Translate

Thursday, 3 January 2013

ஆண்டாளும் தோழியரும் (5)
by J.K. Sivan


இந்த வருஷம் மார்கழி 19ம் நாள் (3.1.2012) ஒரு சிறந்த நாளாகும். இன்று திருப்பாவை இயற்றிய ஸ்ரீ ஆண்டாளின் நக்ஷத்ரமான பூரம். நாராயணன் அம்சமான திருப்பதியில் கண் கண்ட தெய்வமாய் அருளும் ஸ்ரீ வெங்கடாசலபதிக்கு இன்று புஷ்பாங்கி சேவை அவனை வணங்கி, இந்த மார்கழி 19ம் நாள் அன்று, ஆயர்பாடி சிறுமி ஆண்டாள் என்ன செய்தாள் என்பது நமது கதையின் இன்றைய பகுதி அல்லவா?
அந்த கிராம சிறுமிகள் கல்மஷமில்லாத தூய மனம் கொண்டவர்கள். உள்ளே சுத்தமாக இருப்பினும் புறமும் சுத்தமாக இருக்க யமுனை ஆற்றில் நீராடி விரதமிருந்து மனத்திலும் வாக்கிலும் கண்ணனே, நாராயணனே அவர்களின் திருநாமங்களே நிரம்பி வழிய, மாத முழுதும் தங்களை ஈடுபடுத்திகொண்டதே பாவை நோன்பு என்பது தெரிந்தது தானே. திரும்ப திரும்ப அந்த சிறு கிராமத்தில் எங்கு செல்ல முடியும். நந்த கோபன் மாளிகைக்கு, இன்று காலையும் வந்து விட்டார்கள். எதற்கு? வழக்கம் போல் துயிலேழுப்பவே! நப்பின்னை பிராட்டியுடன் தலைவன் உறங்குகின்ற அழகை எப்படி அந்த பெண் விவரிக்கிறாள் பாருங்கள்.
குத்து விளக்கு - சாதாரண பெட்ரூம் விளக்கோ அகலோ அல்ல. பஞ்ச பூதங்களையும் காத்தருளும் பரமன் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கொளியில் நறுமண அகில் புகை கமகமக்க சப்ர மஞ்ச கட்டிலிலில் அருகே நப்பின்னை உறங்க தானும் உறங்கிக் கொண்டிருக்கிறான். மெதுவாக ஆண்டாள் கதவை தட்ட நப்பின்னை விழித்து கொண்டு கிருஷ்ணனை பார்க்கிறாள். யார் முதலில் எழுந்து கதவை திறப்பது? வெளியே ஆண்டாள் குரல் கேட்கிறது.

ஹே துளசியும் வண்ண,மணமிக்க மலர்களும் மார்பில் புரள நப்பின்னை அருகிருக்க துயில்பவனே, கொஞ்சம் வாயை திறந்து அருள்வாயா? மையிட்ட கண்களால் வையம் குளிர வைக்கும் நப்பின்னையே, கொஞ்சம் அவனை எங்களுக்காக வெளியே விடுவாயா? நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். எங்கே அவன் வாய் திறந்து இதோ வருகிறேன் என்று சொல்லி எழுந்து வந்துவிடுவானோ என்ற சந்தேகத்தில் அவனை ஒரு கணமும் பிரிய விரும்பாத நீ நாங்கள் அவனை எழுப்ப விடமாட்டாய் என்று ரொம்ப நன்றாகவே எங்களுக்கு தெரியும் நீ செய்வது தகுமா, ஞாயமா, முறையா?? இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.”

“உன்னருளும் அவனருளுடன் எங்களுக்கு கிடைத்து எங்கள் பாவை நோன்பு பலனளிக்க செய்வது உன் தயவால் தான் தாயே!”
அவளை வணங்கிவிட்டு அந்த பெண் கூட்டம் அன்றைய நோன்பு முடிந்து வீடு திரும்பியது. நாளை அந்த பெண்களும் நானும் காலையில் உங்களை துயில் எழுப்பும் வரை காத்திருக்கவும்

The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment