என்று ஒரு துணி வெளுப்பவரிடம் சென்று வெளுப்பான உடைகள் வாங்கி உடுத்திக்கொண்டு, வயதான ஒரு கிழவி சந்தனம் அரைத்து விற்று கொண்டிருந்தவளிடம் நிறைய சந்தனம் வாங்கி உடலெல்லாம் பூசிக்கொண்டு அடுத்து என்ன தேவை என்று யோசித்தபோது, பூ வியாபாரம் செய்யும் சுதாமா கண்ணில் பட்டான்.

“எங்களுக்கு கொஞ்சம் பூ வேண்டுமே” என்றான் பலராமன். அருகில் நின்ற கிருஷ்ணன் என்னென்ன பூ அவரிடம் இருக்கிறது என்று பார்த்துகொண்டிருக்க,
"கிருஷ்ணா உன்னை நான் எப்போவுமே மனதில் நினைத்துக் கொண்டிருப்பவன் நீயே என்னைத் தேடி வந்து விட்டாயே! எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உனக்கு எல்லா மலர் மாலைகளும் சூட்டி விட ஆசை, இந்தா” என்று கண்ணனின் உடல் நிறத்திற்கேற்ப கருநீல மலர் மாலையை அணிவித்தான் சுதாமா.
பலராமன் வெளுப்பான நிறம் கொண்டவன். அவனுக்கு ஏற்ற மலர் மாலையைச் சூட்டிவிட்டு, "கிருஷ்ணா, இன்றுஎனக்கு இருக்கும் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை" என்றான் சுதாமா.

"சுதாமா, உனக்கு என்ன விருப்பம் அதை சொல்லேன். முடிந்தால் நிறைவேற்றுகிறேன்" என்றான் சிரித்துக்கொண்டே கிருஷ்ணன்.
"இந்தப் பூக்கள் எப்படி ஆரம்பம் முதல் கடைசிவரை மலர்ச்சியோடு இருக்கிறதோ அதுபோல் என் மனம் பூரா கடைசி வரை உன் நினைவு ஒன்றிலேயே மகிழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். யாராவது மனம் நொந்து வாடுவதைப் பார்க்கும்போது எனக்கு அவர்கள் துன்பம் வாங்கிகொண்டு அவர்களை ஆனந்தமாக இருக்கச் செய்யவேண்டும் போல் இருக்கிறது."
"உன் விருப்பம் புரிகிறது சுதாமா! எதிரே தட்டிலேஇனிய தின் பண்டங்கள் இருக்க அதை உண்ணாமல் தட்டின் கீழே இருக்கும் மண்ணை உண்டால் நாக்கு எப்படி இனிக்கும்?" எல்லோருக்கும் உன் மனம்போல்என்றும் எல்லையில்லாத சந்தோஷத்தில் மனம் இருப்பதையே நான் எப்போதும் விரும்புகிறவன். அதுவே என் ஏற்பாடு"
இதையே தான் அர்ஜுனனிடம் சொன்னான், அவன் மூலம் நமக்கும் சொன்னான் கிருஷ்ணன். நாய் வால் நிமிர மாட்டேன் என்கிறதே என்ன செய்ய?
                                       
                                                                    
The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment