Translate

Thursday, 13 December 2012


கண்ணனே கணவன்
by J.K. Sivan 

ஐந்து வயதுக் குழந்தை ஒன்று வெளியே ஊர்வலம் வருவதைப் பார்த்துக் கேட்டது
“இது என்னம்மா?”
கல்யாண ஊர்வலம் டீ கண்ணு!”
“அவன் யாரு தலப்பா கட்டிண்டு?”.
“அது தான் மாப்பிள்ளை. அவன் தான் அதோ அந்த சின்னப் பெண்ணுக்கு கணவன்”.
எனக்கும் கல்யாணம் பண்ணுவியா?”
ஆமாம் தடபுடலா”
“அப்போ எனக்கு யாரு கணவன்?”
“வா காட்றேன்” பூஜா அறையில் கிருஷ்ணனின் படம்.
“இதோ இவன் தான் உனக்குக் கணவன்”
கெட்டியாகப் பிடித்துகொண்டாள் மீரா. எரியும் விளக்குக்கு எண்ணையும் கிடைத்தது. தெருவில் ஒருநாள் ஒரு பொம்மை விற்பவன் ஒரு சின்ன அழகிய கிருஷ்ணன் பொம்மை வைத்திருப்பதைப் பார்த்து விட்டு அதை வாங்கினால் தான் விடுவேன் என்று அடம் பிடித்து அதை வாங்கி தன் உயிர் போகும் வரை வைத்திருந்தாள் மீரா. அவள் மூச்சு, பேச்சு எல்லாமே கிருஷ்ணன்தான்.

விளையாட்டு வினையாகப் போய்விட்டதே என்று பெற்றோருக்கு கவலை அரித்துத் தின்றது. பேசாமல் ஒரு ராஜகுமாரனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தனர் பேருக்குத் தான் கல்யாணம் அவளை ஆக்ரமித்தவன் கிருஷ்ணனே. அவளை எல்லோரும் ஒரு இளம் சன்யாசினியாகவே அவளைக் கண்டனர். இருபது வயதுக்குள்ளேயே அவள் தனியள் ஆனால். அவள் கணவன் ஒரு போரில் மாண்டான். மீராவின் உலகில் ஒரே ஜீவன் அது கிருஷ்ணன். கண்ணன் மீது மட்டற்ற காதல் அவளை அவன் கோபியாகவே மாற்றியது.
கண்ணனை நினைத்து இரவும் பகலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். பக்தர்களும் ஆவலுடன் சேர்ந்து கொள்ள அவளது ராஜவம்சம் எதிர்த்தது. விஷம் வைத்தார்கள். அவதூறு பேசினார்கள். எதற்கும் மசியவில்லை அவள் மாசற்ற காதல். அவள் குடித்த விஷத்தை அம்ருதமாக மாற்றினான் கிருஷ்ணன்! படுக்கையில் கூரான விஷம் தோய்ந்த ஆணிகள். அனைத்தையும் ரோஜாஇதழ்களாக மாற்றினான் கிருஷ்ணன்! “இந்தா கிருஷ்ணனுக்கு பூ” என்று குடலையில் கருநாகம் வைத்தனர். கைவிட்டு எடுத்தால் அது மல்லிகை மாலையாயிற்று!
“நீங்கள் மிக பிரசித்த கிருஷ்ண பக்தர் உங்கள் வாயிலிருந்து கண்ணன் பெருமையைக் கேட்க ஆசையாய் இருக்கிறது”.
சைதன்யரின் சிஷ்யரான ரூப கோஸ்வாமி சொன்னார்: “நான் பெண்களைப் பார்ப்பதில்லை, பேசுவதில்லை”
“அய்யா புருஷர்கள் யாருமே இல்லை இந்த உலகில். இருப்பது ஒரு புருஷன் தான் அவனே கிருஷ்ணன்” .
பிறகுஎன்ன? கோஸ்வாமி ஓடிவந்து மீராவின் காலடியில் சரணமடைந்தார். ஊர் ஊராகப் பாடிக்கொண்டே ஆடிக்கொண்டே மீரா காசிக்கும் சென்று கபிர்தாசுடன் கிருஷ்ணபஜன் செய்தாள். நேரமாகி விட்டது. காதலின் உச்சகட்டம் வந்து விட்டது.
கிருஷ்ணனுக்காகவே வாழ்வை அர்ப்பணித்து எண்ணற்ற பக்திப்பாடல்களை கர்ணாம்ருதமாக வழங்கிவிட்டு துவாரகையில் எல்லாரும் பார்க்க மீரா கிருஷ்ணனோடு கலந்தாள்

இறைவனோடு கூடிய வாழ்க்கைக்கு ஈடு உண்டா?



                                                   The writer can be reached at: jksivan@gmail.com

 

1 comment:






  1. to me










    Namaskaram

    Meeravin bakthikku eddu enai undaa?
    jbmaharam@gmail.com

    ReplyDelete