Translate

Thursday 29 November 2012

வேணுகானம்
by J.K. Sivan



இது அன்றாடம் நடப்பது. ஆயர்பாடி சிறுவர்கள் சேர்ந்தே போவர், வருவர் எங்குமே. எப்போதும் உற்சாகமாக இருக்கும் அவர்களைப் பார்த்துஆயர்பாடி மக்கள் அனைவரும் பெருமிதம் அடைவார்கள்.
இத்தனை மகிழ்ச்சி ஆரவாரம் எல்லாம்.அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்பதன் ரகசியம் அனைவரும் அறிந்ததே.கிருஷ்ணன் என்கிற சிறுவன் தான் அவர்களை இவ்வாறெல்லாம் ஆட்டிப் படைக்கிறவன். அந்தச் சிறுவனே அவர்களுக்குத் தலைவன். பசுக்களும் கன்றுகளும் கூட மறக்காமல் அன்றாடம் ஒருமுறை கூட்டத்தில் மற்ற சிறுவர்களிடையே கண்ணன் இருக்கிறானா என்று முதலில் பார்த்துகொண்டு தான் சந்தோஷமாக இரை தேடச் செல்லும். கன்றுகள் தாவி தாவிக் குதித்து ஓட தாய் பசுக்கள் பெருமிதமாக மிதந்து செல்லும். கண்ணன் ஏதாவதொரு பசுவின் அருகில் தான் நிற்பான் கூடவே அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு நடப்பான் அவன் இடையில் இருக்கும் சிறு மூங்கில் குழல் பகல் பூரா சில சமயம் அந்த காட்டு பிரதேசத்தில் அவனது வேணு கானத்தைப் பரப்பும். சில சமயங்களில் சிறுவர்கள் யமுனை நதியில் குதித்து நீச்சல் அடிப்பார்கள் விளையாடுவார்கள் . சில சமயங்கள் கூடி பேசி, பாடி ஆடுவார்கள். கண்ணன் வேணுகான நேரங்களில் பசுக்கள் எல்லாம் வயிறு நிரம்ப உண்டு ஒன்றாக கூடி அவனருகே மர நிழல்களில் கூட்டமாக அமர்ந்து அசை போட்டுக்கொண்டு கண்மூடி தலையாட்டி கண்ணனின் குழலிசையை கேட்கும்.
ஒரு கன்று குட்டி தாயைக் கேட்டது: "அம்மா உனக்கு என்னைப் பிடிக்குமா கண்ணனின் குழல் இசை பிடிக்குமா?”     
"ஏன் இரண்டுமே பிடிக்கும்”!
" ரெண்டுலே எது ரொம்பப் பிடிக்கும்”?
"உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்க ரொம்பப் பிடிக்கும், கண்ணன் குழலிசை கேட்டுக்கொண்டே இருக்க ரொம்பப் பிடிக்கும்" என்று பசு சொன்னது. ஒரு கன்றுக்குட்டி மற்றொரு ஆயர்பாடி சிறுவன் ஊதிய குழலைக் கேட்டது.
"ஏன் உன்னிடம் கண்ணன் ஊதும் குழலின் ஓசை வரவில்லை”? அந்தக் குழல் சொன்னது: "நானும் கண்ணன் கையில் இருக்கும் மூங்கில் குழலும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் தான். என்னை இந்தச் சிறுவன் கண்ணன் போல் உபயோகிக்கவில்லை"
இதை கேட்ட அந்தச் சிறுவன் தன் குழலை கண்ணனிடம் கொடுத்து அவன் குழலை வாங்கி ஊதினான். ஓசையில் எந்த மாற்றமும் இல்லை. அப்போது கண்ணனின் குழல் சொல்லியது:
", சிறுவா, நான் மாற்றமே இல்லாத மரத்துண்டு தான். நீ ஊதினால் நான் அதுவாகவே இருக்கிறேன். கண்ணன் என் மீது அவன் காற்றைச் செலுத்தும்போது எனக்கு ஜீவன் கிடைத்து அவன் அருளால் அவனின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறேன். ஆகவே தான் கண்ணன் ஊதும்போது நான் அவன் ஜீவ நாதமாகிக் காற்றில் கலக்கிறேன்".
ஆயர்பாடி பூலோக சுவர்க்க பூமியாக திகழ்ந்ததில் என்ன ஆச்சரியம்?
The writer can be reached at: jksivan@gmail.com
 

No comments:

Post a Comment