Translate

Wednesday, 30 January 2013

விட்டலன் கதை 12

சித்து விளையாட்டு
by J.K. Sivan



ஞானேஸ்வரின் ஸாஸ்த்ரானுபவம் பற்றியும் அவரது பிரம்மஞானம் பற்றியும் அறிந்தோமல்லவா? அவர் பகவத்கீதைக்கு மராத்தியில் மிக சிறந்த, இன்றும் அனைவராலும் போற்றப்படும் ஞானேஸ்வரி என்ற உரை எழுதியிருக்கிறார். சகோதரர்களுடனும் இளம் சகோதரி முக்தாபாயுடனும் அவர் பைதானில் வசித்தபோது, ஒரு தடவை அந்த ஊருக்கு ஒரு ஹட யோகி வந்தார் அவர் பெயர் சங்கதேவ். அவர் வயது 1000 கடந்தது என்று ஊரில் பேச்சு, நீரில் நடப்பாரம், காற்றில் பறப்பாராம், நெருப்பில் குதித்து விளையாடுவாராம்! ஏன், "செத்தவனையும் பிழைக்க வைக்க என்னால் முடியும்" என்று அவர் சொல்லி ஊரே அவர் வீட்டுமுன் திரண்டது.
காட்டுத் தீ போல் செய்தி பரவி அண்டை அசல் ஊர்களிலிருந்தெல்லாம் பிணங்களைத் தூக்கி கொண்டு வந்ததால் பைதான் பூரா உயிருள்ளவர்களை விட உயிரற்றோரின் எண்ணிக்கை அதிகமாகியது! சங்கதேவின் சக்தி எல்லோரையும் அதிர வைத்தது. இறந்தவனுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்ன சின்ன விஷயமா?!! இருந்தபோதிலும் சங்கதேவுக்கு ஒரு உறுத்தல் மனதில் இருந்துகொண்டு அவரை அரித்து கொண்டிருக்க, எல்லோரிடமும்யார் அந்த ஞானேஸ்வர்? எதற்கு மக்கள் அவரிடம் சென்று குழுமுகிறார்கள்? அவர் பிரசங்கத்திலோ பாடும் அபங்கத்திலோ அப்படி என்ன ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது?? என்று ஏளனம் செய்தார். இது ஞானேஸ்வர் காதில் விழுந்தும் அவர் லட்சியம் செய்யவில்லை.
அவர் இளம் சகோதரி முக்தாபாய்க்கு இது பிடிக்காமல் நேரே சங்கதேவ் வீடு சென்ற போது அங்கு ஜே ஜே என்று கூட்டம். ஒரு பிணம், அதை சுற்றி உறவினர்கள் பொது மக்கள். சங்கதேவ் வெளியே வந்து அதற்கு உயிர் கொடுக்க எல்லோரும் ஆவலாக காத்திருந்தனர்.
5 வயது பெண்ணாகையால் "இங்கு நிற்காதே போ. இதை பார்த்து பயப்படுவாய்? " என விரட்டினர்.
"என்ன நடக்க போகிறது இங்கே?"
" இதோ இந்த இறந்த மனிதன் பிழைக்க போகிறான். நீ முதலில் கிளம்பு" என்று விரட்டினர்.
"ஏன். நானே கூட இவரை பிழைக்க வைக்க முடியுமே " என்று சொல்லியவாறு அந்த சிறுமி கீழே கிடந்த பிணத்தின் காதருகே சென்று "விட்டலா விட்டலா என்று சொல்லி “எழுந்திரு” என்றவுடன், அந்த உடல் உயிர் பெற்று எழுந்து "விட்டலா விட்டலா" என்று பாடிக்கொண்டு ஓடியது.

இந்த அதிசயம் கண்டு ஊர் மக்கள் ஆடிப்போய் முக்தாபாய் பின் சென்றனர்.
“என்ன சத்தம் அங்கே” என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்த சங்கதேவுக்கு விஷயம் எட்டியது.
"யார் அந்த பெண்"?
"ஞானி ஞானேஸ்வரின் குட்டி தங்கை."
அதிர்ச்சியுற்ற சங்கதேவ் உடனே ஞானேச்வரை பார்க்க கிளம்பினார். எப்படி? தனது மந்திர சக்தியில் ஒரு புலியை உருவாக்கி, அதன் மேல் அமர்ந்தவாறு! கூட்டம் அலைமோத, அவர் பவனி ஞானேஸ்வர் ஆஸ்ரமம் வரும் சமயம், ஞானேஸ்வர் ஆஸ்ரம சுவரின் மேல் அமர்ந்து அதை கட்டி கொண்டிருந்தார்.

"சுவாமி உங்களை காண சங்கதேவ் புலிமேல் வருகிறார்"
"நானே சென்று அவரை காண்பது தான் முறை" என்று சொல்லியவாறு தான் உட்கார்ந்து கட்டிகொண்டிருந்த சுவருடன் பயணம் செய்தார் ஞானேஸ்வர்!
ஒரு சுவர் தானே நகர்ந்து அதன் மேல் இளம் வயதினர் ஞானேஸ்வர் அமர்ந்து வருவது கொண்டு பிரமித்து போனார் சங்கதேவ்.

புத்தி வந்தது அவருக்கு. புலியின் மீதிருந்து இறங்கி நேரே ஞானேஸ்வரின் காலடியில் விழுந்து "என்னை மன்னிக்க வேண்டும்" என்றார்.

"தாங்கள் பெரியவர் என் காலில் விழக்கூடாது. அபசாரம். அஷ்ட மகா சித்திகள் எல்லாம் அவசியமற்றவை. இறைவனை அடைய அவை தேவையல்ல. தவறான வழியில் கொண்டு செல்ல கூடியவை"
"நீங்களே என் கண் திறந்தீர்கள். என்னைச் சரியான பாதைக்கு வழிகாட்டி அருள வேண்டும்" என்று கெஞ்சிய சங்கதேவுக்கு "நீயே அவருக்கு வழிகாட்டு முக்தா" என்று சிறுமியிடம் சொன்னார் ஞானேஸ்வர்.

"இறை சிந்தனை, பகவான் பற்றிய கதைகள், நாம சங்கீர்த்தனம் - இவை மட்டுமே போதும் அவன் அருள் பெற" என்று முக்தாபாய் சங்கதேவுக்கு சொன்னது நம் காதிலும் விழட்டுமே!

  
The writer can be reached at: jksivan@gmail.com

2 comments:

  1. From: Swaminathan S [mailto:swami1947@gmail.com]
    Sent: Tuesday, January 29, 2013 7:58 AM
    To: jksivan@vsnl.com
    Subject:

    Dear sir
    I read all 15 pandurangan stories regularly.and your important messages.
    Now I am in US. I shall meet u after return to India.
    Kodi kodi punyam ungalukku
    Regards
    Swaminathan

    ReplyDelete
  2. From: K RAJENDRAN - FIN [mailto:KRAJENDRAN@bhelpem.co.in]
    Sent: Wednesday, January 30, 2013 12:41 PM
    To: 'jksivan'
    Subject: RE: moral stories pandurangan 16



    Dear Sir

    namaskarams.

    The vital series so much interesting and enjoyable like a t20 match.Your narration and simple way of elucidation creates interest and enthusiasm.we like it Very much.Thanks a lot

    K.Rajendran

    ReplyDelete