Translate

Sunday, 16 December 2012


நாம ஸ்மரணை
by J.K. Sivan



துருபதன் மாளிகை கோலாகலமாகக் காட்சியளித்தது. ஊரெங்கும் ரதங்கள் குவிந்திருந்தன. வாத்திய கோஷங்கள் வானைப் பிளந்தன.
தின்பண்டங்கள், இனிப்புகள் எங்கும் நிறைந்து உண்ண ஆளின்றி காத்திருந்தன. பெண்களும், ஆடவரும் மாளிகையை அடுத்த மைதானத்தில் திரண்டிருந்தனர். எத்தனையோ ராஜாக்கள் ச்வயம்வரத்தில் பங்கேற்கப் போகின்றனர் இன்று. நடு நாயகமாக மத்ஸ்யேந்திரம் நிலை நாட்டப்பட் டிருக்கிறதே, யார் அதை வீழ்த்தி திரௌபதியை கை பிடிக்கப்போகிறார்?

இதோ, கிருஷ்ணனும் பலராமனும் கூட வீற்றிருக்கிறார்களே. ஏன் கிருஷ்ணனின் கண்கள் அலை பாய்கிறது? யாரைத் தேடுகிறான் கிருஷ்ணன்? பலராமன் ஏதோ கேட்க அதில் கவனமில்லை என்று பலராமனும் புரிந்து கொள்கிறாரே! போட்டி ஆரம்பித்தாகிவிட்டது. சற்றுதாமதமாக ஒரு பிராமணர்கள் கூட்டம் உள்ளே நுழைகிறதே! இங்கென்ன வேலை அவர்களுக்கு? முண்டியடித்துக் கொண்டு இரண்டாம் வரிசையில் இடம் பிடித்து விட்டார்கள் அந்த பிராமணர்கள். மேல் துண்டு, கட்டுக் குடுமி, பஞ்சகச்சம், நெற்றி நிறைய பளபள வென்று விபூதி. வேத விற்பன்னர்கள் போலிருக்கிறதே! கிருஷ்ணன் அவர்களைக் கவனித்து விட்டான். புருவம் சுருங்கி விரிந்தது. இதழோரத்தில் புன்னகை வழக்கம்போலப் படிந்தது. கிருஷ்ணன் பெருமூச்சு விட்டான். அதில் திருப்தி இருந்தது.

ஜெயிக்கமுடியாமல் அநேக ராஜாக்கள் தலை குனிந்துசென்றனர். துரியோதனன், கர்ணனின் தோல்வியைத் தாள முடியாமல் துடித்தான். சிசுபாலனும் ஏமாந்தான். “என்ன இது, யாருமே இல்லையா, இங்கு வீரத்தையும் திறமையும் காட்ட? என் பெண் காத்திருக்கிறாளே!” என்று துருபதனுக்கு வியர்த்தது. பிராமணர்களில் ஒருவன் கொஞ்சம் வயதில் பெரியவரின் முகத்தைப் பார்த்தான். அவர் தலை அசைக்கவே எழுந்து நின்றான்.
“யார் நீ என்ன வேண்டும் உனக்கு?” திருஷ்டத்யும்னன், இளவரசன் வினவ, அந்த இளம் பிராமணன்நான் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்றான்.
எல்லோரும் அவனைபார்த்துநல்ல கோமாளி” என்று சிரித்தனர்.

திருஷ்டத்யும்னன் கிருஷ்ணனை கண்ணால் பார்க்க, துருபதனும்சரி போட்டிக்கு வரச்சொல்லு” என்றான் . எல்லோரும் கை கொட்டிச் சிரிக்க வாலிபன் எதையுமே லட்சியம் செய்யாமல் நேரே மத்ஸ்யேந்த்ரம் அருகில் சென்றான். கீழே இருந்த வில்லை நமஸ்கரித்தான். வலம் வந்தான். மனதில் யாரையோ ஸ்மரித்தான், அலட்சியமாக வில்லைத் தூக்கினான். நாண் ஏற்றினான். மேலே அதன் அசைவை சரியாக தெளிந்த நீரில் கீழே கணித்தான். சரியான தருணத்தில் நாணிலிருந்து சரம் மேல் நோக்கிப் பறந்தது. அடுத்த கணம் மத்ஸ்யம் கீழே அறுந்து விழ சபையோர் வாயடைத்து மௌனமாய் நின்றனர். துருபதன் வாலிபனை நோக்கி ஓடி அணைத்துக் கொண்டான். அவனது நீண்ட காலக் கனவு நிறைவேறி விட்டதல்லவா! திரௌபதி அங்கேயே அந்த வாலிபனைக் கண்ணால் விழுங்கினாள்.

துரியோதனன் அருகில் கிருஷ்ணன் நெருங்கி நின்றுகொண்டான். “கிருஷ்ணா, எனக்கு இந்த வாலிபன் ஒருவேளை அர்ஜுனனோ எனச் சந்தேகம்” என்றான் துரியோதனன்.
உனக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம் தானே. பாண்டவர்கள் என்றால் ஐவர் இருப்பார்களே அங்கு பார் இரண்டு பேர் தான் இருக்கிறார்கள்” என்றான் கிருஷ்ணன். அர்ஜுனனின் உதவிக்கு பீமன் அருகில் சகாதேவனுடன் பிராமணனாக அமர்திருந்தான்.
மேலே பேசவிடாமல் “வா நாம் செல்வோம். யாரோ வீர பிராமணன் ஜெயித்தால் அதைப்போற்றவேண்டுமே தவிர, பாவம் எவ்வளவு பாடுபட்டு அஸ்திர வித்தை கற்றுக்கொண்டானோ. அதிர்ஷ்டம் கூட சிலருக்கு தக்க சமயத்தில் உதவும். உன் கர்ணன் போன்றவர்க்கு உதவாமலும் போகும். விட்டுத் தள்ளு. விருந்துக்குப் போவோம் வா” என்று கூட்டிச் சென்றான்.

பலராமனுக்கு சந்தேகம் வலுக்க, கிருஷ்ணன் கண்ணால் ஜாடை காட்டி,அப்புறம் பேசலாம்” என்றான்.

அர்ஜுனன் யாரை மனசார ஸ்மரித்தானோ, அந்த கிருஷ்ணன் நாம் ஸ்மரித்தாலும் உதவுவானே!

 
 
                                                  The writer can be reached at: jksivan@gmail.com 

1 comment:

  1. Namaskaram

    Photo very good.

    Last line naam namaskarathilam .....line superb line.

    jbmaharam

    ReplyDelete