Translate

Sunday 11 November 2012

 

Krishna Kills Narakasura – The Story of Deepavali
by J.K. Sivan
“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே!” -- இதை யார் சொல்லியிருந்தாலும் அதை முற்றிலும் தவறு என சொல்வதா வேண்டாமா என்பது நமது இப்போதைய ஆராய்ச்சி அல்ல. நேரமும் இல்லை. ஏனெனில் வெகு வேகமாக கண்ணன் தேரை ஓட்டிகொண்டிருக்கிறான்.
இடியோசை போன்ற பிளிறலுடன் நரகாசுரனே எதிரே வருகிறான். பயங்கர கோபமும் ஆத்திரமும் அவனுக்கு!!. ஆனானப்பட்ட முரன் கூட கொல்லப்பட்டானே. மலைபோல அல்லவா அவனை நம்பியிருந்தோம்? கஷ்டங்கள் தனித்தே வருவதில்லையா?” நக்ரதுண்டி வெறுங்கையுடன் திரும்பியதல்லாமல் அவமானப்பட்டு மல்லவா அழுதுகொண்டு வந்தாள்!. இன்றோடு கிருஷ்ணன் ஒழிந்தான்! இந்த எண்ணங்களுடன் நரகன் யுத்தத்தில் இறங்கினான்.

நரகாசுரன் படைகளும் த்வாரகை வீரர்களும் அங்கங்கு மோதிக்கொண்டிருக்க நரகன் கிருஷ்ணனையே குறி வைத்தான். அம்புகள் மழையென பொழிந்தன. யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பு, வீரர்களின் ஆக்ரோஷ சப்தம், இடியென முழங்கும் கதை மோதல், வாட்கள் உராய்வு, ரத்தமும் வலியும் பெருக வீரர்களின் மரண கூச்சல், மேலே பருந்துகளின் சப்தம், இவற்றுக்கிடையே கிருஷ்ணனின் தேர் வளைந்து நெளிந்து சென்று நரகனின் தாக்குதலை, அம்புகளை தவிர்த்தது. கிருஷ்ணனின் சரங்களும் குவிந்து சென்று நரகனை வாட்டின. நேரம் சென்றதே தவிர வெற்றி தோல்வி எதுவும் சொல்ல முடியாமல் நீண்டது. சத்யபாமா பாமா தேர் ஓட்டுவதில் அனுபவசாலி என நிரூபித்தாள் தேர் ஓட்டினாலும் அவ்வப்போது கிருஷ்ணனுக்கு ஆயுதம் தேர்ந்தெடுத்து உதவினாள். கிருஷ்ணனின் உடலிலும் வியர்வையும் ரத்தமும் ஆறாக பெருகி தேரில் வழிந்தது. நரகன் ரத்தத்திலேயே குளித்து கொண்டிருந்தான். மாலையும் வந்துவிட்டது. இரவு சற்று நேரத்தில் கவிந்து வரும். இரவில் அசுரர்களுக்கு பலம் அதிகரிக்கும். கிருஷ்ணனுக்கு திடீரென்று அந்த முடிவு எடுக்கவேண்டும் என தோன்றியது. ஒரு இளம் சிரிப்பு அவன் முகத்தில் மின்னிற்று. “எனக்கும் வயதாகிவிட்டதே! மறந்தே போனேன். சிறு கதையை தொடர்கதையாக்கி விட்டேன்!”
“பாமா! தேரை யானை படைகள் பின்னால் செலுத்து. தேரை நிறுத்து. நீ தேர் தட்டுக்கு வா. நான் தேரை செலுத்துகிறேன். இந்தா நான் கொடுக்கும் இந்த பாணங்களை நரகனின் மேல் விடாது செலுத்து

மீண்டும் கிருஷ்ணனின் தேர் கண்ணில் தென்பட்டதும் நரகன் துரத்தினான். கிருஷ்ணனும் தேர் செலுத்திக்கொண்டே எப்படி அம்புகளை எய்ய வேண்டும் என்று வாய் ஓயாமல் பாமாவுக்கு சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வாறே பாமாவும் சரமாரி பொழிந்தாள். முதலில் நரகனின் குதிரைகள் மாய்ந்து விழுந்தன. கொடி அறுந்து விழுந்தது. அதற்கும் முன்பாக நரகனின் கிரீடமும் போட்டி போட்டுக்கொண்டு உருண்டு விழுந்தது. அவனது ரதத்தின் சக்கரங்களை ஓடித்தான் கிருஷ்ணன். ஓட முடியாமல் வில்லின்றி நரகன் தேர்க்காலில் விழுந்தான் நரகாசுரனை வாட்டியது பாமாவின் கணைகள்!. கிருஷ்ணனின் சக்ராயுதம் எய்து நரகனின் மார்பை இரண்டாக பிளந்தாள் பாமா.
அரை உயிருடன் தடுமாறும் வார்த்தைகளில் நரகன்கிருஷ்ணா!, நீ ஒரு பேடி. ஒரு பெண்ணை முன் நிறுத்தி யுத்தம் செய்தாய்,! உன்னால் என்னை ஜெயிக்க முடியாதல்லவா?"

“நரகா, நீ விரும்பியது அவ்வாறே அல்லவா? நீ கேட்டபடியே தான் நான் உன் முடிவை தந்தேன்!” “வரம் கேட்பதும் பெறுவதும் எளிதல்ல. கடும் தவம் செய்து பெற்றதை விரயம் செய்து உன் அழிவை நீ தேடிக்கொண்டாய்! ஆனால் ஒன்று நிச்சயம். உன்னுடன் யுத்தம் செய்ய நான் மிகவும் பிரயாசை பட வைத்தாய். அப்போது தான், ஒரு பெண்ணால் மட்டுமே உன் முடிவு என்று நீ கேட்டு பெற்ற உன் வரம் நினைவுக்கு வந்தது. என்னுடன் யுத்தம் செய்த நீ நற்கதியே அடைவாய்!”

“கிருஷ்ணா! உன் பெருமை உணர்ந்தேன். மனிதர்களே மறந்து தவறு செய்யும்போது நான் அசுரன் தவறு செய்வதில், மறந்ததில், என்ன ஆச்சர்யம்! இந்த நாளில் நம் யுத்தம் அனைவருக்கும் நினைவு வரட்டும் நான் உன் கையால் மடிவதில் எனக்கு பாக்யமே!”


“நரகா! உன் விதியை நீயே தேடிக்கொண்டாய். எனினும் நீ விரும்பியவாறே ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐப்பசி சதுர்த்தசி நரக சதுர்த்தசி என உன் பெயராலேயே தீபாவளி என ஒரு சிறந்த நாளாக மக்கள் கொண்டாடுவர். நமது யுத்தம் ஒரு சில வாண வேடிக்கைகளுடனும் (பட்டாசு) சரங்களுடனும், (தரை, விஷ்ணு) சக்கரங்களுடனும், ஒளியும் ஒலியுமாக நினைவுக்கு வரும் அனைவரும் இனிப்பு உண்டு வழங்கி, புத்தாடை உடுத்தி, கொண்டாடப்படும் நாள் ஆகும் திருப்தியா, நரகா!” என கண்ணன் அருளினான்.

 The writer can be reached on: jksivan@gmail.com

 

1 comment:

  1. Enjoyed reading!! Description was so realistic. Thanks!

    ReplyDelete