Translate

Monday, 28 January 2013

விட்டலன் கதை 10

சன்யாசியின் கல்யாணம்
by J.K. Sivan


மகாராஷ்டிரா தேசத்தில் விடோபா என்று ஒரு சாது இருந்தார். பிரமச்சாரி. தூங்கும்போது பாண்டுரங்க ஸ்மரணை. விழித்து கொண்டிருக்கும் போது கையில் ஸ்ரீமத் பாகவதம் ஓலைச்சுவடி. அன்றாட பிக்ஷையில் காலம் தள்ளினார். ஒரு தடவை பாண்டுரங்கன் தரிசனத்துக்காக பண்டரிபுரம் வந்து அன்று இரவு சந்திர பாகா நதிக்கரையில் தூங்கும்போது கனவில் விட்டலன்:
"விடோபா, நாளைக்கு உன்னை தேடி ஒரு பிராமணர் வருவார்.அவரோடு ருக்மணி என்ற ஒரு பெண்ணும் வருவாள். அவளை நீ விவாகம் செய்து கொள்ளவேண்டும்."

அமைதியாக நிம்மதியாக ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் ஏன் விட்டலன் செய்கிறான்? புரியவில்லை விடோபாவுக்கு. வழக்கம் போலவே மறுநாள் காலை அவரது அன்றாட ஸ்நான பான த்யானம் எல்லாம் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஒரு பிராமணர் வந்தார்.
"தாங்கள் தான் விடோபாவா?” ஏற இறங்க அவரை பார்த்த விடோபாஆம்” என்று தலை அசைத்தார். “”விட்டலன் தங்களை இங்கு இன்று காண எனக்கு கனவில் உத்தரவிட்டான்..என்று அவர் இழுத்தபோது ,விடோபா, “ஆம் அய்யா, என் கனவிலும் அவன் தங்கள் பெண்ணை மணந்துகொள்ள உத்தரவிட்டான்" என்று வந்த விஷயத்துக்கு முற்றுபுள்ளி வைத்தார் விடோபா.

ஊர்திரும்பி அவர் திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கையில் பல வருஷங்களாகியும் புத்திர பாக்கியம் இன்றி வருந்தினார். இல்லற வாழ்க்கையிலிருந்து சன்யாசம் போக விருப்பம். ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினார். வழியில் ராமானந்தரை தரிசித்தார். இந்த ராமானந்தர் தான் கபீர் தாசரின் குரு. அவரிடம் சன்யாச தீக்ஷை பெற்று அவரோடு காசியில் ஐக்கியமானார்.

பாவம் அவர் மனைவி ருக்மணி, அவரை காணோமே என்று மாதக்கணக்கில் எங்கெல்லாமோ தேட யாரோ "அரச மரத்தை சுற்று அம்மா, போன புருஷன் வீடு திரும்புவான்" என்று சொன்னதை கேட்டு பல வருஷங்களாக அரச மரத்தை சுற்றிக்கொண்டு அவள் வாழ்க்கை நடந்தது.

ராமானந்தர் தனது சிஷ்ய கோடிகளோடு தெற்கே தக்ஷிண பாரத யாத்ரை வந்தார்.தனது பூர்வ வாழ்க்கையில் யாரையும் சந்திக்க விரும்பாத விட்டோபா அவரோடு வரவில்லை. ராமாநந்தாவும் சிஷ்யர்களும் விடோபா ஊருக்கு வந்தபோது அவர் களைப்பு நீங்க ஒரு அரசமரத்தடியில் அமர அந்த மரத்தை வழக்கம்போல் ருக்மணி சுற்றிவர,யாரோ ஒரு மகான் இருக்கிறாரே என்று நமஸ்கரிக்க அவர் இந்த பெண்மணி புத்திர சந்தான பாக்யத்துக்காக அரசமரம் வம் வருகிறாள் என்று தீர்மானித்து "புத்ரவதி பவ": என்று ஆசிர்வதிக்க, அதை கேட்ட மறு கணமே அவள் அவர் காலில் விழுந்து கடல் மடை திறந்தாற்போல் கண்ணீர் பிரவாஹத்தோடு கதற, அவர் விஷயம் என்ன என்று கேட்க அழுகைக்கு நடுவே அவள் சொன்னது:

"சுவாமி என் கணவன் ஒரு சந்யாசியாக போய்விட்டார்.உங்களை போல் மகான்கள் ஆசிர்வாதத்தில் அவர் எனக்கு மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது அதற்காகவே பலர் சொல்லி இந்த அரச பிரதக்ஷணம் செய்கிறேன்"
"உன் கணவன் யார், பெயர் என்ன, எங்கிருக்கிரானாம், யார் சன்யாசம் கொடுத்தார்களாம் இதெல்லாம் உனக்கு தெரியுமா அம்மா?'
'அவர் பெயர் விடோபா, காசியில் இருக்கிறாராம். அது எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது. அவருக்கு ராமானந்தா என்று ஒரு குருவாம்"
"அடேடே, என்ன ஆச்சர்யம். நான் தான் அந்த ராமானந்தர் எப்போது அந்த ஸ்ரீராமன் என் மூலமாக உனக்கு "புத்ரவதி ஆக கடவாய்" என்று ஆசீர்வாதம் வழங்கினானோ அது நிச்சயம் நிறைவேறும்" என்று அருளினார்.

உடனே காசியில் இருக்கும் விடோபாவுக்கு கடிதம் எழுதினார். அதை கண்டவுடன் விடோபா ஊர் திரும்பினார். தர்மமோ அதர்மமா எதுவாயினும், குருவின் வாக்கு பொய்க்கக் கூடாது.

குரு வாக்கு தட்டாத விடோபா ருக்மணியை அடைந்தார். மும்மூர்த்திகளும் சக்திதேவியும் அவர்களுக்கு குழந்தையாக பிறந்தார்கள்.அவர்களது இரண்டாவது குழந்தை தான் நாராயணன் அம்சமான ஞாநேஸ்ச்வர். முக்தாபாய் தான் சக்தி அம்சம். கலியுகத்தில் இறைவனை அடைய சுலப வழியான பஜனை நாமஸ்மரணைக்கு அவர்கள் வித்திட்டவர்கள்.
விடோபாவை பொறுத்தவரை சன்யாச ஆஸ்ரமத்திலிருந்து கிரகஸ்தாச்ரமம் திரும்பியது பெரும் பாபம், இதற்கு பிராயச்சித்தமாக கங்கையில் மூழ்கி பிறவியைத் தொலைப்பதே என்று முடிவு செய்தார். அவர் மனைவி ருக்மணியும், தானே இதற்கு ஒரு காரணமாக இருந்த பாவம் தொலைக்கத் தானும் அவ்வாறே முடிவதாக அவருடன் சேர்ந்து இருவரும் பிரயாகையில் கங்கையொடு கலந்தனர்.

 


                                                                  The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment