ஆண்டாளும் தோழியரும்
(9)
by J.K. Sivan
முன்னேற்றம் என்பது ஒரேயடியாக தாவுவது அல்ல. படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்வது. இந்த சிறு பெண் ஆண்டாள் எப்படி முதலில் மற்ற
சிறுமியர்களை அழைத்தாள். கூட்டம் போதவில்லை என்று வராதவர்கள் வீடெல்லாம் சென்று அவர்களை தட்டிஎழுப்பினாள். அனைவரையும் ஒன்று சேர்த்து தினமும் குளிர்ந்த நீரில் நீராடவைத்து அவர்கள் அனைவரும் பாவை நோன்பு நோற்க வைத்தாள். பின்னர் நந்தகோபன் மாளிகை சென்றாள். அவனை எழுப்பிய
தோடல்லாமல் யசோதையை, பலராமனை, நப்பின்னையை எழுப்பினாள். எழுப்பியும் எழுந்திராத கண்ணனையும் எழுப்பிவிட்டாள். கிருஷ்ணனை அவன் கட்டிலுக்கருகே நின்று அவர்கள் எல்லோரும் அவனது திவ்ய தரிசனம் கண்டு, அவனது க்ருபா கடாக்ஷம் வேண்டுமென்று, பார்வை தங்கள் மேல் விழுந்து பாபங்கள் அகலவேண்டுமென்று சரணாகதிஅடைந்தனர் என்பது இதுவரை
கதை. இதற்குள் மார்கழி 22நாள் கழிந்துவிட்டதே!!
இன்று மார்கழி 23ம் நாள். கிடைத்த சந்தர்ப்பத்தை விடுபவளா அந்த சிறுமி ஆண்டாள்! தட்டி கொடுத்து வேலை வாங்குவதில் கில்லாடி அல்லவா அவள்!
"கிருஷ்ணா, உன்னைப் பார்க்கும்போது எனக்கு என்ன மனதில் தோன்றுகிறது தெரியுமா? ஒரு அடர்ந்த வனத்தில் பெரிய மலைஅடியில்இயற்கையாகஅமைந்த ஒரு பெரும் குகையில், தனது ராணியுடன் மழை காலத்தில் அடக்கமாக உறங்கும் சிங்க ராஜா மழை கொஞ்சம் விட்டதும், தன் நெருப்பு போன்ற சிவந்த கண்களை சுழற்றி அடர்ந்த பரந்த பிடரியை உலுக்கிவிட்டு, தலையைத் தூக்கி வெளியே அமர்த்தலாக வந்து கம்பிர நோட்டம் விடுவது, பிறகு ராஜ நடை நடந்து வெளியே வந்து ஒரு பாறை மேல் அமர்ந்து சிம்மக்குரலில் கர்ஜனை செய்து காட்சியளிப்பது போல் உள்ளது. காயாம்பூ வண்ண மலரணிந்த கண்ணா, அந்த சிங்கத்தை போல் தலை உயர்த்தி, எழுந்து ராஜ நடை போட்டு இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து “பெண்களே, எதற்கு வந்து என்னை எழுப்பினீர்கள் ,என்ன வேண்டும்" என்று நீ கேட்டாயானால் நாங்கள் கேட்காமலேயே எங்களுக்கு உன் அருள் உண்டு, எங்கள் நோன்பின் பயன் அடைந்தோம்என்று அர்த்தமாக எடுத்து
கொள்வோம். எங்கள் மீது உன் கருணையை தந்து ரட்சிக்க வேண்டும்” –
நமக்காகவும் தான் ஆண்டாள் இதைவேண்டுகிறாள். இந்த பாசுரத்தில்ஆண்டாள் கிருஷ்ணனை நரசிம்ஹமூர்த்தியாகப் பார்க்கிறாள்.,தினமும் நம்பர் விளையாட்டு விளையாடுவோமே!! இன்று 23ம் நாள் விசேஷத்தை பாருங்கள் 2+3=5. 5வதுநக்ஷத்ரம் மிருக சீர்ஷம். மிருகம் இந்த இடத்தில் சிங்கத்தை குறிக்கிறது. நரசிம்ஹனும் நாராயணனின் அவதாரம் தானே. தவிர இன்று ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு உத்சவம். 16 வண்டி சப்பரத்தில் பவனி. ஊர்வலத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பி நாளை மார்கழி 24 அன்று சந்திப்போம்!
No comments:
Post a Comment