Translate

Thursday, 3 January 2013

ஆண்டாளும் தோழியரும்   ....   (4)
by J.K. Sivan

சில்லென்று வீசும் இனிய குளிர் காற்றில் தன் சினேகிதிகளோடு ஆண்டாள் போகின்றாள் மற்ற பெண்களையும் எழுப்பி நீராட. இன்று மார்கழி 16 நாள். இதுவரை விடாது அந்தப் பெண்கள் அன்றாடம் யமுனையில் நீராடி விரதமிருந்து,உள்ளும் புறமும் தூய்மையோடு கிருஷ்ணனையும் நாரயணனையும் அருள் வேண்டுகிறார்கள்.
இப்போது அவர்கள் நீராடி நோன்பிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஆண்டாள் இப்போ எங்கேடி போறோம்?”
“நந்தகோபன் அரண்மனை போன்ற வீட்டுக்கு.” வாசலில் காவலாளி வேலோடு நின்றுகொண்டிருக்கிறான்.
“சிறுமிகளா! இந்நேரத்தில் இங்கு என்ன வேலை உங்களுக்கு?”
“அய்யா வாயில் காப்போனே! இந்த உயர்ந்த மணிகள் பொருத்திய பெரிய கதவைக் கொஞ்சம் திறக்கிரீர்களா?”
“எதற்கு?”
“உள்ளே இருக்கும் உங்கள் தலைவன், எங்கள் மனம் நிறைந்த அந்தக் கண்ணன் நேற்று எங்களை இங்கே வரச்சொல்லி அனுமதி கொடுத்ததால் அவனை தரிசனம் செய்து அருள் ஆசி பெற வந்துள்ளோம். இது அவன் நேரம். நாங்கள் உள்ளே சென்று அவனை அவன் ஆயிரநாமங்களை சொல்லி துயிலெழுப்ப விழைகிறோம். குறுக்கிடாது, தயவு செய்து கதவை மட்டும் திறவுங்களேன்?”

மறு பேச்சின்றி வாயில் காப்போன் மணிக்கதவம் திறக்க உள்ளே சென்றனர் அந்த ஆயர்பாடி சிறுமிகள். அந்த பெண்கள் எப்படி கண்ணனை துயிலெழுப்பினர் என்று மறுநாளுக்குண்டான பாசுரம் படித்தாக வேண்டும்
இந்த துயிலெழுப்பும் பாசுரம் நமது குட்டிகதையில் மார்கழி 17வது நாளன்று இடம் பெறுகிறது.

உள்ளே சென்ற ஆண்டாளும் மற்ற சிறுமிகளும் நேராக நந்தகோபன் அறைக்கே சென்றார்கள். “ஐயா, மகானுபாவரே! நந்தகோப பிரபுவே! நீங்கள் அல்லவோ எங்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் செய்பவர், உம்மாலல்லவோ நாங்கள் குடி நீர் பெறுகிறோம், உங்கள் தயவால் அல்லவோ எங்களுக்கு உடுக்க உடை கிடைக்கிறது. உலகில் வாழ தேவையான அளிக்கும் பெருந்தகையே! உங்களை துயிலெழுப்ப நாங்கள் பாக்கியம் செய்தவர்கள். எண்களின் தாய் அம்மா யசோதை, நீ அல்லவோ எங்கள் இல்லங்களின் ஒளி விளக்கு! எங்கள் பசுக்கூட்டமே, அவற்றை கண்காணிக்கும் இந்த ஆயர் பாடி கோபர்கள் மற்றும் வீட்டில் உள்ள கோபியர் எல்லோருமே உங்கள் அன்பாலும் பாசத்தாலும் அன்றோ கட்டுண்டு இருக்கிறோம். துயில் எழுந்திரு தாயே!”
"எங்கள் உயிராய் விளங்கும் ஹே கிருஷ்ணா! கடவுளுக்கெல்லாம் கடவுளே! தெய்வமே! துயிலெழு. நீ உறங்கினால் உலகமே உறங்கிவிடுமே! எங்கள் தலைவனின் சகோதர அழகிய வீர பலதேவா! நீயும் உன் சகோதரனும் எழு. எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் நோன்பு சிறக்க உங்கள் அருள் வேண்டும்."
இவ்வாறு வேண்டி ஆண்டாளும் சிறுமிகளும் பாடினர். அந்தப் பாடல்களின் பெயர்கள் எனக்கு மறந்து போய் விட்டது!

இந்த நந்தகோபன் குமரன் கதையில் இன்று (2.1.2013) நாம் இருப்பது நந்தன வருஷம். நாராயணனின் கலியுக தோற்றமாகிய திருப்பதி வெங்கடேசனுக்கு, இன்று சஹாஸ்ரகலசாபிஷேகம் நடப்பது மார்கழி 18வது நாள்.

நந்தகோபன், யசோதை, கிருஷ்ணன் பலராமன் ஆகியோரை எல்லாம் துயிலெழுப்பும் வேளையில் ஈடுபட்ட ஆண்டாள் தன் தோழியருடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள், இன்னும் யாரை விட்டு விட்டேன் துயிலெழுப்பாமல் என்று. அப்போது தான் நப்பின்னை தெரிகிறாள். “அடடா இவளை விடலாமா” என்று அவர்கள் அனைவரும் அவளை ஸ்தோத்ரம் செய்கிறார்கள்.
"அழகிய நப்பின்னையே! கமகமக்கும் தைல வாசனையோடு மணப்பவளே! நந்தகோபன் மருமகளே, உன் மாமனார் எப்படிப்பட்டவர் தெரியுமா உனக்கு? அவரது செல்வங்கள் கணக்கிலடங்காது. அனேக யானைகளையும் உடையவர். எதிரிகள் அவரைக்கண்டு தான் அஞ்சி ஓடுவர். அவர் அஞ்சியதாக சரித்திரமே இல்லை. வெளியே சேவல்கள் குரல் கொடுத்து பொழுது விடிந்ததை பறை சாற்றுகிறதே. அதோ பார் மல்லிப் பந்தல் முழுதும் குயில் கூட்டம் எண்ணமாக அவை பாடி துயிலெழுப்புகின்றன தினமும். பந்து விளையாடும் பருவப் பெண்ணே, உன் கைகளின் வளையோசை கலகலவென உடனே வந்து கதவை திற! உள்ளே வந்து ஆசி பெறுகிறோம். எங்கள் நோன்புக்கு உன் ஆசிர்வாதமும் தேவையம்மா!”

             
The writer can be reached at: jksivan@gmail.com

No comments:

Post a Comment