Translate

Monday, 24 December 2012

தூது
by J.K. Sivan 

"எல்லோருமே அந்த ராஜ சபையில் அமைதியின்றி இருந்தனர். திருதராஷ்ட்ரன் மகனிடம் சொன்னான்:
"சுயோதனா, கிருஷ்ணன் சொல்வதில் நியாயம் இருக்கிறது. பாண்டவர்களுக்கு பாதி ராஜ்யமாவது கொடுத்து விடு"
"அப்பா நீங்கள் பேசாதீர்கள். எனக்குத் தெரியும். ஆரம்பத்திலேயே நீங்கள் இடம் கொடுத்ததால் வந்த வினை தான் இது."
"துரியோதனா, நான் மீண்டும் சொல்கிறேன். பாண்டவர்களோடு யுத்தம் வேண்டாம். அதால் அனர்த்தம் தான் விளையும்" என்றான் கிருஷ்ணன்.
"நேரத்தை தான் வீணாக்குகிறாய் கிருஷ்ணா நீ". எகத்தாளத்தோடு மீசையை முறுக்கிகொண்டவாறு ஏளனமாகச் சிரித்தான் துரியோதனன்.
"கிருஷ்ணா, நீயா ராஜதந்திரம் பேசுகிறாய். உன்அனுபவம் என்ன என்று மறந்துவிட்டாய். பசுக்களும் கன்றுகளும்தான் உனக்குத் தெரியும். அவர்களோ நாடோடிகள், நீ அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது பொருத்தம்" என்றான் சகுனி.
"நிறுத்து சகுனி, அதிகமாக பேசாதே. ஆத்திரப் பேச்சு அழிவில் முடியும்" என்றாள் காந்தாரி.
"கிருஷ்ணா, என்னை மீறி போகிறது நிலைமை. என்னால் ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியவில்லை. நீ கேட்டபடிஐந்து ஊரோ, வீடோ கூடத்தர மறுக்கிறான் எனக்கு மகனாக பிறந்த இந்த துரியோதனன்". என்று நா தழுதழுக்க வருந்தினான் திருதராஷ்ட்ரன்.
"யுத்தத்தின் விளைவு உனக்குச் சாதகமாகவே இருக்கும் என்று கனவு காணாதே, துர்யோதனா" இதுவே உனக்கு நான் கொடுக்கும் கடைசி சந்தர்ப்பம். கெடுமதியை விடு" என்று கிருஷ்ணன் கடைசியாகச் சொன்னான்.
"கிருஷ்ணா உன் தூது அர்த்தமில்லாத கோமாளித்தனம். ஊசிமுனை இடம் கூட பாண்டவர்களுக்கு கிடையாது. போய்ச் சொல் அவர்களிடம்" என்றான் துச்சாதனன்.
"துரியோதனா, யாரிடம் பேசுகிறாய் என்று நினைவில் கொண்டு பேசு. கிருஷ்ணன் சொல்வதைக் கேள்" என்றார் பீஷ்மர்.
"தாத்தா! நீங்கள் எங்களிடமே இருந்துகொண்டு அவர்களையே புகழும் மாற்றமுடியாத பிறவி! உங்கள் வார்த்தைக்கு மதிப்பு ஏது" என்றான் கர்ணன்
"கர்ணா! நீ பேசவே தகுதியற்றவன் வாயைத் திறக்காதே" என்றார் பீஷ்மர்.
"நான் தூதுவனாக வந்ததால் நீ தப்பினாய் துரியோதனா! நாம் யுத்த களத்தில் சந்திப்போம்" என்று எழுந்தான் கிருஷ்ணன்.
திருதராஷ்ட்ரன் தட்டுத் தடுமாறி கிருஷ்ணன் அருகில் வந்து அவன் காலைப் பிடித்தான். "உன்னைப் பார்க்க கூட முடியாத பிறவி நான் கிருஷ்ணா"
"இதோ பார் த்ரிதராஷ்டிரா" என்று கிருஷ்ணன் தன் முழு உருவை அவனுக்கு மட்டும் தெரியும்படியாக திவ்ய திருஷ்டி கண்கள் அளித்து காட்சியளித்தான்.

"கிருஷ்ணா என் பிறவி, பயன் அடைந்துவிட்டது. என் குலமும் மக்களும் அழிவை தாங்களே தேடிகொள்கிறார்கள். அது அவர்கள் வினைப்பயனே. போதும்,போதும், இந்த பார்வை எனக்கு! கண்களைப் பெற்று அவர்கள் அழிவதை நான் பார்க்க விரும்பவில்லை" என்று வணங்கினான் திருதராஷ்ட்ரன்.




The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment