கிருஷ்ணனிடம் போகலாமா?
by J.K. Sivan
இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை போன்றவர் இருப்பது போல மலையாள தேசத்தில் வீட்டு பேரில் நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டுப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் காணாமல் போய் விட்டது. பரம கிருஷ்ண பக்தர். பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதியவர். பாவம் ஒரு குறை அவருக்கு. வெகுநாளாக. மடியில் வைத்து கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே? கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா?
ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் கூடியிருக்க அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்தக்குழந்தை இறந்து விட்டது எப்படி பட்ட சோகம்??
குருவாயுரப்பன் என்ன செய்தான்? “பூந்தானம் கவலையே வேண்டாம் நானே உங்கள் பிள்ளை எங்கே உங்கள் மடி” என்று அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டான். படுத்துக் கொள்ளட்டுமா” என்றான். தன்னை மறந்து ஆனந்தப் பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது. "நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு ?"
கடல் மடியென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்தி ரசத்தில் மூழ்க, இது ஒருவருக்குப் பிடிக்க வில்லை. பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி தான் அவர். குருவாயுரப்பன் மீது நாரயணீயம் எழுதியவர். அவர் பூந்தானத்தை “இவனெல்லாம் ஒரு கவிஞனா சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இலக்கணம் தெரியாதவன்” என்று இகழ்ந்தார்.
குருவாயூரில், கிருஷ்ணனுக்கு இது பிடிக்கவில்லை. ஒருநாள் பட்டாத்ரி தன்னைக் காண வந்தபோது "பட்டாத்ரி நான் சொல்கிறேனே என்று வருத்தப்படாதே, எனக்கென்னமோ உன் சம்ஸ்க்ரித இலக்கணம் தோய்ந்த ஸ்லோகங்களைக் காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்பப் பிடிக்கிறதே என்ன செய்ய?" என்றான் கிருஷ்ணன்.
அதற்கப்பறம் பட்டாத்ரி ஓடி சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார் என்பது சாதாரண விஷயம். பாகவதத்திலும் கிருஷ்ண கானத்திலும் காலம் ஓட, ஒருநாள் கிருஷ்ணன் பூந்தானத்தை இனி தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசை மேலிட “என்னிடம் வா” என்று அழைத்தான்.
பரம சந்தோஷம் அவருக்கு. “யார் யார் எல்லாம் என்னோடு கிருஷ்ணனிடம் வருகிறிர்கள்?” என்ற அவர் அழைப்பைக் கேட்ட அன்பர்கள் தலை தெறிக்க ஓடிவிட்டனர். அவர் வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண்மணி, “அய்யா என்னையும் கிருஷ்ணனிடம் அழைத்து செல்கிறீர்களா?” என்று வேண்டினாள். குறித்த நேரத்தில் உடலோடு பூந்தானமும், அந்த பெண்மணியும் கிருஷ்ணனோடு ஒன்றறக் கலந்தனர்.
பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்கணமோ தேவையில்லை. உள்ளத்தில் எண்ணம் ஒன்றே போதுமே!
The writer can be reached at: jksivan@gmail.com
பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்கணமோ தேவையில்லை. உள்ளத்தில் எண்ணம் ஒன்றே போதுமே!
ReplyDeleteall posts are wonderful
ReplyDelete