Translate

Thursday, 24 January 2013

விட்டலன் கதை 6

ராமனும் ரங்கனும்
by J.K. Sivan
சமர்த்த ராமதாசரை பற்றி நீங்கள் தெரிந்திருந்தால் நிறைய ஆன்மீக விஷயங்களை படித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இவர் சிவாஜி மகாராஜாவின் குரு.சுவாமி துக்காராமை பற்றி நிறைய இப்போது படிக்கிறீர்களே அவரும் சமர்த்த ராமதாசரும் சம காலத்தவர்கள். ராமதாசர் என்ற பெயரிலிருந்தே அவர் ராம பக்தர்,அதனால் ஆஞ்சநேய பக்தர் என்று விளங்கும். சிறு பையனாக இருந்தபோதே ஸ்ரீ ராமர் அவருக்கு காட்சி தந்திருக்கிறார் என்றால் பாருங்களேன். "ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்" என்ற தாரக மந்திரத்தை 13 லக்ஷம் உச்சரித்து நாமஜபம் பண்ணி ஸ்ரீ ராமனே அவருக்கு நாசிக் என்ற ஊரில், கோதாவரி நதிக்கரையில் காட்சி தந்திருக்கிரார்.
ஒரு பெண்ணுக்கு "தீர்க்க சுமங்கலி பவ" என்று ஆசிர்வதித்த பின் அவள் கணவன் இறந்துவிடஅவள் அவரிடம் ஓடி வந்து முறையிட, கமண்டலத்தில் ஜலம் எடுத்து ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்" மந்திரம் சொல்லி அவன் உடலின் மேல் தெளிக்க அவன் உயிர் பெற்றான் என்று ஒரு கதை உண்டு . நமது பாண்டுரங்கன் கதைக்கு வருவோம். ராமதாஸ் பண்டரிபுரம் வந்ததில்லை பாண்டுரங்கனை பார்த்ததில்லை! அந்த ஊர் எங்கிருக்கு என்றுகூட தெரியாது.

அன்று சற்று லேசான மழை. தனது ஆஸ்ரமத்தில் ராமதாஸ் ராம நாம ஸ்மரணையில் இருக்கும்போது நிறைய கூட்டமாக யாரோ வந்தனர். யார் என்று வெளியே சென்று பார்த்தபோது ஒரு வயதான பிராமணர் முதலில் நிற்க அவர் பின்னாடி நூற்றுக்கணக்கான பேர். சிறிது மழை விடும் வரை தங்க இடம் கேட்க ஆஸ்ரமத்தை திறந்து உள்ளே விட்டார் அவர்களை. பிராமணர் சிறந்த ஞானி வேத சாஸ்திர விற்பன்னர் ஆகவே ராமதாசருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

"நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டு உங்களை பார்த்தால் சாக்ஷாத் ராமனை தர்சித்தது போல் ஆகுமே என்று உங்களை தேடி வந்தோம்" "நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்?"
"உத்தர காசி. இவைகள் அனைவரும் பல பல இடங்களிலிருந்து எங்களோடு சேர்ந்து கொண்டவர்கள் அனைவருமாக இப்போது பண்டரிபுரம் செல்கிறோம். பாண்டுரங்கனை தரிசித்து அருள் பெற"
"நீங்கள் எங்களுக்கு எப்படி பண்டரிபுரம் செல்லவேண்டும் என்று சொல்ல முடியுமா?"
"சுவாமி நான் சென்றதில்லை. வழி தெரியாதே."
"நான் அழைத்து சென்றால் நீங்களும் வாருங்களேன் கிருஷ்ணாவதாரம் செய்த ராமன் தானே அந்த பாண்டுரங்க விட்டலனும்" ஏதாவது மறுப்பு உண்டோ?"
"ஒன்று மில்லை. ராமனை பாண்டுரங்கன் உருவில் காண எனக்கு விருப்பம் தான். உங்களோடு நானும் புறப்படுகிறேன்"

பலநாட்கள் பிரயாணம் மிக அற்புதமாக ரசமாக அமைந்தது ராமதாசருக்கு. பிராமணர் அனைத்தும் கற்ற ஞானி அல்லவோ! கர்ணாம்ருதமாக இருந்தது அவர் பேச்சு. பண்டரிபுரம் அடைந்து அனைவரும் கோவில் உள்ளே சென்றனர். பிராமணர் ராமதாசரை அழைத்து சந்நிதியில் நிற்க வைத்து மாயமாக மறைந்தார். என்ன ஆச்சர்யம் இது! என்று ராமதாசர் வியக்க மற்றொரு அதிசயமும் காத்திருந்தது அவருக்கு. அவரைதானே நேரில் பிராமணராக சென்று அழைத்து வந்த விட்டலன் உள்ளே செங்கலில் நின்று ஸ்ரீ ராமனாக அவருக்கு சிரித்து கொண்டே காட்சியளித்தான். பக்தர்களுக்காக அந்த பரந்தாமன் எந்த வேஷமும் போடுவான் எந்த நாடகமும் ஆடுவான். பக்த ஜன பிரியன் அல்லவா?


The writer can be reached at: jksivan@gmail.com 

No comments:

Post a Comment