Translate

Tuesday, 29 January 2013

விட்டலன் கதை 11

ஞான தீபம்
by J.K. Sivan 
Sant Gyaneshwar
இன்றைய குட்டி கதை இதற்கு முந்திய குட்டிகதையின் உடன் பிறப்பு என்று கூட கொள்ளலாம். எனினும் ஒரு சிறிய பூர்வ பீடிகை கொடுக்கிறேன்.
**********
விடோபா என்கிற சந்நியாசி விட்டலன் ஆணையின் படி ருக்மணியை மணந்து வெகுகாலம் கழித்து அவர்களுக்கு ஸ்ரீ ராமானந்தர் அருளால் 4குழந்தைகள் பிறந்தன. அவை திரி மூர்த்திகளான ஸ்ரீ பிரம்மா விஷ்ணு மகேஸ்வரர்கள் மற்றும் பார்வதி தேவி அம்சமானவை. அவர்கள் பெயர் நிவ்ரிதி தேவ், ஞானேஸ்வர், சோபன், முக்தா பாய். இந்த நான்கு குழந்தைகளையும் விட்டு விடோபாவும் ருக்மணியும் கங்கை நதியில் மூழ்கி பிறவியை முடித்துகொண்டனர்.
********
எத்தனையோ இன்னல்களுக்கு உட்பட்டு இந்த குழந்தைகள் வளர்ந்தனர். அவர்கள் வயது 6, 5, 4, 3. சன்யாசியின் குழந்தைகள் என்று ஊர் அவர்களை புறக்கணித்தது. யாரும் உதவ வில்லை. கிடைத்தால் உணவு இன்றேல் பட்டினி. தாங்கள் பிராமணர்கள் ஆயிற்றே. உபநயனம் கண்டிப்பாக நடக்கவேண்டுமே என்று அந்த 3 பிள்ளைகளும் பிரயாசை பட்டும் பயனில்லை. விஷ்ணு அம்சமான ஞானேஸ்வர் பல பிராமணர்கள் உதவியை நாடியபோது அவர்கள் சிரித்தனர். “நீ பிராமணன் என்று யார் சொன்னா? சன்யாசிக்கு குலமேது கோத்ரமேது? உனக்கு எதற்கு உபநயனம் போய் வா" என்ற அவர்கள் தலைவன் "போனால் போகிறது என்று உனக்கு ஒரு வழி சொல்கிறேன் கேள். ரெண்டு மூணு ஊர் தாண்டி பிரதிஷ்டானபுரம் என்ற ஊரில் நிறைய சாஸ்திரம் படித்த பண்டிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை கேட்டு பூணல் போட்டு வைக்கலாம் என்று கைப்பட கடிதம் வாங்கிவா. பிறகு போட்டு விடுகிறோம்' என்றான்.

குர்ம தாசர் கதையில் பைதான் என்கிற ஊர் பற்றி சொன்னேனே அந்த ஊருக்கு தான் பிரதிஷ்டான புரம் என்று அப்போது பெயர். அந்த ஊர் சென்று பண்டிதர்களை கேட்டபோது ஞாநேஸ்வரிடம் " உன் கோத்ரம் எது?" என்று கேட்டனர். " ஒருவருடைய கோத்ரம் தெரியாவிட்டால் குரு தன்னுடைய கோத்ரத்தின் பேரிலேயே உபநயனம் செய்து வைக்கலாம் என்று சாஸ்த்ரம் சொல்கிறதே"
"பரவாயில்லையே, சின்ன பையனாக இருந்து சாஸ்திரம் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கிறாயே" அது போகட்டும். நீ பிராமணனா என்று தெரிந்தால் தானே உபநயனம் செய்து வைக்க முடியும் ?

ஞானேஸ்வர் ஒருவன் எந்தெந்த நிலைகளை கடந்த பின்னர் பிராமணனாக முடியும் என்பவற்றை விளக்கி தாங்கள் அந்நிலைகளை கடந்ததை தெரிவித்தார். உபநயனம் என்பது ஒரு நியமம் என்றும் விளக்கினார். பிரமத்தை அறிந்து உணர்ந்தவனே பிராமணன் என்றால் நாங்கள் அதை உணர்ந்து அனுபவித்தவர்கள்” என்பதையும் விளக்கினார்.

"நீங்கள் தான் பிரம்மத்தையே உணர்ந்தவர்களாயிற்றே இந்த உபநயனம் போன்ற சடங்குகள் எதற்கு உங்களுக்கு?"
" இது ஒரு தர்மம், ஞாயம்; இதையும் மதிக்கவேண்டியது மனுஷ்ய கடமை"
"இந்த சிறு வயதில் உங்களுக்கு எப்படி பிரம்ம ஞானம் வந்தது?"
"எங்களுக்கு மட்டும் இல்லை. உலகில் எல்லோருக்கும் இது எளிது. எங்கும் நிறை இறைவனை உணரும் தகுதி பெற்றால் எவருக்கும் இந்த ஞானம் கிட்டும்"

ஞானேஸ்வர் இதை சொல்லும்போது அந்த பக்கம் ஒரு எருமை மாடு போனது.
" இதோ இந்த எருமை மாட்டிலும் பாண்டுரங்கள் இருக்கிறான்"

பிராமணர்களுக்கு கோபம் மேலிட்டது இந்த பையன் ரொம்ப பேசுகிறானே.
"என்னடா சொல்கிறாய்? இந்த எருமை மாட்டில் பாண்டுரங்கன் உள்ளானா? அப்படியெனில் உன்னை போலவே இந்த எருமையும் வேதாந்தம் பேசுமோ?" என்று சிரித்தனர்

"பாண்டுரங்கா, இந்த மனிதர்களுக்கு புருஷ சுக்தம் சொல்லி கொடு அப்பா" என்று ஞானேஸ்வர் எருமையை தடவி கொடுக்க அதன் வாயிலிருந்து வேத மந்த்ரம் ஒலித்தது!
பிராமணர்கள் சிலையாயினர்.

"மகானுபாவ!!, ஜீவன் முக்தனான உனக்கு உபநயனம் செய்விக்கும் அருகதை எங்களுக்கில்லை"
அந்த சிறுவர்கள் எருமையுடன் யாத்ரை தொடங்கினர்.
இன்னும் எத்தனையோ அற்புதங்கள் அதிசயங்கள் எல்லாம் இந்த குட்டிகதைகளில் வரட்டுமே உங்கள் வரவேற்புடன்!

 


                                                                       The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment